பிரசவத்திற்குப் பின் பெண்கள் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

குழந்தை பெற்றெடுத்த அம்மாக்கள் 10 மாத போராட்டத்திற்குப் பிறகு உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து காணப்படுவார்கள். அவர்களுக்கு சரியான உடல் பராமரிப்பு அவசியம். குறிப்பாக உடல் களைப்பை போக்க உடற் பயிற்ச்சிகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிரசவத்திற்கு முன் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்திருப்போம். அதேபோல் முதுகெலும்பும் வளைந்து கொடுத்ததால் பிரவத்திற்குப் பின் முதுகு வலி, உடல் வலி, உடல் எடை அதிகரிப்பால் சீரற்ற உடல் நிலை என முற்றிலும் பெண்களின் உடலின் தன்மை மாறியிருக்கும். இதை போக்கவே ஐந்து யோகா பயிற்சிகளை அளிக்கிறார் மருத்துவர் காயத்ரி உமா மகேஷ்வரி. இவர் சிராயூ நியூட்ரீஷியன் அண்ட் வெல்னெஸ் ஸ்டுடியோ வைத்திருக்கிறார்.

தலை குனிந்த நிலை (உட்டனாசனம் )
கால்களை குறுகிய அளவில் விரித்துக் கொள்ளவும். மூட்டிகளை கொஞ்சம் வளைத்துக் கொள்ளவும். மெதுவாக குனிந்தபடி உங்கள் கைகளை கால்களின் பாதங்களுக்கு அடியில் வைக்க வேண்டும். பாதங்கள் இரண்டும் உங்கள் கைகளின் மேல் இருக்க வேண்டும். தலை தரை தளத்தில் இருக்க வேண்டும். தற்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் டென்ஷன்கள் குறையும். குழந்தைக்குப் பால் கொடுப்பதால் கழுத்து, தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஏற்படும் வலிகள் குறையும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மேம்பாள நிலை (சேதுபந்தாசனம்)

முற்றிலுமாக மேற்புறத்தை பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். நன்கு மூச்சை இழுத்து வெளியிட்டு கால்களை முட்டி போட்ட நிலையில் மடித்துக் கொள்ளுங்கள். தற்போது இரு கைகளையும் காதுகளுக்கு அருகே வைத்தபடி மடித்து முதுகை பலுகொண்டு மேலே தூக்குங்கள். அதேசமயம் தலையை அப்படியே பின் நோக்கியவாறு தூக்குங்கள். தற்போது கைகளை மெதுவாக தூக்கி கட்டிக் கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக இழுத்து விடுங்கள். 10 நிமிடங்கள் இப்படியே இருங்கள். பின் கைகளை மீண்டும் காதருகே வைத்து தலையை நேராக்கி கால்களை இயல்பு நிலைக்கு வையுங்கள். தற்போது மூச்சை நன்கு இழுத்துவிட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள்.

இவ்வாறு செய்வதால் பின் தசைகள் வலுபெறும். அதேசமயம் முதுகு வலி, மார்பக வலி , அழுத்தம் எல்லாம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

முட்டி போட்டு தலை குனிந்த நிலை ( மர்ஜர்யாசனம் அல்லது பிட்டிலாசனம் )

முட்டி போட்டுக் கொள்ளுங்கள். கைகள் இரண்டையும் தரையில் வைத்துக் கொள்ளுங்கள். முட்டிகள் கிட்டதட்ட இடுப்புப் பகுதிக்கும் கீழே இருக்க வேண்டும். முதுகை வலைத்தவாறு அல்லாமல் மேல் நோக்கியவாறு நேரான நிலையில் நிமிர்ந்தவாறு இருக்க வேண்டும். தற்போது மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிட வேண்டும்.

இந்த நிலையில் கழுத்து வலி தீரும். தசை வலிகள் நீங்கும். உடல் இலகுத் தன்மை அடையும்.

கால்களை மேலே தூக்கிய நிலை

சுவரின் உதவியுடன் கால்களை நன்கு தூக்கியவாறு சுவற்றில் முட்டுக் கொடுங்கள். உதவிக்கு உங்கள் கைகளை இடுப்புப் பகுதியில் வைத்து தாங்கிக் கொள்ளுங்கள்.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பால் சுரத்தலும் அதிகமாகும். கால்வலி, பாத வலி, தசைப் பிடிப்பு ஆகியவை நீங்கும்.

குழந்தை நிலை (பாலாசனம் )

கால்களை மடக்கி முட்டி போட்டவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.நேராக முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து விடுங்கள். தலையை குனிந்தபடி முதுகை வலைத்துக் கைகளை நீட்டிபடு முற்றிலுமாக தரை தளத்தில் படுங்கள். உங்கள் மார்புப் பகுதி தொடையிலும் தலை முட்டியிலும் பட வேண்டும். கைகள் தலைக்கு முன் நேராக நீட்டியவாறு இருக்க வேண்டும். தற்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியிட வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வளைந்த முதுகுத் தண்டு நேராகும். தோள்பட்டை, கழுத்து, தசைகள் இலகுவாகும். குறிப்பாக பால் கொடுப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்களைச் சரி செய்ய உதவும்

%d bloggers like this: