ராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்!

ப்ளூ ஜீன்ஸ் பேன்ட், கருப்பு டி ஷர்ட் உடன் வந்த கழுகாரிடம், ‘‘இதெல்லாம் ராகுல் காந்திக்குத்தான் நன்றாயிருக்கும்!’’ என்று கலாய்க்க, ‘‘காஸ்ட்யூமில் என்ன இருக்கிறது… கருத்துகள் எப்படி இருக்கின்றன என்பதுதான் முக்கியம். அதைவிடும்… ராகுல் காந்தியின் தமிழக வருகை, இளைய தலைமுறையிடம் ‘ஸ்கோர்’ செய்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, தி.மு.க கூட்டணி’’ என்றார் கழுகார்.

‘‘ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிதாக உற்சாகத்தைப் பார்க்க முடிய வில்லையே!’’

‘‘அதற்குக் காரணம் இருக்கிறது… கடந்த 13-ம் தேதி நாகர்கோவில் மட்டுமே வருவதாக முதலில் தகவல் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வருகிறார், எங்கு செல்கிறார் என்ற எந்த விவரங்களும் மாநிலத் தலைமைக்கே தெரியவில்லையாம். ராகுல் காந்தியின் வருகைக்கு முதல்நாள்தான், ‘கல்லூரியில் பேசப்போகிறார், அதுமுடிந்த பிறகு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யவும்’ என ராகுல் காந்தியின் உதவியாளர்களில் ஒருவரான பிஜு மூலம் தமிழகத் தலைமைக்குத் தகவல் வந்துள்ளது. ‘எப்போது கல்லூரியில் பேசினார்கள், யார் செய்த ஏற்பாடு?’ என எந்த விவரமும் தெரியாமல் அப்செட் ஆகிவிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி!’’

‘‘கல்லூரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யாராம்?’’

‘‘நீட்டா டிசோசா என்கிற மகிளா காங்கிரஸ் நிர்வாகிதான். இதற்காக அவர் ஏற்கெனவே சென்னைக்கு வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்துள்ளார். அது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாமல் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை ராகுல் காந்தியை வைத்து டெல்லியில் இருந்து ஒரு டீம் நடத்தி வருகிறது. கல்லூரி நிகழ்ச்சிக்கு கட்சியினர் யாரும் வரக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி விட்டார்களாம். ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்’ என்ற அடையாள அட்டையுடன் மாணிக் தாகூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்டோர் மட்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ராகுல் காந்தியின் சமூகவலைதளங்களில் ஒளிபரப்ப, டெல்லியிலிருந்து ஒரு டீம் தனியாக வந்துள்ளது.’’

‘‘ஓ… இவ்வளவு நடந்துள்ளதா?’’

‘‘ஆம். இந்த நிகழ்ச்சிக்கான செலவுகளை யார் ஏற்றுக்கொண்டனர் என்று தெரியவில்லை. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு லீ மெரிடியன் ஹோட்டலுக்குச் சென்ற ராகுல் காந்தி, தனது வழக்கமான காஸ்ட்யூமான குர்தாவை அணிந்துகொண்டு பிரஸ்மீட்டுக்கு வந்துசேர்ந்தார். பிரஸ்மீட் முடித்துவிட்டு, ஸ்டாலினுடன் சேர்ந்து விமானத்தில் கன்னியாகுமரி செல்லும் விருப்பத்தில் ராகுல் காந்தி இருந்தாராம். இதுகுறித்து டெல்லியிருந்து கே.எஸ்.அழகிரி யிடம் தகவல் சொல்லி யுள்ளனர். அந்தத் தகவல் சரியாக பாஸ் செய்யப்படவில்லையாம். நாகர்கோவில் பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அதிருப்தி எதிரொலித்தது என்கிறார்கள்.”

“என்னவாம்?”

“ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கான ஏற்பாட்டில் கலந்துகொண்ட இளங்கோவனும், குஷ்புவும் நாகர்கோவிலில் நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் ஆப்சென்ட். இருவரையும் கட்சித் தலைமை, ‘போட்டியிட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டதால்தான், அவர்கள் அப்செட் என்கிறார்கள்.”

“கழகங்களில் கூட்டணி பரபரப்பு முடிந்த பாடில்லையே?’’

‘‘இரண்டு கூட்டணிகளிலும் தொகுதி எண்ணிக்கை முடிவாகிவிட்டது. யாருக்கு எந்தத் தொகுதி என்பதில் இன்னும் முழுமையாக உடன்பாடு எட்டப்படாததால், தொகுதிகளை அறிவிப்பதில் தாமதமாகிறது. இரண்டு கட்சிகளிலும் பல கூத்துகள் அரங்கேறுகின்றன.’’

‘‘முதலில் அ.தி.மு.க–வில் நடந்தவற்றைச் சொல்லும்.’’

‘‘மார்ச் 13-ம் தேதி புதன்கிழமை நல்லநாள் என்பதால், அன்று கூட்டணியை இறுதிசெய்துவிடலாம் என்று அ.தி.மு.க தரப்பு கருதியது. அந்தத் தகவல் பியூஷ் கோயலிடமும் சொல்லப்பட்டது. அன்று மதியமே அவர் சென்னை வந்துவிட்டார். அ.தி.மு.க கூட்டணியில் கட்சிகள் இணைந்தபோதே யாருக்கு எந்தத் தொகுதி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், பேச்சுவார்த்தையில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றே அ.தி.மு.க நினைத்தது. பி.ஜே.பி-க்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை ஆகிய நான்கு தொகுதிகளுடன் அவர்கள் கேட்கும் ஐந்தாவது தொகுதி, பா.ம.க-வுக்கு கடலுார், விழுப்புரம், மத்திய சென்னை, அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஏழு தொகுதிகள் என்று பட்டியலிட்டிருந்தது.’’

 

‘‘தே.மு.தி.க–வுக்கு?’’

‘‘திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னையைக் கொடுக்கத் திட்டமிட்டிருந் தார்கள். இந்தப் பட்டியல், மதியமே தயாராகி விட்டது. மாலை ஐந்து மணிக்கு, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருமாறு கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்புவிடுக்கப் பட்டது. கூட்டணிக் கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தையை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் வைப்பதைவிட கிரவுன் பிளாசா ஓட்டலிலேயே நடத்திக்கொள்ளலாம் என முதலில் சொல்லியுள்ளார்கள். ஆனால், அ.தி.மு.க தரப்புதான் தலைமைக் கழகத்திலேயே நடத்தலாம் என்று கூறிவிட்டது.’’

‘‘ஓஹோ!”

‘‘மாலை ஐந்து மணிக்கு பெரிய கட்சித்  தலைவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஆனால், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி வரத் தாமதமானதால், ஒரு மணி நேரம் தள்ளிப்போய்விட்டது. அதற்கு முன்பாகவே ஒரு சிக்கல் உருவாகிவிட்டது. கிருஷ்ணகிரி தொகுதியை பா.ம.க., தே.மு.தி.க இரு கட்சிகளும் கேட்டு அடம்பிடிப்பதாக பியூஷ் கோயலிடம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடன் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் தனி அறையில் ஆலோசனை செய்தனர்.’’

‘‘சரி… பி.ஜே.பி–க்கு அந்த ஐந்தாவது தொகுதி எது என்று முடிவெடுத்துவிட்டார்களா?’’

‘‘நீலகிரி தொகுதியைத் தன் ஆதரவாளர் முருகனுக்கு எதிர்பார்த்துக் கேட்டிருக்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை. ராமநாதபுரம் தொகுதியை கருப்பு முருகானந்தத்துக்காக பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்க, ‘பொள்ளாச்சியில் வானதி சீனிவாசனை நிறுத்துங்கள்’ என்று அ.தி.மு.க தரப்பு சொல்ல, அதிர்ந்துபோய்விட்டதாம் பி.ஜே.பி தரப்பு.’’

“அதிரமாட்டார்களா பின்னே?’’

‘‘இந்தப் பிரச்னையால் பேச்சுவார்த்தை இழுபறியாகி தொகுதியை அறிவிக்காமல் தலைமைக்கழகத்திலிருந்து கிளம்பிவிட்டார்கள். அதன்பிறகு 10 மணிக்கு மேல், கிரவுன்பிளாசா ஓட்டலில் பியூஷ் கோயல் தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாம். ஆனால், மார்ச் 16-ம் தேதி அறிவித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார்களாம். அதற்கு முன் தி.மு.க-வின் அறிவிப்புகள் வர வாய்ப்பு உண்டு!’’

‘‘தி.மு.க அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்?’’

 

‘‘அந்தக் கூட்டணியில் கிட்டத்தட்ட அனைத்துக்கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு  முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியால்தான் இழுபறியானது. அதுவும் மார்ச் 14-ம் தேதி மாலை அந்தக் கட்சியுடன் தி.மு.க நடத்திய பேச்சுவார்த்தையில் கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில் ஐந்து தொகுதிகள் காங்கிரஸ் கட்சியே குறிப்பிட்டுக் கேட்டது. நான்கு தொகுதிகள் தி.மு.க தள்ளிவிட்டது. இன்னொரு விஷயம்… தி.மு.க-வுக்கு எதிராகக் களமிறங்கும் மூடில் மு.க.அழகிரி இருக்கிறாராம். இது தொடர்பாக, தன் ஆதரவாளர்களுடன் அவர் பேசிவருகிறாராம். அழகிரி தேர்தல் களத்தில் நின்றால், அவருக்கு ஆளும் தரப்பு மறைமுக ஆதரவு தரும் என்கிறார்கள்.”

‘‘கமல் கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகச் செய்தி வந்துள்ளதே?’’

‘‘கமல் தரப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கே சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிடத் துடித்தது. அதற்கு வாய்ப்பு இல்லாமல்போய் விட்டது. இறுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, கூட்டணிக்கு அழைத்துள்ளார்கள். வேல்முருகனிடம், நடிகை கஸ்தூரி இதுகுறித்து பேசியுள்ளார். ‘ஒரு நடிகையையும், பத்திரிகையாளரையும் வைத்துக் கூட்டணி பேசுவது கமலுக்கு அழகா?’ என்று டென்ஷன் ஆகிவிட்டாராம் வேல்முருகன். தினகரனிடம் கமல் மூன்று கேட்டதற்கு ‘ஒன்று’ என்று சொல்ல, அந்தப் பேச்சுவார்த்தையும் நின்றுவிட்டது’’ என்ற கழுகார், “பொள்ளாச்சி விவகாரத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரைத் தொடர்ந்து ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றபடி, சிறகுகளை விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: