திமுகவில் நடந்த காமெடி

இரண்டு தேர்தலுக்கு முன்பு தி.மு.க.,வில் ஒரு காமெடி நடந்தது. விருப்ப மனு போட்டவர்களிடம் நேர்காணல் நடத்தும் போது, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என, கேட்டார்கள். எவ்வளவு அதிகமாக செலவு செய்ய தயார்

என்கிறோமோ, அவ்வளவுக்கு நமக்கு, ‘சீட்’ நிச்சயம் என்று நினைத்து, பலரும், ‘பத்து சி, ஐந்து சி…’ என்று வாயில் வந்ததை அள்ளி விட்டனர். தலைமையும் அதை நம்பி, ‘சீட்’ கொடுத்தது. ஆனால், செலவு செய்ய பணம் இல்லாமல், பலர் தோற்றுப் போயினர்.

அடுத்த தேர்தலில், பணத்தை கட்சியில் டிபாசிட் செய்த பின்னரே, ‘சீட்’ வழங்கப்பட்டது. ‘சீட்’ கிடைத்தவர்களுக்கு மட்டும், ‘டிபாசிட்’ பணம் தேர்தல் செலவுக்காக திருப்பி அளிக்கப்பட்டது; கட்சியும், ஒரு தொகை கொடுத்தது. அதிலும் ஏமாற்று வேலைகள் நடந்ததால், புது நடைமுறை உருவானது. அதாவது கட்சி பணம் கொடுக்காமல், கோடீஸ்வரர்களையே வேட்பாளராக நிறுத்துவது. அவர்கள் மொத்த செலவை பார்த்துக் கொள்வதோடு, கட்சிக்கும் உதவுவார்கள். இந்த, ‘பார்முலா’வை ஸ்டாலினுக்கு அறிமுகம் செய்தவர் சபரீசன். அப்படி வேட்பாளர்களான கோடீஸ்வரர்களும் தோற்றுப் போனது தனிக்கதை.

இந்த முறை, லோக்சபா தேர்தலில், ‘சீட்’ பெறுவதற்காக, பலரும் முட்டி மோதினர். பலர் சபரீசனை சந்தித்து, ‘சீட்’ கேட்டனர். ‘டிபாசிட்’டாக பணமும் செலுத்தினர். 20 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, சபரீசனிடம் பணம் கொடுத்தவர்களில் சிலர் பெயர் அதில் இல்லை.அவர்கள் இரட்டைக் கவலையில்ஆழ்ந்திருந்தபோது, மொபைல் போன் சிணுங்கியது. ‘உடனே வரவும்’ என்று அழைத்தவர் சபரீசன். சென்றதும், அவர்கள் கொடுத்திருந்த, ‘கரன்சி பார்சலை’ திருப்பிக் கொடுத்தார் சபரீசன்.

‘சில காரணங்களால் இந்த தடவை தவறிவிட்டது. அடுத்த முறை பார்க்கலாம்; வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வெற்றிக்கு முழு மனதோடு உதவி செய்யுங்கள். நீங்கள் கொடுத்த பணத்தை சொன்னபடி திருப்பிக் கொடுத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

திருநெல்வேலி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஞான திரவியம். உதயநிதி உதவியால் இவருக்கு சீட் கிடைத்தது. இங்கே சபரீசன் மூலம், ‘சீட்’ கேட்டவர் கிரஹாம் பெல். அவர் கொடுத்திருந்த, ‘மூன்று சி’ இரவோடு இரவாக திருப்பி தரப்பட்டது. எதிர்பாராத சந்தோஷத்தில், திக்குமுக்காடுகின்றனர், ‘சீட்’ கிடைக்காத தி.மு.க.,வினர். இதுவரை அவர்கள் அனுபவம், ஒருவழிப் பாதை மட்டுமே என்பதால் இந்த மகிழ்ச்சி.

ஸ்டாலினுக்கு தப்புத் தப்பாக ஆலோசனை சொல்லி கட்சியை கெடுப்பவர் என்று விமர்சிக்கப்பட்ட சபரீசனை இப்போது, ‘ஹானஸ்ட் சபரீஷ்’ என்று பட்டம் கொடுத்து பாராட்டுகின்றனர் கட்சிக்காரர்கள். எப்படியோ, தி.மு.க., வரலாற்றில் புது அத்தியாயம் எழுதி விட்டார் சபரீசன்.

%d bloggers like this: