வேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தன் மகனை களமிறக்கி வெற்றிபெறச் செய்வதற்காக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மாஸ்டர் பிளான் வகுத்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வன்னியர் அல்லாத மாற்றுச் சமூக வேட்பாளர்களைக் களமிறக்க துரைமுருகன் திட்டமிட்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல் தி.மு.க-வில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கடும் அதிருப்தியடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்வதற்காக, துரைமுருகன் ஆதரவாளர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். வன்னியர், முதலியார், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகத்தினரின் வாக்குகள்தான், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். துரைமுருகன் வன்னியர் என்பதாலும், ஏ.சி.சண்முகம் முதலியார் என்பதாலும் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, இஸ்லாமியர் வாக்குகள் மற்றும் பட்டியலின சமுதாயத்தினரின் வாக்குகள் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும் என்பதுதான் புதிராக உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி, பா.ம.க இருப்பதால், தி.மு.க-வுக்கு இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருப்பதால், வன்னியர் மற்றும் முதலியார் சமூக வாக்குகள் பெரும்பான்மையாக ஏ.சி.சண்முகத்துக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உளவுத்துறை தகவல் துரைமுருகனுக்குத் தெரியவந்திருப்பதால் அவர் தன் மகனை வெற்றிபெற வைப்பதற்காக புதிய வியூகத்தை வகுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வன்னியர் அல்லாத இஸ்லாமியர், முதலியார், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்க அவர் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் தி.மு.க-வுக்கு அதிகமாகக் கிடைக்கும். அப்படி இதர சமுதாயத்தினரும் தி.மு.க-வுக்கு வாக்களித்தால், கதிர் ஆனந்தை எளிதில் வெற்றிபெற வைத்துவிடலாம் என்று துரைமுருகன் யோசனை வழங்கியிருக்கிறார்.

இதற்கு தி.மு.க-வில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குடியாத்தம் தனித் தொகுதி. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் ஆம்பூர், சோளிங்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றிலாவது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆம்பூர் தொகுதியில் வன்னியர் சமுதாய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். `மற்ற சமூக வாக்குகளுக்காக, சொந்த சமூகத்தினரின் வாக்குகளைப் பறிகொடுக்க வேண்டாம்’ என்று துரைமுருகனிடமே நிர்வாகிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதனால், துரைமுருகன் அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இதுபற்றி தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “வாரிசு அரசியல் எல்லாக் கட்சியிலும்தான் இருக்கிறது. துரைமுருகன், தன்னுடைய மகனை எம்.பி-யாக்கப் பார்க்கிறார். கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், மகனை நிறுத்துவதற்காகப் போராடினார். இந்தமுறை, சீட் கிடைத்துள்ளது. ஆனால், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த பலர் இருக்கிறார்கள். அவர்களில் தகுதியான வேட்பாளர்கள் இல்லையா என்று சிலர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றனர்.

%d bloggers like this: