பணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்!’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்?

பானைதான் நம்முடைய சின்னம். அந்தப் பானையையே உண்டியல்போல மாற்றி, மக்களிடம் சென்று உதவி கேட்போம். அவர்களிடம் நமது சின்னத்தையும் காட்டியதுபோல இருக்கும். தேர்தல் செலவுகளுக்கு நிதியும் வந்து சேரும்.

சிதம்பரம் தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இருப்பினும், தேர்தல் செலவுகளுக்கு நிதி இல்லாமல் திணறி வருகிறார். `பணம் இருந்தால் மட்டுமே தொகுதிப் பக்கம் வாருங்கள்’ என தி.மு.க நிர்வாகிகளும் தெரிவித்துவிட்டதாகச் சொல்கின்றனர் வி.சி.க வட்டாரத்தில்.

 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சொந்தக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். தி.மு.க அணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்டு பெற்ற வி.சி.க, ஒன்றில் தனிச் சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் களமிறங்க உள்ளது. `இதை எங்களுடைய ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தார் திருமாவளவன். அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் விருப்பத்துக்குரிய சின்னத்தைப் பெறுவதிலும் வி.சி.க நிர்வாகிகள் கடுமையாகப் போராடினர். 

 

இதைப் பற்றிக் குறிப்பிட்ட திருமாவளவன், `மோதிரம் சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தோம். கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கொடுத்த மனுவிலும், `தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் போட்டியிடும் எங்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் கேட்ட மோதிர சின்னத்தை வேறு ஒரு புதிய கட்சிக்கு ஒதுக்கிவிட்டது, அதிர்ச்சியைக் கொடுத்தது. 2011, 2014, 2016 ஆகிய 3 பொதுத் தேர்தல்களிலும் நாங்கள் மோதிரம் சின்னத்தில்தான் போட்டியிட்டோம். அதன் அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், எங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. பின்னர் வைரம், பலாப்பழம், மேஜை மற்றும் பானை ஆகிய சின்னங்களை கேட்டோம். இறுதியாக, பானைச் சின்னத்தைக் கொடுத்தனர். மக்களிடம் பானைச் சின்னம் எளிதாகச் சென்று சேரும்’ என்றார். 

தற்போது சிதம்பரம் தொகுதி முழுவதும் பானை சின்னத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் வி.சி.க நிர்வாகிகள். மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் தனி டீம் ஒன்று தேர்தல் வேலை பார்த்து வருகிறது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், தொகுதி செலவுகளைத் தி.மு.க ஏற்றுக் கொண்டுவிட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ரவிக்குமார். அதேநேரம், சிதம்பரம் தொகுதிக்கான செலவுகளுக்கு தி.மு.க தரப்பில் இருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை. தொகுதிக்கான முழு செலவையும் திருமாவளவனே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள் சிலர், “சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உழைக்கும் மக்களின் சின்னமாக பானை இருக்கிறது. தொகுதி வாக்காளர்களிடம் இந்தச் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் எந்தவித சிரமமும் இருக்கப்போவதில்லை. 

அதேநேரம், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். கடைசி நேரத்தில் தி.மு.க தரப்பிலிருந்து ஏதேனும் உதவிகள் வரலாம் எனவும் கட்சி நிர்வாகிகள் நினைக்கின்றனர். தி.மு.க மா.செ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமோ, `பணம் இருந்தால் மட்டும் தொகுதி பக்கம் வாருங்கள். இல்லாவிட்டால், வர வேண்டாம்’ எனக் கூறிவிட்டார். எப்படிக் கணக்கு போட்டாலும், 15 கோடி ரூபாய்கள் வரையில் தேவைப்படுகின்றன. தேர்தல் செலவு தொடர்பாக நடந்த விவாதத்திலும், `நன்கொடைகளை வாங்கிச் செலவு செய்யலாம்’ எனச் சில நிர்வாகிகள் குறிப்பிட்டனர். மற்றவர்களோ, `பானைதான் நம்முடைய சின்னம். அந்தப் பானையையே உண்டியல் போல மாற்றி, தெருத்தெருவாகச் சென்று மக்களிடம் உதவிக் கேட்போம். அவர்களிடம் நமது சின்னத்தையும் காட்டியதுபோல இருக்கும். தேர்தல் செலவுகளுக்கு நிதியும் வந்து சேரும்’ எனத் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால், தேர்தல் செலவு ப்ளஸ் சின்னம் போன்றவற்றைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறார் திருமா. இவை அனைத்தையும் தாண்டி தொகுதி மக்கள் தன்னை கரையேற்றுவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார்’’ என்கின்றனர் நிதானமாக. 

நிதி நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், தன்னை சந்திக்க வருபவர்களிடம் தேர்தல் கவலைகளைத் திருமா காட்டுவதில்லை. திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், நேற்று அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார். பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சமரன் என்பவர், திருமாவை சந்திக்க வந்தார். அப்போது அருகில் இருந்த நிர்வாகி ஒருவர், `பானை சின்னம் தொடர்பாக சில கவிதைகளை எழுதியிருக்கிறார் சமரன்’ எனக் கூறி, அவற்றைக் காண்பித்திருக்கிறார். ஒரு கவிதையில், `அண்ணாந்து பார்க்கின்ற கலசப்பானையும் நீதான், அன்றாடங் காய்ச்சிகளின் கஞ்சிப்பானையும் நீதான்’ என எழுதப்பட்டிருந்த வரிகளை ரொம்பவே ரசித்துப் பாராட்டியிருக்கிறார் திருமாவளவன்.

%d bloggers like this: