ஆராரோ ஆரிரரோ… ‘உயிரைக் காக்கும்!

யர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…’
மாயக் கண்ணனில் ஆரம்பித்து நம் வீட்டு குட்டிக் கண்ணன்கள்வரை தூங்குவதற்கு அம்மாவின் தாலாட்டு வேண்டும். ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. ‘தாலேலோ’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘லுலுலாயி’… என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தாம் மாறுமே தவிர, அம்மாவின்

தாலாட்டுக் கேட்காத தூளிப் பருவம் நம் தலைமுறைகளுக்குப் பழக்கமில்லை. தாலாட்டால் குழந்தைகளுக்குத் தூக்கத்தைத் தாண்டி வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? குழந்தைகள்நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

“குழந்தைகளின் உயிரைக் காக்கும் தாலாட்டு!’’
‘`இந்த உலகில்  4,000 வருடங்களாகத் தாலாட்டு ஒலித்துக்கொண்டிருக்கிறது. தாலாட்டுப் பாடல்கள், குழந்தைகளைத் தூங்கவைப்பதற்காகப் பாடப்படுபவை மட்டுமல்ல. அவற்றுக்குக் குழந்தைகளின் உயிரையே காப்பாற்றுகிற சக்தி இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. லண்டனில் கிரேட் ஆர்மாண்ட் ஸ்ட்ரீட் ஹாஸ்பிடல் (Great Ormond Street Hospital) என்கிற குழந்தைகள்நல மருத்துவமனையில் 2010-ம் ஆண்டில் தாலாட்டு குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. குறைப்பிரசவத்தில் பிறந்து, அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த குழந்தைகளிடம், அவர்களின் அம்மாக்களைத் தொடர்ந்து தாலாட்டுப் பாட வைத்திருக்கிறார்கள். சில நாள்கள் கழித்து, தாலாட்டுக் கேட்ட குழந்தைகளின் சுவாசத்திறன் அளவு அதிகரித்திருந்ததாகவும், மூச்சுவிடக் கஷ்டப்பட்ட குழந்தைகளின் சிரமம் குறைந்திருந்ததாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

இதே ஆய்வை 2013-ம் ஆண்டில்  மீண்டும் அதே மருத்துவமனையில் மேற்கொண்டார்கள். அந்த முறையும் மூச்சுவிடச் சிரமப்பட்ட குழந்தைகள் நன்றாக மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற நாள்களைவிடத் தாலாட்டுக் கேட்ட நாள்களில் தாய்ப்பால் அதிகமாகக் குடித்திருக்கிறார்கள். தவிர, சில குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு உடல்நலம் தேறியிருக்கிறார்கள். கையில் ஊசி போடும்போது ஏற்படும் வலி உணர்வுகூட, குழந்தைகளிடம் குறைந்திருந்ததாக அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது. தவிர, தாலாட்டுப் பாடிய அம்மாக்களும் மனச்சோர்வு குறைந்து காணப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வின் மூலம், அம்மாக்களின் இதமான தாலாட்டு, குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
வயிற்றில் சிசுவுடன் ஒரு கர்ப்பிணி நடக்கும்போது உண்டாகிற அதிர்வு, அந்தக் கருவுக்கு எக்கச்சக்கமான சந்தோஷத்தைத் தரும். அதே போன்ற சந்தோஷத்தை அம்மாவின் தாலாட்டைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் குழந்தை அனுபவிக்கும். அதனால், யாரோ பாடிய பாடலை யூடியூபில் போட்டுக் குழந்தைகளைத் தூங்க வைப்பதைவிட, அம்மாக்களே தாலாட்டுப் பாடுவதுதான் சிறந்தது. இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்; அம்மாக்களின் மனச்சோர்வும் நீங்கும்.’’

“வன்முறை எண்ணம் குறையும்!”
‘`அம்மாவின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் முதல் நன்மை ‘நான் தனியா இல்லை’ என்கிற பாதுகாப்பு உணர்வு. குழந்தைகளுக்குப் பேச்சைவிட பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் அதிகச் சத்தமில்லாமல், அம்மாவின் மென்மையான குரலில் பாடப்படும் தாலாட்டை, குழந்தைகள் ரசிப்பார்கள். அதனால்தான் அழுகிற குழந்தைகளைத் தாலாட்டு சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தைக் குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; தூங்கவும்வைக்கிறது.
இன்றைக்கு 50-ல் ஒரு குழந்தை தாமதமாகப் பேசுகிறது. அந்தக் காலத்தில் தாமதமாகப் பேசும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதற்குக் காரணம், பிறந்தது முதல் அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என்று பலரின் தாலாட்டையும் கேட்டு வளர்ந்ததுதான். தாலாட்டுதான் குழந்தைகள் கேட்கும் முதல் மொழி. அந்த மொழியைக் கேட்டு வளரும் குழந்தைகள் சரியான வயதில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். தாய்மொழியைக் குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்க்கும் முதல் கருவி தாலாட்டுதான்.

இன்றைய அம்மாக்கள் ஆங்கில ரைம்ஸ் போட்டுக் குழந்தைகளைத் தூங்கவிடுகிறார்கள். அதில் ஒலிப்பது அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைக்காது. அடுத்து, அம்மா பேசுவது தாய்மொழி; ரைம்ஸில் ஒலிப்பது வேறு மொழியாக இருக்கும். குழந்தை தாய்மொழியைச் சரளமாகப் பேச வேண்டுமென்றால், அம்மாக்கள் தாலாட்டுப் பாட வேண்டும்.
சில தாலாட்டுப் பாடல்கள் குழந்தைக்கும் உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். உதாரணத்துக்கு, ‘யாரடிச்சு நீ அழுதே…’ என்ற தாலாட்டில் ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு,  `மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே,  தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலூட்டும் கையாலே’ என்ற வரிகளில் உறவுகளின் மீதான பாசிட்டிவ் எண்ணம் குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தைக்கூடத் தன்னிடம் வலிக்காமல்தான் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.
`குழந்தைகளின் மனதுக்குள் மட்டுமல்ல, மூளைக்குள்ளும் இதமான சூழ்நிலையை தாலாட்டு ஏற்படுத்தும்’ என்கின்றன ஆய்வுகள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தாலாட்டுக் கேட்டு வளரும் குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் குறைவாக இருக்கும்.’’
எனவே தாலாட்டு ஒலிக்கட்டும்!

%d bloggers like this: