டார்கெட் எட்டு… பணத்தைக் கொட்டு… பதறவைக்கும் 18

ப்பப்பா… கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பைவிட, தமிழகத்தில் எடப்பாடி முதல்வராகத் தொடருவாரா? என்பதற்கான தேர்தலாகவே இந்தத் தேர்தலைப் பார்க்கிறார்கள்” என்றபடி வியர்வை சொட்ட வந்த கழுகாருக்கு, ஜில்லென்று ஐஸ் மோர் கொடுத்தோம்.

“திரும்பவும் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?”

“ஆமாம்! கோட்டை முழுவதும் அந்தப் பேச்சுதான் பலமாக இருக்கிறது. மே மாதத்துக்குமேல் இந்த ஆட்சி நீடிக்குமா… அல்லது புதிய முதல்வர் பதவி ஏற்பாரா… என்கிற சந்தேகம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பலமாக உள்ளது. மூத்த அமைச்சர்கள் பலரும் இந்த ஆட்சி முழுமையாக நீடிக்கும் என்று சொல்லிவந்தாலும் அவர்களில் பலரே கிடைத்தவரை லாபம் என்று இருப்பதைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.”
“தெளிவாகச் சொல்லும்…


“எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழகச் சட்டசபைக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் குறைந்தது எட்டுத் தொகுதிகளாவது அ.தி.மு.க வென்றாக வேண்டும். சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அ.தி.மு.க-வின் பலம் 114-ஆக இருந்தது. ஆனால், மார்ச் 21-ம் தேதி காலை சூலூர் எம்.எல்.ஏ-வான கனகராஜ் மறைந்ததைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை, 113-ஆகக் குறைந்துவிட்டது. இதனால், காலி இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 22-ஆக அதிகரித்துள்ளது. இப்போது நடைபெறும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவடைந்தால் 230 உறுப்பினர்கள் சட்ட மன்றத்திற்குள் நுழைவார்கள். இதில் ஆளும் தரப்பின் மெஜாரிட்டிக்குத் தேவை 116 எம்.எல்.ஏக்கள்.”
“ம்!”
“இப்போது 113 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க., இன்னும் மூன்று தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதைத்தாண்டி மற்றொரு சிக்கலும் உள்ளது. ஏற்கெனவே, இந்த 113 உறுப்பினர்களில் தினகரனுக்கு ஆதரவாக அறந்தாங்கி தொகுதியின் ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு, விருத்தாசலம் தொகுதியின் கலைச்செல்வன் ஆகிய மூன்று உறுப்பினர்கள் உள்ளார்கள். தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு எதிராக உள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் பின்வாங்கினால், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இந்தநிலையில் எட்டு உறுப்பினர்கள் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, அ.தி.மு.க மெஜாரிட்டிக்குத் தேவையான 116 உறுப்பினர்களுடன் துணிச்சலாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள நேரிடும்.”
“சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது… சொல்லும்… சொல்லும்!”

“இந்தப் பதற்றத்தில்தான், பா.ம.க-வை தங்கள் பக்கம் கொண்டுவந்தது அ.தி.மு.க. இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகள் வடமாவட்டம் மற்றும் கொங்கு பகுதியில் வருகின்றன. இந்த ஒன்பது தொகுதிகளில் எட்டு தொகுதிகளைத்தான் இப்போது ஆளும் தரப்பு குறிவைத்துள்ளது. இந்த எட்டிலும் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகுந்த பதற்றத்துடனும், கண்டிப்புடனும் உத்தரவிட்டுள்ளதாம். ‘என்ன செய்வீர்களோ தெரியாது… அடுத்த இரண்டு ஆண்டுகள் அமைச்சராக நீடிக்க வேண்டும் என்றால் கணக்கு வழக்குப் பார்க்காமல், எட்டுத் தொகுதிகளிலும் செலவுகளுக்காகக் கொட்டுங்கள். வெற்றிபெற்ற பின்பு, ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டு எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதனால், அமைச்சர்களும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கரன்சி மழை பொழிய தயாராகி வருகிறார்களாம்.”
“அப்படி என்றால் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள்?”
“இப்போதைய நிலையில், அ.தி.மு.க கூட்டணி ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றிபெற முடியும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறதாம். அதனால், அ.தி.மு.க தரப்பில் பெரிதாக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம். ‘மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் நாம் ஆட்சியில் இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும்’ என்று அ.தி.மு.க தரப்பு நினைக்கிறது. இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்… இப்போது பா.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபாவை கொடுத்துள்ளது அ.தி.மு.க. இடைத்தேர்தல் முடிவு நெருக்கடியாக வந்தால், இந்த ஒப்பந்தம்கூட முறிக்கப்படுமாம். எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறது அ.தி.மு.க.”
“அடேங்கப்பா!”
“ஒருவேளை எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத பட்சத்தில், தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க் களைத் தகுதி நீக்கம் செய்யவும் தயாராக உள்ளது எடப்பாடி தரப்பு. தனது நாற்காலியைத் தக்கவைக்க எதையும் செய்ய அவர் துணிந்துவிட்டார் என்கிறார்கள்.”
“பி.ஜே.பி தரப்பு என்ன நினைக்கிறதாம்?”
“கடும் அப்செட்டில் இருக்கிறது. நல்ல நாள் பார்த்து வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், காரைக்குடியில் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைச் சொல்லிவிட்டார். உடனே மத்திய தலைமையிலிருந்தும் மாநிலத் தலைமையிலிருந்தும், ‘இருக்கிற பிரச்னைகள் போதாதா?’ என்று வறுத்தெடுத்துவிட்டார்களாம். ஆனால், கடந்த 21-ம் தேதி இரவுதான் பி.ஜே.பி-யின் டெல்லி தலைமை பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 184 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹெச்.ராஜா சொன்னபடிதான் இருந்தது. குமரி தொகுதிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், கோவை தொகுதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கைக்கு ஹெச்.ராஜா, தூத்துக்குடிக்கு தமிழிசை, ராமநாத புரத்துக்கு நைனார் நாகேந்திரன் பெயரும் இடம்பெற்றிருந்தது”
“சரி… தினகரன் என்ன நினைக்கிறார்?”
“தினகரன் தரப்பு, ‘இந்த இடைத்தேர்தல் முடிந்தபிறகு எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும். அதன்பிறகு அ.தி.மு.க இணைப்பு விழா நடை பெற்றுவிடும்’ என்று நம்புகிறது. சசிகலா அநேகமாக அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் சிறையிலிருந்து வெளியே வரலாம் என்கிறார்கள். அவர் வரும்போது அ.தி.மு.க தன் தலைமையில் செயல்பட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறாராம்.”
“அதென்ன பிப்ரவரி கணக்கு?”
“தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார்கள். ஏற்கெனவே, நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் வாரத்துக்கு இருநாள்கள் வீதம் சுமார் 96 நாள்கள் அவருடைய தண்டனை நாள்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். தவிர, சிறையில் சசிகலா கன்னட மொழியைக் கற்று, அதில் தேர்வு எழுதி பாஸ் செய்துவிட்டாராம். அதற்கும் சில சலுகைகள் காட்டவிருக்கிறதாம் கர்நாடக சிறைத்துறை. இதை எல்லாம் கணக்கிட்டால் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் சசிகலா வெளியே வர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.”
“ஆனால், தினகரன் தனக்கு நெருக்கமாக இருந்த கலைராஜனை நீக்கியுள்ளாரே?”
“கடந்த ஒரு மாதமாகவே இருவருக்கும் இடையே சில உரசல்கள் என்கிறார்கள். ‘தினகரனைச் சுற்றி வெற்றிவேல், சேலஞ்சர் துரை, மாணிக்கராஜா உள்ளிட்ட ஐவர் குழு அவரை ஆட்டுவிக்கிறது’ என்ற தகவல் பலமாக உலவுகிறது. ஒருகட்டத்தில், ‘தினகரன் மனதில் எம்.ஜி.ஆர் என்று நினைப்பா!’ என்று கலைராஜன் சொன்னதாக ஒரு கமெண்ட் தினகரன் காதுக்குச் சென்றிருக்கிறது. அதன் பின்பே இந்த நீக்கம் என்கிறார்கள்!”
“தி.மு.க தரப்பு உற்சாகமாக இருக்கிறதா?”
“ஒருபுறம் உற்சாகம் புரண்டாலும், கலகக்குரல்களும் எழுகின்றன. குறிப்பாக, தென்மாவட்டங்களில் தினகரன் கணிசமான அளவு தி.மு.க வாக்குகளைப் பிரித்துவிடுவாரோ என்கிற அச்சம் தி.மு.க-வுக்கு உள்ளது. போதாக் குறையாக முஸ்லீம் ஜமாத்களை சரிக்கட்டும் வேலையிலும் தினகரன் தரப்பு இறங்கியுள்ளது. சில தொகுதிகளில் அ.தி.மு.க தரப்பு, தி.மு.க நிர்வாகிகளைத் தனியாகச் சந்தித்து வலைவீசு கிறார்கள். அப்படி யாராவது ஆதாரத்துடன் சிக்கினால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்” என்ற கழுகார், ‘‘அடுத்த இதழ், ‘தேர்தல் ஜூனியர் பிளஸ் 16’-க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!” என்றபடி பறந்தார்!

%d bloggers like this: