ஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்

ஆசைப்பட்டது கிடைச்சது ஒன்னு.. ஆனால் தேடி வருவது இன்னொன்னு! எல்லாம் இந்த ராகுல்காந்தியால் வந்தது.. என்று நொந்து கொண்டுள்ளார் போலும் வைகோ!

ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று சபதம் போட்டதில் இருந்தே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த முறை எப்படியாவது எம்பி சீட் வாங்கிவிட வேண்டும் என்று கணக்கு போட்டார். அதற்காக திருச்சி மீதும் கண் வைத்தார்!

திருச்சியை மையமாக முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதற்கு முன்னாள் அமைச்சர் நேருவும் சப்போர்ட்! இதனால் திருச்சி தொகுதியில் வைகோ போட்டியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது

மறுத்துவிட்டார்

ஆனால் இதே தொகுதியை திருநாவுக்கரசரும் கேட்டுவிட்டார். நேரிடையாக நேருவிடமும் தன் விருப்பத்தை சொன்னார். ஆனால் ஸ்டாலினோ, “ராமநாதபுரம் உங்களுக்கு பரிச்சயம்தானே, அதையே எடுத்துக் கொள்ளலாமே” என்று சொன்னார். ஆனால் அதை திருநாவுக்கரசர் மறுத்துவிட்டார். திருச்சி விஷயமாக மேற்கொண்டு ஸ்டாலினும் எதுவுமே மேற்கொண்டு சொல்லாமல் இருந்துவிட்டார்.

குரல் ஒலிக்கணும்

இது ஒரு பக்கம் வைகோவுக்கும், மற்றொரு பக்கம் திருநாவுக்கரசருக்கும் கிலியை தந்தது. இதனிடையே இன்னொரு பக்கம் ஸ்டாலின், “திருமா உட்பட எல்லோருமே தேர்தலில் நின்றால் யார்தான் பிரச்சாரம் செய்வது? உங்கள் குரல் பிரச்சாரத்திற்கு ரொம்ப அவசியம். தமிழகம் முழுசும் ஒலிக்கணும். மாநிலங்களவை எம்பியாக செல்லுங்கள்” என்று வைகோவை சமாதானப்படுத்துகிறார்.

சபரீசன்

இதை ஆரம்பத்தில் வைகோ ஏற்கவில்லை என்றாலும், பிறகு வேற வழி இல்லை என்ற நெருக்கடிக்கு ஆளானார். இதற்கு நடுவில் திருச்சி வேட்பாளர் சபரீசன் என்று பெயர் அடிபடவும் வைகோ மொத்தமாக ஆஃப் ஆனார்!

ராகுல் சப்போர்ட்

ஆனால் இதில் திருநாவுக்கரசர் சரியாக காய் நகர்த்த தொடங்கினார். ஸ்டாலின், நேருவிடம் கேட்டு கொண்டிருந்தால் வேலைக்காகாது என நினைத்து, ஒரு படி மேலபோய் ராகுல்காந்தியை சப்போர்ட்டுக்கு கூட்டிவந்துவிட்டார். திருச்சிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

புலம்பும் தொண்டர்கள்

இந்த விஷயத்தில் ராகுல் தலையிட்டு ஸ்டாலினிடம் பேசவும், வேறு வழியே இல்லாமல் ஸ்டாலின் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிட்டது. ஆக திருச்சி சபரீசனுக்கும் இல்லை, வைகோவுக்கும் இல்லை! இது எல்லாத்துக்கும் காரணம் ராகுல்தான் என மதிமுக தொண்டர்கள் புலம்பி வருகிறார்களாம்!

%d bloggers like this: