தி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை!’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள்

இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்து கொள்ளுங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ` பிரசாரக் களத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே தெரிகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

 

மத்திய மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். குறிப்பாக, ` பிரதமர் மோடிக்கு எந்தவகையில் எல்லாம் எடப்பாடி அரசு சேவகம் செய்து வருகிறது’ என்பதைப் பற்றி ஒவ்வொரு பிரசார மேடையிலும் பேசி வருகிறார் ஸ்டாலின். காஞ்சிபுரத்தில் வேட்பாளரை ஆதரித்துப் பேசியவர், ` அ.தி.மு.க-வை அடகுக் கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித் ஷாவிடம் அடகு வைத்ததை மீட்கவே முடியாது’ என்றார் கொதிப்புடன். இதற்கு அரக்கோணத்தில் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, ` ஸ்டாலின் இந்த ஆட்சியையே கலைக்கப் பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார் தெரியுமா. என்னுடைய மேசையின் மீது ஏறி நடனம் ஆடினார்கள். இவர்களா நாட்டைக் காப்பாற்றுவார்கள்?’ என்றார் சீற்றத்துடன். 

ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேர்தல் பொழுதுபோக்காக இருந்தாலும், அக்கட்சிகளின் உள்விவகாரங்களில் பொருமல் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ உதயசூரியன் சின்னம் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் வேண்டிய அளவு செலவழிக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது. ` அ.தி.மு.க கொடுக்கும் தொகையில் பாதி அளவுக்காவது நாமும் கொடுக்க வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். பூத் கமிட்டி முகவர்களின் கைகளில்தான் வெற்றி இருக்கிறது என்பதால், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஸ்டாலின். ` தேர்தல் வெற்றிக்குப் பிறகு நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும்’ என தேனி கூட்டத்திலேயே அவர் உறுதிபடக் கூறிவிட்டார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இல்லாததால், தலைமை கொடுக்கும் பணம் கீழ்மட்டம் வரையில் சென்று சேருமா என்ற கவலையும் கட்சியின் சீனியர்களுக்கு இருக்கிறது” என விவரித்தவர்கள், 

“ நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானதுதான். ஆனால், அதைவிடவும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம். ஏனென்றால், டெல்லியில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால அதிகாரம் மீதம் இருக்கிறது. சட்டமன்றத் தொகுதி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டாலினுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில், வெற்றி பெறாவிட்டால் தி.மு.க தலைமை மீதான நம்பகத்தன்மையில் சீர்குலைவு ஏற்படும். இதைப் பற்றிய கவலை, கட்சித் தலைமையிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான காலகட்டம் இது. அப்படி வெற்றி பெறாவிட்டால், `கொல்லைப்புறம் வழியாக மட்டும் அல்ல, தெருப்பக்கமாகக் கூட ஸ்டாலினால் பதவிக்கு வர முடியாது’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். 

இதுவரையில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் வேலைகளில் யாரும் தீவிரம் காட்டவில்லை. மக்களவைத் தொகுதிகளோடு சேர்த்து அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இதுகுறித்துக் கேட்டால், ` எல்லாம் ஒன் மேன் ஆர்மி பார்த்துக்கொள்கிறது. எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, யாரைக் கேட்டு பொறுப்பாளர்களைப் போடுகிறார்கள் எனவும் தெரியவில்லை’ என்கிறார்கள். ஸ்டாலினும் உதயநிதியும்தான் தேர்தல் களத்தில் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். துரைமுருகன், வேலூரிலேயே முகாமிட்டுவிட்டார். மற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தென்படவில்லை. கருணாநிதி இருந்தபோது, தேர்தல் பிரசாரத்தில் பெரும்படையே களமிறங்கும். இந்தமுறை அப்படி எந்தப் பட்டியலும் வெளியாகவில்லை. 

கடந்தவாரம் கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், ` இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்துகொள்ளுங்கள். தெருத்தெருவாக நின்றுகூட பேசிக் கொள்ளுங்கள். கவலைப்படாமல் போய்ட்டு வாங்க’ எனக் கூறி வந்திருந்த 400 பேச்சாளர்களுக்கும் தலா 10,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே பிரசாரப் பட்டியலைத் தயார் செய்திருக்கிறார்கள். திருச்சி சிவா கேட்டுக் கொண்டதால் அவருக்கு 2 இடங்களில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். 

தி.மு.க சரித்திரத்தில், ` பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது’ எனக் கூறி பணம் கொடுத்தது இதுவே முதல்முறை. தலைமையின் தாராளத்தை மெச்சிய பேச்சாளர்களும், ` வெயில் அதிகமாக இருக்கிறது. நாங்கள் பேசப் போனாலும் பத்தாயிரம் ரூபாய்தான் தருவார்கள். எனவே, ஒரு மாத செலவுக்குத் தலைமை கொடுத்த இந்த பத்தாயிரம் போதும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் பணிகள் அனைத்திலும் உதயநிதியின் புகைப்படமே முன்னணி வரிசையில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கட்சிப் பதவிக்கு அதிகாரபூர்வமாக வர இருக்கிறார் உதயநிதி. எது எப்படியிருந்தாலும் 18 தொகுதிகளின் மீது ஸ்டாலினின் பார்வை அழுத்தமாகப் பதிய வேண்டும்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.

%d bloggers like this: