ஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்?” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி! தேனி தொகுதியில் குஷ்பு

தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியும் இன்னும் மூன்று தினங்களில் நிறைவடைய உள்ளது. ஆனால், இதுவரை தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பே பட்டியல் வெளியாகும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தரப்பில்

கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலைவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில் “நாளை காலை மீண்டும் நடைபெறும் ஆலோசனையில் முடிவு செய்த பின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்” என்று மாநில காங்கிரஸ்கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வில் நடந்துவரும் இழுபறி குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டால் “இன்று பட்டியல் வெளியாகும் நிலையே இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாகத் தேனி தொகுதியில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று ஜே.எம்.ஆரூண் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு மெயில் அனுப்பியதே குழப்பத்திற்குக் காரணம். தேனி தொகுதியை தி.மு.கவிடமிருந்து வாங்கியதே ஆரூணுக்காக வேண்டித்தான். ஆனால், அவர் எதற்காகப் பின்வாங்கினார் என்று புரியவில்லை. அதனால் தேனியில் யாரை வேட்பாளராகக் களம் இறக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தனக்கு வாய்ப்பு வேண்டும் என்று குஷ்பு தொடர்ந்து கேட்டுவந்தார். அவருக்குத் தேனி தொகுதியை ஒதுக்கலாமா? என்று இப்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் தொகுதி ஒதுக்க மேலிடம் விரும்புகிறது. அவருக்கு கிருஷ்ணகிரி அல்லது விருதுநகரை ஒதுக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இன்று இரவுக்குள் அனைத்தும் சுமுகமாக முடிந்துவிடும் என்று நம்பிக்கை உள்ளது. அப்படி முடிந்தால் நாளை காலை தேனி தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இந்த இருவருக்காகவே இப்போது பட்டியல் வெளியிடுவதில் இழுபறியாகி வருகிறது” என்கிறார்கள்.

%d bloggers like this: