தம்பி பணம் இன்னும் வரலை! – மதுரை மல்லுக்கட்டு! – உள்குத்து உதறல்! – எங்கே என் வேட்பாளர்? – அய்யய்யோ பொள்ளாச்சி!

“அ.தி.மு.க அணியில் கூட்டணியை முதலில் இறுதிசெய்துவிட்டாலும், இப்போது ஆளுக்கொரு திசையில் முறைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்ற பீடிகையுடன் வந்து அமர்ந்தார் கழுகார்!

“வரும்போதே வில்லங்கமா… சொல்லும்… சொல்லும்!”
“சொல்கிறேன் கேளும்… ‘அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த கட்சிகள் எல்லாம் இப்போது கலக்கத்தில் உள்ளனர்’ என்ற செய்தி அ.தி.மு.க வட்டாரத்திலேயே உலவ ஆரம்பித்துவிட்டது. பி.ஜே.பி-யைத் தவிர அந்த அணியில் இணைந்த கட்சிகள் பெரும்பாலும், ‘செலவுக்கு அ.தி.மு.க இருக்கிறது’ என்கிற நம்பிக்கையில்தான் கூட்டணியில் சேர்ந்தார்கள். ஆனால், ‘வெறும் கரன்சியை மட்டும் நம்பிக் கரைசேர முடியாது’ என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியின் காரணமாகவே அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியல் அறிவிப்பின்போது பா.ம.க., தே.மு.தி.க தலைவர்கள் மிஸ்ஸிங். இதற்குப் பின்னால் வலுவான பிரச்னைகள் இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள்.”

“என்னவாம்?”
“அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டாலும், எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் பா.ம.க அதிருப்தியில் இருக்கிறது. குறிப்பாக, திண்டுக்கல் தொகுதியைத் தங்கள் பக்கம் தள்ளிவிட்டுவிட்டார்கள் என்ற வருத்தம் பா.ம.க-வுக்கு நிறையவே இருக்கிறது. அன்புமணி இந்தக் கூட்டணியைக் கடைசிவரை விரும்பவில்லை என்கிறார்கள். இந்தநிலையில், பொள்ளாச்சி விவகாரம் பெரிதாக வெடித்ததும் பயங்கர  அப்செட் ஆகிவிட்டாராம் அன்புமணி. ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதிகூட ஜெயிக்கமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் பா.ம.க முகாமில் எழுந்துள்ளது.” 

“அடப்பாவமே…”
“பா.ம.க தரப்பு ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளரைத் தேர்வுசெய்துவைத்திருந்தது. ஆனால், திண்டுக்கல் தொகுதிக்கு அவர்கள் தேர்வு செய்த இரண்டு வேட்பாளர்களும் பிடிகொடுக்காமல் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார் களாம். அங்கு திலகபாமாவைக் களத்தில் இறக்கலாம் என்று நினைத்துள்ளது பா.ம.க. ஆனால், அவர் தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகு மற்றொரு பா.ம.க பிரமுகருக்கு மருத்துவர் ராமதாஸ், மார்ச் 16-ம் தேதி இரவு போன் செய்தாராம். ‘திண்டுக்கல் தொகுதியில் நீங்கள் நில்லுங்கள்’ என்று உரிமையுடன் சொல்ல, அவரோ, ‘ஏற்கெனவே உங்கள் பேச்சைக் கேட்டுச் சட்டமன்றத் தேர்தலில் நின்று, இப்போது வரை கடனை அடைக்க முடியவில்லை. இந்தத் தேர்தலில் முழுச் செலவையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நான் நிற்கிறேன்’ என்று கறார் காட்டினாராம். இதை எதிர்பார்க்காத ராமதாஸ், ‘கடைசி ஐந்து நாள் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியதற்கு, அந்தப் பக்கம் ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால், வேட்பாளரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, இறுதியாக மார்ச் 18-ம் தேதியன்று ஜோதிமுத்து என்பவரை வேட்பாளராக்கியுள்ளனர்!”
“தே.மு.தி.க-வுக்கு என்ன வருத்தமாம்?”
“கூட்டணி வைப்பதில் ஆரம்பித்து, தொகுதிப் பங்கீடுவரை தே.மு.தி.க – அ.தி.மு.க இடையே எதுவுமே சுமுகமாக நடைபெறவில்லையாம். குறிப்பாக, ஐந்து தொகுதிகள் தருவதாகச் சொன்ன அ.தி.மு.க., துரைமுருகன் விவகாரத் துக்குப்பிறகு நான்கு தொகுதிகளாகக் குறைத்துத் தந்தது. வேறு வழியில்லாமல் அதை வாங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்தது தே.மு.தி.க. ஆனால், நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் அ.தி.மு.க தரப்பு தே.மு.தி.க-வுக்கு ‘தள்ளிவிட்ட’ தொகுதிகள். கள்ளக்குறிச்சி மட்டுமே, தே.மு.தி.க எதிர்பார்த்த தொகுதி. அதேபோல், தே.மு.தி.க-வுக்கு, அ.தி.மு.க தரப்பிலிருந்து வேறு சில உத்தரவாதங்களும் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, செலவு  விஷயத்தில், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்ற உறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால், மார்ச் 17-ம் தேதி காலை தொகுதிகளை அறிவிக்கும்வரை தே.மு.தி.க தரப்புக்கு ‘தேவையானவை’ சென்று சேரவில்லை என்கிறார்கள். இதனால், பிரேமலதா கடும் அப்செட்டாம். இதனால்தான், அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருவதாக முதலில் சொல்லியவர்கள், பின்பு ‘வரமுடியாது’ என்று சொல்லிவிட்டார்களாம். அதற்கு அ.தி.மு.க தரப்பில், ‘கொடுப்போமுல்ல… கொடுக்காமல் எங்கே போய்விடப் போகிறோம்’ என்றார்களாம் விட்டேத்தியாக!”
“ஓஹோ!”

“த.மா.கா-வும் அ.தி.மு.க மீது அதிருப்தியில்தான் இருக்கிறதாம். அவர்கள், ஒரு ராஜ்யசபா சீட் என்பதில் உறுதியாக இருந்தார்கள். மேலும், மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்த்தார்கள். இரண்டுமே கிடைக்கவில்லை. தஞ்சாவூரைத் ‘தள்ளிவிட்டது’ அ.தி.மு.க. இதில் அந்தக் கட்சிக்குக் கடும் மனவருத்தமாம். இப்படிக் கூட்டணிக்குள்தான் குளறுபடிகள் என்றால், உட்கட்சியிலும் அ.தி.மு.க-வுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்…”
“வேட்பாளர்கள் தேர்வில் வெடித்த விவகாரத்தைச் சொல்கிறீரா?”
“அதேதான். வேட்பாளர் தேர்வில் இந்த அளவுக்குச் சர்ச்சைகள் வெடிக்கும் என்று எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ நினைக்கவில்லை. தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அடுத்த அரை மணிநேரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடலாம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், நடந்த கதையே வேறு.”
“என்ன நடந்தது?”
“அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதத்துக்குக் காரணமாக அமைந்தது மதுரை மல்லுகட்டுதானாம். கடந்த 17-ம் தேதி மாலை 7 மணிக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டு வந்த எடப்பாடி – பன்னீர் முன்னிலையிலேயே ராஜன் செல்லப்பா தரப்பும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பும் தடித்த வார்த்தைகளைக் கூறி அசாதாரணமான சூழலை உருவாக்கிவிட்டார்கள். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பு இளைஞரணி மாநில இணைச் செயலாளரான கிரம்மர் சுரேஷுக்கு சீட் கேட்டுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பு ஜெ. பேரவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான தமிழரசனுக்கு சீட் கேட்டது. ராஜன் செல்லப்பாவோ, ‘சீனியரான எனக்குத்தான் அமைச்சர் பதவி தரவில்லை. என் மகனுக்காவது எம்.பி சீட் கொடுங்கள்’ என்று கடுமையான அழுத்தம் கொடுத்தாராம். அவருக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசனும் சிபாரிசு செய்தாராம். இந்த முக்கோண மோதலில் சட்டை கிழியாதது ஒன்றுதான் பாக்கியாம். இறுதியில் ராஜன் செல்லப்பா தரப்பு, ‘ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் வேறு மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று கடுமையாக எச்சரிக்கும் தொனியில் நெருக்கடி கொடுக்க… ஒருவழியாக மதுரையில் ராஜ்சத்யன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்கிறார்கள்!”
“அடேங்கப்பா…”
“இந்த விவகாரத்தால் அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வெளியாக வேண்டிய வேட்பாளர் பட்டியல், இரவு 10 மணிக்கு வெளியானது. இந்தப் பட்டியலைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் ஜெ.சமாதியில் வைத்து ஆசிபெற்ற பிறகு வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால், மதுரை மல்லுக்கட்டில் அம்மாவை மறந்துவிட்டார்கள்!”

“தெரிந்ததுதானே… சரி, மதுரை மாவட்டச் செயலாளர் பொறுப்பு ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதே?”
“அவர்தான் அழாத குறையாக ‘என் ஆதரவாளருக்குத்தான் வாய்ப்பு இல்லை; எனக்காவது மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுங்கள்’ என்று கண்ணைக் கசக்கியிருக்கிறார். அதன் பிறகே கட்சிரீதியாக இரண்டாக இருந்த மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, மதுரை மேற்கு புறநகர் மாவட்டச் செயலாளராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார்கள்.”
“அ.தி.மு.க-வில் வேறு எந்தெந்தத் தொகுதியில் பிரச்னையாம்?”
“திருவண்ணாமலை தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டதற்கு, ‘அம்மாவால் கட்சிப் பதவி பிடுங்கப்பட்டவருக்கு எப்படி சீட் தரலாம்?’ என்று எகிறுகிறார்கள். ஆரணி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏழுமலைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனுக்கும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். அதேபோல், தனது தொகுதியை பி.ஜே.பி-க்கு தாரைவார்த்து விட்டார்கள் என்ற வருத்தத்தில் இருக்கிறார் அன்வர் ராஜா.”
“பி.ஜே.பி தரப்பு என்ன நினைக்கிறதாம்?”
“தமிழகத்தில் கோவையைத் தவிர, தங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்கிற மனநிலைக்கு வந்துவிட்டதாம் பி.ஜே.பி தலைமை. மத்திய உளவுத் துறையை வைத்து அலசியதில் ‘முப்பதுக்கும் மேல் தி.மு.க-வுக்குச் சென்றுவிடும்’ என்பது அப்பட்டமாகத் தெரிந்ததாம். குறிப்பாக, பா.ம.க மூன்று தொகுதிகளையாவது வென்றுவிடும் என்று முதலில் நினைத்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் நிற்கும் ஏழு தொகுதியிலும் எதிர்த்து நிற்பது, உதயசூரியன் சின்னம் என்பதால் வெற்றி எளிதல்ல என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள்!”
“தி.மு.க வேட்பாளர் பட்டியலை சென்டிமென்டாக வெளியிட்டுள்ளதே?”
“ஆமாம்! பகுத்தறிவு பகலவனைப் பின்பற்றும் கட்சி, வேட்பாளர் அறிவிப்பை ராகு காலத்தில் வெளியிட்டுள்ளது. பட்டியலை வெளியிடும் முன்பு கருணாநிதியின் சமாதியில் வைத்து வணங்கிய ஸ்டாலின், அன்பழகனை அவரது வீட்டுக்கே சென்று பார்த்து, பட்டியலைக் காட்டியுள்ளார். அவரும் சைகையால் வாழ்த்துச் சொல்லிய பிறகு கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி மற்றும் அவரின் தாயார் அஞ்சுகம் படங்களின் முன்பு பட்டியலை வைத்துப் பயபக்தியோடு வணங்கியுள்ளார் ஸ்டாலின். அதன்பிறகே அறிவாலயம் வந்து பட்டியலை முறைப்படி அறிவித்தார்.”
“ஆனால், தி.மு.க-விலும் உள்குத்து உதறல் இருக்கிறது என்கிறார்களே?”
“கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகனுக்கு எதிராகக் கடும் உள்ளடி அரசியல் நடக்கிறதாம். அவரை நிறுத்தக் கூடாது என்று அந்தப் பகுதி தி.மு.க-வினர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியும், அவரை நிறுத்தியதில் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேபோல், சேலம் தொகுதியை வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு எதிர்பார்த்தார். ஆனால், தே.மு.தி.க-விலிருந்து வந்த பார்த்திபனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் சேலம் சீனியர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் ‘ஸ்லீப்பர் செல்’லாக தி.மு.க தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு நபர் பின்னணியில் இருப்பதாகவும் சேலம் உடன்பிறப்புகள் கிசுகிசுக்கிறார்கள்.”

“ம்!”
“திண்டுக்கல் வேட்பாளரை அந்த மாவட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரியாதாம். ‘திருநெல்வேலி வேட்பாளர்மீது வழக்குகள் இருப்பது தலைமைக்குத் தெரியாதா?’ என்கிறார்கள். தர்மபுரி தொகுதிக்கு வாய்ப்பு கேட்டு ஸ்டாலினைச் சந்தித்துள்ளார் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன். ‘என்னிடம் வரவேண்டாம். எ.வ.வேலுவைப் பாருங்கள்’ என்று பதில் சொல்லியுள்ளார் ஸ்டாலின். அவரோ, ‘கட்சியில் அவரைவிட சீனியர் நான்’ என்று சொல்லியும் எடுபடவில்லையாம். வட மாவட்ட சீட்களை எ.வ.வேலுவும், தென் மாவட்ட சீட்களை கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ம்தான் முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக, சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளான சாத்தூர், விளாத்திகுளம் தொகுதிகளில் நாயுடு சமூகத்துக்கு வாய்ப்பு இல்லாமல் போனது, அந்தச் சமூகத்தினரை கனிமொழிக்கு எதிராக அணிதிரள வைத்துள்ளது என்கிறார்கள். இந்தத் தகவல் தெரிந்த கனிமொழி, பதறிக்கொண்டு வைகோவைச் சந்தித்து நிலைமையை எடுத்துச்சொல்லியுள்ளார். வைகோ மூலம் நாயுடு சமூகத்தைச் சரிகட்டும் வேலைகள் நடக்கிறதாம்.”
“வேல்முருகன் தி.மு.க-வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறாரே?”
“அவர் முதலில் கரைஒதுங்க நினைத்தது டி.டி.வி.தினகரன் தரப்பில்தானாம். ஆனால், சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் கடுப்பானவர், ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டார் என்கிறார்கள்.”
“வேலூர் பக்கம் பரபரப்பாக இருக்கிறதே…”
“மோப்பசக்தி அதிகம்தான்… சொல்கிறேன் கேளும். வேலூர் கோட்டை பக்கம் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சிப்புள்ளி, ‘எனது மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வருகிறது. குறைந்தது ஐம்பது ‘சி’ வசூலித்துத் தாருங்கள்’ என்று தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் சொன்னாராம். அதிர்ந்துபோனவர்கள் வேறுவழியில்லாமல் 25 ‘சி’-க்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வசூல் வேட்டை ஜரூராக நடக்கிறதாம்!” 
“இரு பெரிய கட்சியிலும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்களே?”
“ஆமாம். அ.தி.மு.க., தி.மு.க இரு தரப்பிலும் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். தினகரன் தரப்பு பாதி பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘குறைந்தது பத்து தொகுதிகளையாவது வென்றே ஆக வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறது அ.தி.மு.க.  இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இரண்டு கட்சியிலுமே குளறுபடிகள் இருக்கின்றன. அதை உமக்கு அடுத்த இதழில் விரிவாகச் சொல்கிறேன்.” என்ற கழுகார் விருட்டெனப் பறந்தார்!

%d bloggers like this: