அய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்!

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் பிரச்சார செலவுக்காக தொழிலதிபர்களிடம் வேட்பாளர்கள் பலர் கையேந்தி நிற்கிறார்களாம்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக,பாமக, அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

வேட்பாளர் அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்தல் செலவுக்காக பல வேட்பாளர்களும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தொழிலதிபர்களை சுற்றி வந்துகொண்டிருக்கின்றனர்.

அளந்து விட்ட வேட்பாளர்கள்

தலைமையிடம் நேர்காணலின் போது ஆஹோ ஓஹோ என பேசி கோடிகளை கொட்டுவேன் என அளந்துவிட்ட பலரும் செலவுக்கு தலையை சொரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் புரளும் பணம்

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களை காட்டிலும் வடமாவட்டங்களில் புதிதாக களம் காணும் பலருக்கு இந்த நிலைமையாம். பணத்துக்காக சிலர் கார்ப்பரேட் சாமியாரையும் நாடியுள்ளார்களாம். யாருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்பதை அலசி, ஆரய்ந்த பின்னரே தொழிலதிபர்களும் வைட்டமின் பியை கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வாரம் ஆகட்டும்

வேட்பாளர்களை அறிவித்து 2 நாட்களே ஆகியுள்ளதால், ‘ஊருக்கு போங்க பார்க்கலாம், ஒரு வாரம் ஆகட்டும்’ எனக் கூறி தன்னிடம் வந்த வேட்பாளர் ஒருவரை அனுப்பினாராம் சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி ஒருவர்.

எந்தக்குதிரை பந்தயத்தில் வெற்றி பெறுமோ அந்தக்குதிரைக்கு மட்டும் பணம் கட்டும் சாணக்யத்தனம் தெரியாதவர்களா நம்மூர் தொழிலதிபர்கள். எனவே எந்தக் குதிரை நல்லா ஓடுதோ அதற்கே பணம் கண்ணில் காட்டப்படுமாம்.. !

%d bloggers like this: