Advertisements

வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்!

ற்சாகத்துடன் வந்த கழுகாரிடம் கைகொடுத்து, ‘‘கடந்த இதழுக்கு முந்தைய இதழில், ‘கூட்டணி பிஸினஸ், சொதப்பும் சபரீசன், சீறும் சீனியர்கள்!’ என்ற தலைப்பில் நீர் சொன்ன விஷயங்கள் வெளியாகியிருந்தன. அதைப் படித்துவிட்டு மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரும், ‘பூனைக்கு மணிக் கட்டியாகிவிட்டது’ என்று குஷியாகிவிட்டார்கள். பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடித் தீர்த்துள்ளனர்’’ என்று உற்சாகப்படுத்தினோம்.

 

புன்முறுவல்பூத்த கழுகார், ‘’கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் கட்சி மேலிடத்தில். ‘இந்த விஷயங்களை வெளியில் கசியவிடுவது யார் என்பதைக் கண்டறிய, சிலரை நியமித்திருக்கிறார்களாம். ஆனால், தவற்றை திருத்திக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை’ என்று பொருமுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தில் இருக்கும் சிலரே!’’

‘‘வேட்பாளர் தேர்விலும் கட்சிக்குள்ளே கடும் அதிருப்தி இருப்பது போலிருக்கிறதே!’’

‘‘உண்மைதான். ‘10 கோடி ரூபாய் இருப்பவர்கள் மட்டும்தான் எம்.பி சீட் கேட்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லிவிட்டாராம். ‘அப்படியென்றால், காலங்காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் என்னாவது?’ என்றுதான் குமுறுகிறார்கள். ‘89-ம் ஆண்டுக்கு முன்புவரை துரைமுருகன் வெறும் அம்பாஸடர் கார்தான் வைத்திருந்தார். இன்று ஏலகிரி மலையில் பங்களா, விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். விழுப்புரத்தின் பொன்முடி, சில ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பேராசிரியர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்று ஐந்து கல்லூரிகள், 500 ஏக்கர், பி.எம்.டபிள்யு தொடங்கி விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி என்று சீனியர்கள் பலரும் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக வாரிசுகளைக் களம் இறக்குகிறார்கள். ஆனால், எங்கள் அப்பா காலம் தொடங்கி, இன்னமும் நாங்கள் கட்சிக்கொடி கட்டுவதையும் கூட்டம் சேர்ப்பதையும் மட்டும்தான் செய்துகொண்டே இருக்கிறோம். கொள்கை… கொள்கை என்றே எங்களை வளர்த்துவிட்டார்கள். கொடி கட்டுவதற்கு நாங்கள்; கோடிகளைக் குவிப்பதற்கு அவர்களா?’ என்கிற குமுறல் குரல்கள் அறிவாலயத்திலும் எதிரொலித்துள்ளன!’’

 

‘‘நியாயமான குரல்கள்தானே!’’

‘‘அ.தி.மு.க-வில் வனரோஜா, மரகதம் குமரவேல் என்று சாதாரணத் தொண்டர்களைக்கூட தேர்தலில் போட்டியிட வைத்து, கட்சியிலிருந்து செலவழித்து ஜெயிக்க வைக்கிறார்கள். ஜெயலலிதாவே இதையெல்லாம் செய்தார். ஆனால், தி.மு.க-வில் சொந்தப் பணத்தைக் கொண்டு வந்தால்தான் சீட் என்கிறார்கள். தாயகம் கவி, மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம் என்று ஸ்டாலின் வீட்டுக் கிச்சன் கேபினட் சொல்பவர்களுக்குத் தான் முன்பு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. தற்போதும் அதுதொடர்கிறது. உதயநிதி சொல்லித்தான், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் என்றெல்லாம் சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளனர். அண்ணா காலத்து அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணனின் மகன் மணிமாறன் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்கிறார். ஆத்தூர் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கேட்கிறார். அவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, பொன்முடியின் மகனுக்குக் கொடுக்க நினைப்பது என்ன நியாயம்? என்கிறார்கள்.’’

‘‘பொன்முடி மகனுக்கு இத்தனை எதிர்ப்பா?’’

‘‘அவர் அங்கு நின்றால், தோற்பது உறுதி என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் 14 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கிச்சன் கேபினட் ஆதரவு காரணமாக, அவருக்குதான் சீட் என்பதை நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஸ்டாலினே சூசகமாகச் சொல்லிவிட்டாராம்!’’

‘‘துரைமுருகன் மகனுக்கும் சீட் உறுதிதானே?’’

‘‘வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கலாம் என்றுதான் ஸ்டாலின் நினைத்திருந்தாராம். ஆனால், பல மாதங்களுக்கு முன்பிருந்தே லாகவமாகத் தனது அரசியல் அறிவைப் பயன்படுத்தி, அந்தக் கட்சியே ராமநாதபுரம் தொகுதியை வேண்டி விரும்பி வாங்கிக்கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டாராம் துரைமுருகன். கடந்த தேர்தலின்போதே மகனுக்கு சீட் கேட்டுத் தராததால், கருணாநிதியுடன் கோபித்துக்கொண்டு சில நாள்கள் கோபாலபுரம் வீட்டுப் பக்கமே செல்லாமல் இருந்தவர்தான் துரைமுருகன். இந்த முறையும் அவரைக் கோபப்படுத்திவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அதையேதான், அடுத்தவாரிசு உதயநிதியும் நினைக்கிறாராம். அதனால், துரைமுருகனின் வாரிசு கதிர்ஆனந்த் கவலையே இல்லாமல் வேலூர் தொகுதியில் களம் காண்பார் என்கிறார்கள்.”

‘‘ஓஹோ!’’

‘‘வடசென்னையில் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் மகள் தமிழச்சி, மத்தியசென்னையில் தயாநிதி மாறன், தூத்துக்குடியில் கனிமொழி என்று வாரிசுகளுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இதெல்லாம்தான் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் தி.மு.க-வினரை, கலகக்குரல் எழுப்ப வைத்துள்ளது.’’

‘‘தி.மு.க-வில் மட்டும்தான் வாரிசுகளுக்கு எதிராக வாள்வீச்சா?’’

‘‘அ.தி.மு.க-விலும் கலகக் குரல்கள் கேட்காமல் இல்லை. துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனியில் நிற்பது உறுதியாகியிருக்கிறது. நேர்காணலின்போது, ‘எவ்வளவு செலவழிப்பீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘ஜெயிப்பதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு’ என்று சொல்லி அதிரவைத்தாராம் வாரிசு.’’

‘‘வேறு யாரெல்லாம் அ.தி.மு.க-வில் களத்தில் நிற்கிறார்கள்?

‘‘அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் ஏற்கெனவே எம்.பி. அவர் மீண்டும் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர் தொகுதியில் மகனைக் களமிறக்க நினைக்கிறார். ஆனால், சம்பத்துக்கு எதிராக மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் அணி திரண்டிருக்கிறார்கள். எனவே, சீட் கிடைப்பது கஷ்டமாம். அமைச்சர் சி.வி.சண்முகம், தன் அண்ணன் ராதாகிருஷ்ணனை கள்ளக்குறிச்சியில் களமிறக்க நினைத்திருந்தார். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படக்கூடும் என்பதால், அவரது கணக்கும் பலிக்காது என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், தன் மகன் மிதுனை சேலம் தொகுதியில் களமிறக்க நினைத்திருந்தாராம். ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள் வாரிசுகளுக்கு வரிசையில் நிற்பதைப் பார்த்து, மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைதியாகிவிட்டாராம்.’’

‘‘ஆகா… ஆகா’’

‘‘வாரிசுகளுக்கு நடுவே, ஒரு வாரிசு தன் அப்பாவுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதும் நடக்கிறது. கரூர் தொகுதியில் தன் தந்தை சின்னத்தம்பியை நிறுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி-யான தம்பிதுரை எந்த அளவுக்கு இதை ஒப்புக்கொள்வார் என்று தெரியவில்லை.’’

‘‘பலே பலே!’’

‘‘ஏற்கெனவே வளமான துறைகளை வைத்துக் கொண்டு கோடி கோடியாகக் குவித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் வாரிசுகளுக்கே மீண்டும் சீட்டா என்று கேட்டு அ.தி.மு.க-வுக்குள் குஸ்தி ஆரம்பமாகியுள்ளது. அதோடு, கடந்த தடவை எம்.பி-யாக இருந்த பலருக்கும் சீட் கிடைக்காது என்பதால், ‘பெயருக்குத்தான் எம்.பி. ஆனால், எதையும் சாதிக்கவில்லை. அதிலும், எங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக பி.ஜே.பி-யின் அடிமைகளாக மாற்றி வைத்துவிட்டதால், எங்களால் வளரவே முடியவில்லை. ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு பலரும் கல்லா கட்டியுள்ளனர். அதனால், மீண்டும் எங்களுக்கு சீட் வேண்டும். கட்சியே தேர்தல் செலவுகளை ஏற்கவேண்டும்’ என்று சிலர் உறுமுகிறார்களாம்’’

‘‘மற்ற கட்சிகளிலும் வாரிசுகளுக்குத்தான் சீட்டா?’’

‘‘கிட்டத்தட்ட அப்படித்தான். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திருச்சி அல்லது கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டி போடுவார்கள் போலிருக்கிறது!’’

‘‘பா.ம.க நிலை என்னவாம்?’’

‘‘பா.ம.க-வில் சௌமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அரக்கோணத்தில் ஏ.கே.மூர்த்தி,  ஸ்ரீபெரும்புதூரில் வைத்தியலிங்கம், மத்திய சென்னையில் ஜான்பால், கடலூரில் கோவிந்தராஜ் என அந்தக் கட்சியிலும் பட்டியல் தயாராக இருக்கிறது. அன்புமணிக்கு ராஜ்யசபா!’’

‘‘வாரிசு அரசியலுக்கு பேர்போன காங்கிரஸில்?’’

‘‘எழுபது வயதைக் கடந்தவர்கள், முன்னாள் தலைவர்கள், தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது. ஆனால், முன்னாள் தலைவரான திருநாவுக்கரசருக்கு மட்டும் சீட் வழங்க டெல்லியிலிருந்து ஸ்பெஷல் பர்மிஷன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த விஷயம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் தெரிந்து, ‘கட்சி மாறி வந்தவருக்கெல்லாம் வாய்ப்பு. காலங்காலமாகக் கட்சிக்குள் இருக்கும் எங்களுக்கு சீட் இல்லை என்று சொல்வதா?’ என டென்ஷனுடன் புலம்பியுள்ளார். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் வரும் என்கிறார்கள். அதனால் கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதியை ஒரு சாய்ஸ் ஆக ப.சி தயார் செய்துவைத்துள்ளார் என்கிறார்கள்.’’

‘‘ஆகக்கூடி பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் போன்ற சில கட்சிகளைத் தவிர, ஒட்டுமொத்தமாக வாரிசுகள்தான் வரிசைகட்டுகிறார்கள்!’’

‘‘அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் கழகங்களிலேயே கலகக்குரல்கள் அதிகமாக வெடித்துள்ளன. அநேகமாக இந்தக் குரல்கள், ஆங்காங்கே சொந்தக் கட்சியினருக்கு வேட்டு வைக்கக்கூடும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்கத் தலைவர்கள் இருந்த காலத்தில் இப்படிக் கலகக் குரல்கள் எழுந்தாலும், சாமர்த்தியமாகச் சமாளித்தனர். தட்டிக்கொடுத்து அனைவரையும் வேலை வாங்க வைத்தனர். ஆனால், தற்போது தட்டிக்கொடுக்கக்கூட யாருமில்லை. ஒருவேளை, தேர்தல் நேரத்தில் பாயும் பணத்தைப் பொறுத்து, இந்தக் குரல்கள் அதிகமாகலாம் அல்லது குறையலாம்!’’ என்ற கழுகார்,‘‘தூத்துக்குடி தொகுதியிலுள்ள விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நாயுடு சமுதாய மக்கள் அதிகம். அங்கே ரெட்டியார் ஒருவரை நிறுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முயற்சி செய்வதால், கோபமாகியுள்ள நாயுடு சமுதாயத்தினர், ‘தூத்துக்குடியில் கனிமொழியைத் தோற்கடிப்போம்’ என்று கூடிப்பேசியிருக்கிறார்கள்!’’ என்று சொல்லி, அவசரமாக சிறகு விரித்தார்.


உதயசூரியன் மட்டுமே!

‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க இரண்டு கட்சிகளையும் தி.மு.க தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்திக்கொண்டுள்ளனர். திங்களன்று மாலையில்கூட திருமாவளவன் பேசிப்பார்த்துள்ளார். ஆனால், தி.மு.க தரப்பில் இறங்கி வரவில்லையாம். ‘கட்சியினரிடம் பேசிவிட்டு வருகிறேன்’ என்று கடுப்போடு கிளம்பிவிட்டாராம் திருமா.


தாமதமான தேர்தல் தேதி அறிவிப்பு!

முதலில் தயாரான அட்டவணைப்படி, உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பித்து, படிப்படியாக தென்மாநிலங் களுக்குத் தேதியை அறிவிக்க முடிவுசெய்திருந்தது தேர்தல் ஆணையம். இந்தத் தகவல் தெரிந்ததும், ‘தமிழகத்துக்கு முதல்கட்டத்திலேயே, அதுவும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று டெல்லி மூலமாகக் கோரிக்கை வைத்து தேதிகளை மாற்ற வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதுதான், இரண்டு நாள்கள் காலதாமதமாக அறிவிப்பு வந்துள்ளது என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.

அதேசமயம், ‘சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, ஜூலை மாதம் நடத்துங்கள்’ என்றும் எடப்பாடி தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதாம். ‘இடைத்தேர்தல் ரிசல்ட்தான் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான ஆயுதம். ஆனால், எம்.பி தேர்தல் வேலைகளில் இதைக் கோட்டை விட்டு விடுவோமோ’ என்கிற அச்சம்தான் காரணமாம். ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.


தொகுதிக்கு 40 கோடி!

’ஒவ்வொரு வேட்பாளரும் 20 கோடி ரூபாய் தரவேண்டும். கட்சித் தரப்பில் 20 கோடி தரப்படும். இந்தத் தொகை மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டு, அவர் மூலமாகத்தான் தொகுதியின் தேர்தல் வேலைகளுக்குச் செலவிடப்படும்’ என்று தி.மு.க தரப்பில் கறாராகச் சொல்லப்பட்டுவிட்டதாம். கடந்த காலங்களில் பணம் பார்த்த கட்சிப் புள்ளிகள் தற்போது கலங்கி நிற்கிறார்களாம்.


 

பரிதாப தே.மு.தி.க!

ஆரம்பத்தில், ‘தே.மு.தி.க-வுக்கு ஐந்து சீட், ஒரு ராஜ்யசபா சீட்’ என்று தருவதாக வலியவந்து பேசியது அ.தி.மு.க. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க என இருபக்கமும் நாடகமாடியதால், கடைசியில் ‘நான்கு சீட்டுக்கு மேல் தரமுடியாது’ என்று கறார் காட்டிவிட்டனர் அ.தி.மு.க-வில். இரண்டு பக்கமும் தே.மு.தி.க பேசியதை, தனக்கே உரிய பாணியில் துரைமுருகன் மீடியாக்களில் வெளிச்சம்போட்டது தான் ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்று குமுறுகிறார்கள் தே.மு.தி.க-வில். வேறுவழியில்லாமல், நான்கு சீட்டுக்கு தே.மு.தி.க செட்டில் ஆகியுள்ளனர். கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் தொகுதிகளை தே.மு.தி.க தரப்பில் கேட்கிறார்கள். திருச்சி, கள்ளக்குறிச்சி ஓகே ஆகிவிடும். மற்ற இரண்டும் சந்தேகம்தானாம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: