இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான்!’ – சொந்தத் தொகுதியில் போராடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

எடப்பாடி, ஓமலூர், சேலம் தெற்கு ஆகிய 3 தொகுதிகளைத்தான் சவால் நிறைந்ததாகப் பார்க்கின்றனர் தி.மு.க-வினர். எடப்பாடி, ஓமலூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு இணையாக வாக்குகளை வாங்கிவிட்டாலே தி.மு.க-வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

`இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான்!' - சொந்தத் தொகுதியில் போராடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

சேலம், தேனி ஆகிய தொகுதிகளின் வெற்றியை தங்களுடைய கௌரவமாக பார்க்கத் தொடங்கிவிட்டனர் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும். `கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் எனத் தேர்தல் பார்ப்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் பணத்தை வாரியிறைக்கின்றனர்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாள்களே மீதம் இருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் வேட்பாளர்கள் என்ற அதிகாரபூர்வ பட்டியலை நாளை வெளியிட இருக்கிறது தேர்தல் ஆணையம். `மனு ஏற்பு, நிராகரிப்பு, சின்னம் பிரச்னை’ எனக் களேபரங்கள் ஒருபுறம் இருந்தாலும், தொகுதி நிலவரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. `அ.ம.மு.க போட்டியிடப் போகும் பொதுச் சின்னம் எது?’ என்பதற்கான விடை, ஓரிரு நாள்களில் தெரியவரும் என்பதால் பொதுமக்களிடம் தங்கள் முகங்களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அ.ம.மு.க வேட்பாளர்கள். அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தங்களுடைய சொந்தத் தொகுதியின் வெற்றியைத்தான் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு எதிராக எஸ்.ஆர்.பார்த்திபனைக் களமிறக்கியிருக்கிறார் ஸ்டாலின். வீரபாண்டி ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், செல்வகணபதி என ஆளுக்கொரு கோஷ்டிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இவர்கள் மூவரையும் அழைத்துப் பேசிய ஸ்டாலின், `எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி தேடித் தர வேண்டும்’ எனக் கூறிவிட்டார். ஆனால், இந்தக் கோஷ்டி மோதல்களால் கீழ்மட்ட அளவில் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுகிறது. இதை மனதில் வைத்து, அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன். ஆனால், அ.தி.மு.க முகாமிலோ ஏன், எதற்கு என்ற கேள்வியே இல்லாமல் பணத்தை வாரியிறைக்கின்றனர்.

நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, ஒன்றியம் என நாளுக்குநாள் எதாவது ஒரு கணக்கைக் கூறி ஒவ்வோர் இடத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொள்கிறார்கள். வண்டிக்கு 15 பேர், 20 பேர் என ஏறிக் கொள்கின்றனர். ஆண்களுக்குச் சாராயம், பெண்களுக்குப் புடவை, வழிச் செலவுக்குப் பணம் எனத் தாராளமாகச் செலவு செய்கின்றனர். தவிர, கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க நிர்வாகிகளின் செலவுகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். இதில், முக்கியக் கூட்டணிக் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது அ.தி.மு.க தரப்பு. `எதைக் கேட்டாலும் செய்யத் தயார்’ எனக் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அ.தி.மு.க முகாமில் கூடுதல் சுறுசுறுப்பு தென்படுகிறது.  

தி.மு.க-வைப் பொறுத்தவரையில், எடப்பாடி, ஓமலூர், சேலம் தெற்கு ஆகிய 3 தொகுதிகளைத்தான் சவால் நிறைந்ததாகப் பார்க்கின்றனர். மற்ற 3 தொகுதிகளில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. எடப்பாடி, ஓமலூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு இணையாக வாக்குகளை வாங்கிவிட்டாலே தி.மு.க-வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் எனக் கணக்கு போடுகின்றனர் உடன்பிறப்புகள். சேலம் தொகுதியின் வெற்றியைக் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. `முதல் அமைச்சராக இருந்துவிட்டு சொந்தத் தொகுதியில் தோற்றுவிட்டால் கெட்ட பெயர் வந்துவிடும்; கட்சிக்குள்ளும் மோசமான இமேஜை ஏற்படுத்திவிடும்’ என நினைக்கிறார். எனவே, `சரவணனை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார். 

அதேபோல், தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தின் வெற்றியை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதன்மூலம், ` அரசியல்ரீதியாகவும் கட்சிக்குள்ளும் தன்னுடைய இமேஜைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்’ என நம்புகிறார். `இந்த இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான். ஒருவரையொருவர் வீழ்த்திக் கொள்வதிலும் உறுதியாக இருக்கின்றனர்’ என விவரித்த அ.தி.மு.கவினர், தேனி தொகுதி நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்தார்கள். 

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். தற்போது வரையில் இளங்கோவனுக்காக உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் பெரியளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. `வெளியூரைச் சேர்ந்தவர், கட்சியிலும் அதிகாரத்தில் இல்லை. இதே இடத்தில் ஜே.எம்.ஆரூண் களமிறங்கியிருந்தால் உள்ளூர் நிர்வாகிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்திருப்பார்கள்’ என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

` ரவி ஜெயித்துவிட்டால் தொகுதிக்குள் தலைநிமிர்ந்து நடக்க முடியாது’ என்பதால் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் தங்கம். அவருக்கு இருக்கும் ஒரே சிக்கல், பணம்தான். பிரசாரத்துக்காகப் பணம் தண்ணீராய்ச் செலவழிக்கப்படுவதால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். தினகரன் தரப்பிலிருந்தும் அவருக்குப் பணம் எதுவும் வந்து சேரவில்லை. தங்கத்தைப் பற்றிப் பேசும் தொகுதிவாசிகளும், `அவருக்கு ஆண்டிபட்டி தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. மற்ற தொகுதிகளில் இரட்டை இலைக்குத்தான் மவுசு. இப்பகுதி மக்கள் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு வருகிறார்கள். தனிச்சின்னத்தில் நிற்பது என்பது தங்கத்துக்கு மைனஸ்தான்’ என்கின்றனர். 

தேர்தல் பிரசாரத்திலும் ரவீந்திரநாத் முன்னணியில் இருப்பதாகச் சொல்கின்றனர் களநிலவரத்தைக் கவனிப்பவர்கள். `அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு நினைவுச் சின்னம் அமைப்போம்; உசிலம்பட்டியில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விளையாட்டுத் திடல் அமைப்போம்’ என அவர் கூறும் வாக்குறுதிகளுக்கு இளைஞர் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. `மாம்பழத்துக்காக பெரியகுளத்தில் குளிர்பதனக் கிடங்கு அமைப்போம்’ எனக் கூறும் வாக்குறுதியை விவசாயிகள் வரவேற்கின்றனர். அதேநேரம், `போடிக்கு அகல ரயில் பாதை கொண்டு வருவோம்’ எனப் பேசும் திட்டங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உள்ளூர் தி.மு.க-வினரும் இளங்கோவனுக்காகத் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. `ஒருவேளை இந்தத் தொகுதியில் இளங்கோவன் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதியை காங்கிரஸே கேட்கும். உதயசூரியனுக்கு வாய்ப்பு இருக்காது’ எனவும் அவர்கள் கணக்கு போடுகின்றனர். பன்னீர்செல்வம் மகனுக்கு எதிராக இரண்டு வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், தற்போதைய நிலவரப்படி ரவீந்திரநாத் குமாரே முன்னணியில் இருக்கிறார். இப்படியொரு சூழலைத்தான் பன்னீர்செல்வமும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்’ என்கின்றனர் இயல்பாக. 

`தற்போதைய களச்சூழல் இப்படியிருந்தாலும் அடுத்து வரக் கூடிய நாள்களில் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் மேற்கொள்ளப் போகும் பிரசார யுக்திகளால் நிலவரங்கள் மாறலாம்’ என்கின்றனர் அரசியல் களத்தைக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள். 

%d bloggers like this: