கல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்!

இந்த ஆட்சி போனால் இனி நம் நிலை என்னவென்றே தெரியாது. எதற்காக இருப்பதைக் கரைக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள் நினைப்பதால் கல்லாவைத் திறக்க தயக்கம் காட்டுகிறார்கள்.”

“ஆளும் கட்சி வேட்பாளராகக் களத்தில் இறங்கினால் வெற்றி உறுதி என்று நினைத்த அ.தி.மு.க வேட்பாளர்கள், இப்போது கலக்கத்தில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் பலரும் தேர்தல் செலவு விஷயத்தில் பவ்யமாக ஒதுங்கிக்கொள்வதுதான் காரணம்” என்ற புலம்பல் இப்போது அ.தி.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (இடைத்தேர்தல்) வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அ.தி.மு.க தரப்பு தலைமையில் பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அ.தி.மு.க கட்சி 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேரடியாகக் களம்காணுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க தலைமை சந்திக்கும் முதல் பொதுத்தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதால், வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க தரப்பு முந்திக்கொண்டு வேட்பாளர் பட்டியல் முதல் பிரசாரம் வரை அனைத்திலும் முன்னணியில் இருக்கும். ஆனால், இந்த முறை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கே அ.தி.மு.க தலைமை அல்லோலகல்லோலப்பட்டுவிட்டது. குறிப்பாக, அ.தி.மு.க-வில் அமைச்சர்களாக இருந்த பலரும் தங்கள் உறவினர், வாரிசுகள் என்று பலருக்கு சீட் கேட்டதால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் பெரும் சிக்கல் எழுந்தது. ஒருவழியாகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன், அமைச்சர் ஜெயக்குமார் மகன், ராஜன்செல்லப்பா மகன் உள்ளிட்ட வாரிசுகளுக்கு சீட் வழங்கி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது.

வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதை உடைப்பதற்கு அ.தி.மு.க வேட்பாளர்களின் ஒரே நம்பிக்கை, கரன்சி என்கிற ஆயுதம் மட்டுமே. அ.தி.மு.க தலைமையில் அமைந்த கூட்டணி இதையே பிரதான பலமாக நம்பி கைகோத்துள்ளது. ஆனால், தேர்தல் பிரசாரம் தொடங்கிய வேட்பாளர்கள் பலரும் இப்போது கலக்கத்தில் இருக்கிறார்கள் என்பதே அ.தி.மு.க-வில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாக உள்ளது.

அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “அம்மா (ஜெயலலிதா) இருந்தபோது, அ.தி.மு.க எவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்ததோ… அதற்கு நேர்மாறான நிலையில் இப்போது உள்ளது. இரட்டைத் தலைமை என்பது முதல் குழப்பம் என்றால், அதைத்தாண்டிச் சில அமைச்சர்கள் மட்டும் கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைப்பதைப் பல மாவட்ட நிர்வாகிகள் விரும்பவில்லை. குறிப்பாக, அம்மா இறந்தபிறகு இந்த இரண்டரை ஆண்டுகளில் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மட்டும் வளமாகிவிட்டார்கள். பல அமைச்சர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அமைதியாக இருந்துவிட்டார்கள். பல மாவட்டச் செயலாளர்கள் வருமானம் இல்லாமல், அமைச்சர்கள் அள்ளும் கரன்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் குறித்து முதல்வர் வீட்டில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், `அந்தந்த மாவட்டத்துக்கு அந்தந்த அமைச்சரே செலவு செய்துகொள்ள வேண்டும் என்றும், ஒரு தொகுதிக்கு 30 C வரை மேலிடத்திலிருந்து தருகிறோம். பிற செலவுகளை எல்லாம் அமைச்சர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றும் சொல்லியுள்ளனர்.

இதற்குப் பல அமைச்சர்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருக்கிறது. `வளமான துறைகளை வைத்துக்கொண்டு சம்பாதித்தவர்களும், ஒன்றும் இல்லாத துறையை வைத்திருக்கும் நாங்களும் ஒரே அளவில் எப்படிச் செலவு செய்யமுடியும்?’ என்று முணங்க ஆரம்பித்தனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மதுரை போன்ற சில இடங்களில் அமைச்சர்கள் சிபாரிசு செய்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. `நாங்கள் சிபாரிசு செய்த வேட்பாளருக்கு நீங்கள் வாய்ப்பு தராவிட்டால் நாங்கள் எதற்குச் செலவு செய்ய வேண்டும்?’ என்று சிலர் முதல்வரிடமே ஓப்பனாகப் பேசியுள்ளார்கள். அதைத் தாண்டி தலைமையிலிருந்து தரும் பணத்தை எங்கள் மூலமே விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் ஒருபுறம் சொல்லியுள்ளார்கள். மொத்தமாக ஒருவரிடமே பணத்தைக் கொடுத்தால் அடிமட்ட அளவிலும் அந்தப் பணம் போய்ச் சேருமா என்கிற சந்தேகம் இப்போது அ.தி.மு.க தலைமைக்கு எழுந்துள்ளது.

ஏற்கெனவே களத்தில் வேலையை தி.மு.க ஆரம்பித்துவிட்ட நிலையில், அ.தி.மு.க வேட்பாளர்கள் வேலையை ஆரம்பிக்கும் முன்பே கரன்சிக்குத் திண்டாடும் நிலை பல தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் 2 நாள்களாக முதல்வர் வீட்டுக்கு வர, இதுதொடர்பாக அவர் அனைத்து அமைச்சர்களிடமும், `நீங்கள் வெற்றிபெற முதலில் செலவு செய்யுங்கள். உங்களுக்கு வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சமாதானம் பேசியுள்ளார். இதைத் தாண்டி 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை கண்டிப்பாக வெல்ல வேண்டிய நெருக்கடியும் எடப்பாடி அரசுக்கு உள்ளது. அந்தத் தொகுதிகளில் கரன்சிகளைக் கூடுதலாக இறக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், செல்லுார் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இந்த ஆட்சி போனால் இனி நம் நிலை என்னவென்றே தெரியாது. எதற்காக இருப்பதைக் கரைக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள் நினைப்பதால் கல்லாவைத் திறக்க தயக்கம் காட்டுகிறார்கள். இதுவே இப்போது தி.மு.க தரப்புக்கு பலமாகவும் அமைந்துவிட்டது” என்றனர், மிகத் தெளிவாக.

“கரன்சியை நம்பி இவர்களுடன் கூட்டணி வைத்தால், அமைச்சர்கள் அம்போவென விட்டுவிடுவார்கள் என நினைக்கவில்லையே” என்று கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

தலைமை போட்டது ஒரு கணக்கு என்றால், அமைச்சர்கள் போடும் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது.

%d bloggers like this: