கட்டுக்கட்டாய் பணம்… ‘ஹவாலா’ தி.மு.க… ‘ஆம்னி பஸ்’ அ.தி.மு.க!

வியர்க்க… விறுவிறுக்க… வெயிலில் வந்த கழுகாருக்கு, மண்பானைத் தண்ணீர் கொடுத்தோம். சுவைத்துக் குடித்த கழுகார், “தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. மின்வெட்டும் ரெடியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இதெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகப் பதறிப்போய் பல வேலைகளையும் செய்துகொண்டுள்ளது ஆளுங்கட்சி. அதாவது, பிரச்னைகள் ஏதும் வெடித்து விடாமல் அணைபோட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், தேர்தலுக்கு மறுநாளே அந்த அணை உடைந்துவிடும்” என்றபடி நம் கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
‘‘ஆளும்கட்சி கூட்டணியின் தேர்தல் வேலைகள் எப்படிப் போகின்றன?’’

‘‘பல இடங்களில் உரசல் கிளம்பிவிட்டது. மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பால் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், கூட்டணிக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் பெயரைச் சொல்ல வில்லை. த.மா.கா-வினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், கடைசி வரையில் பிடிவாதமாக அவர் பெயரைச் சொல்லாமலே பேசி முடித்திருக்கிறார்.’’
‘‘ம்…’’‘‘வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அறிமுகக் கூட்டத்திலும், ஜி.கே. வாசனின் பெயரை யாரும் சொல்லவில்லை. த.மா.கா வடசென்னை மாவட்டத்தலைவர் பிஜூ சாக்கோ தலைமையில் 300 பேர் கூடி, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ‘ஈகோ’ யுத்தம் தலைதூக்கியுள்ளதால், அ.தி.மு.க தலைமை தலையைப் பிய்த்துக்கொள்கிறது.’’
‘‘கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்துத் தேர்தல் வேலை பார்க்கும்படி, அ.தி.மு.க-வினருக்கு எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்திருக்கி றாராமே?”

“அப்படித்தான் சொல்கிறார்கள்… ஆனால், அவரே வேலூர் பிரசாரத்தில், மோடியின் பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்துவிட்டார். அந்தத் தொகுதியானது, இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி. அங்கே போய் பிரதமரின் பெயரைக் கூறி இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதைத்துக் கொள்ள வேண்டாம் என லாகவமாகத் தவிர்த்துவிட்டாராம்.’’
‘‘கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்காவிட்டால், கட்சிக்குத்தானே பின்னடைவு?”
‘‘இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளின்மீதுதான், ஆளும்தரப்பின் கவனம் இருக்கிறது. அதைத்தாண்டி, அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடும் 20 எம்.பி தொகுதிகளை மட்டும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!’’
‘‘தினகரன் தரப்பு எப்படி இருக்கிறது?”
‘‘தெம்பாக இருக்கிறது. சில நாள்களுக்கு முன்னர், ஹாங்காங்கில் வைத்து முக்கியமான ‘டிஸ்கஷன்’ சிலரால் நடத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ‘வைரமழை’யே பொழிந்த அளவுக்குத் தினகரன் கட்சிப்புள்ளிகளிடம்  உற்சாகம் தெறிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தின நாள் வரையில் தேர்தல் செலவுக்குப் பணமில்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், இது அவர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் என்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 15 ‘சி’ வரை பாயக்கூடும் என்றும் தகவல்!’’
‘‘அதுசரி, என்ன வியூகம் வகுத்துள்ளார்களாம்?”
“மாநிலம் முழுவதும் 80 லட்சம் வாக்குகள் வாங்குவதுதான் அவர்கள் இலக்கு. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், தென்காசி ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். அதேபாணியில் ஆண்டிப்பட்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைத்தான் இலக்காக வைத்துள்ளனர். மற்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ… கட்டாயம் டெபாசிட் பெற்றே ஆக வேண்டும் என தினகரன் உத்தரவிட்டுள்ளாராம். ஒவ்வொரு நாடாளு மன்றத் தொகுதிக்கும் இரண்டு லட்சம் வாக்குகளைக் குறிவைத்து வியூகம் வகுத்துள் ளது தினகரன் தரப்பு.’’
“சிவகங்கை தொகுதிக்காக காங்கிரஸுக்குள் யுத்தமே நடந்திருக்கிறதே?”
“பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதில் ராகுல் காந்தி அழுத்தமாக இருக்கிறார். மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத், தன் மகன் நகுல்நாத்துக்காக அந்த மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியைக் கேட்டுள் ளார். ராகுல் காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், தன் மகன் கார்த்தி-க்காக சிவகங்கை தொகுதியை சிதம்பரம் கேட்க, ‘அவர் மகனுக்குக் கொடுத்தால், என் மகனுக்கும் சீட் கொடுக்க வேண்டும்’ என்று கட்சி மேலிடத்தை நெருக்கி யுள்ளார் கமல்நாத். இந்தக் களேபரத்தால்தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு, முதல் பட்டியலில் வெளிவரவில்லை!’’
‘‘ஓஹோ!’’
‘‘கார்த்தி சிதம்பரத்துக்குத் தொகுதியைக் கொடுக்கக்கூடாது என்று தன் பங்குக்குக் கடும் எதிர்ப்புக் காட்டிவந்தார், அந்தத் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்த சுதர்சன நாச்சியப்பன். சுதாரித்த சிதம்பரம், நேராகச் சோனியா காந்தியின் இல்லத்துக்கே சென்று, ‘நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ, அவரையே வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தல் வேலை பார்க்கிறேன். ஆனால், என் மகனை வஞ்சிப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டாராம். பின்னர், சோனியா காந்தி அவரை மீண்டும் அழைத்துப் பேசி, ராகுல் காந்தி மூலமாக சிவகங்கைத் தொகுதியை கார்த்தி சிதம்பரத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.”
“ஆக… காலசக்கரம் அப்படியே திரும்பப் போகிறது… சிதம்பரத்தின் வாரிசுக்கு, ராஜ கண்ணப்பன் வாக்குக்கேட்கும் வரலாறும் நிகழப் போகிறதோ?”
‘‘அதேசமயம், சுதர்சன நாச்சியப்பன் மூலமாக வோட்டுகளுக்கு வேட்டு வைக்கப்படும் என்றே தெரிகிறது. ப.சிதம்பரத்தை வெளிப்படையாகவே விமர்சித்துப் பேட்டியெல்லாம் கொடுத்து அதிரடியைக் கிளப்பிவிட்டார். தன்னை சிதம்பரம் பழிவாங்குவதாகவும் உறுமியிருக்கிறார் சுதர்சன நாச்சியப்பன்.’’
“அது சரி, எங்கு பார்த்தாலும் பணவிளையாட்டு ஆரம்பமாகி விட்டது என்கிறார்கள். ஆனால், ஒரு ரூபாயைக்கூடக் கண்ணால் பார்க்க முடியவில்லையே?’’
‘‘ஆமாம், எல்லாவற்றையும் உம் கண்ணுக்குக் காட்டி விட்டுத்தான் கொடுப்பார்கள். அத்தனைக் கட்சிகளுமே ‘பழம் தின்று கொட்டைப் போட்டவை’ தான். இதுவரையில் மொத்தமே 30 கோடி ரூபாய்தான் பறக்கும்படைச் சோதனை மூலமாகத் தேர்தல் அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலும்கூடப் பெரும்பாலான தொகை, உரிய கணக்குகள் காட்டப்பட்டுச் சம்பந்தப்பட்டவர் களிடம் திருப்பித் தரப்பட்டு விடும். அதாவது, ‘சட்டவிரோதமாக வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது’ என்று ஒரு ரூபாயைக்கூடக் கணக்கில் காட்டமுடியாத நிலைதான் நீடிக்கிறது.’’
‘’பின்னே… எப்படித்தான் பணத்தையெல்லாம் கொண்டு சேர்க்கிறார்கள்?’’
‘‘அதில்தான் நம் அரசியல்கட்சியினர் அசகாய சூரர்களாயிற்றே! தி.மு.க-வைப் பொறுத்தவரை வேட்பாளர் மூலமாகவே பெரும்பாலான செலவுகள் செய்யப்படவிருக்கின்றன. ஆனாலும் கூடுதல் தொகைக்குத்தான் விஞ்ஞானபூர்வமாக யோசித்து வேலைகள் நடக்கின்றன.’’
‘‘ஓ… இதிலும் விஞ்ஞானபூர்வம்தானா?’’
பெரிதாகச் சிரித்த கழுகார், ‘‘சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையான `ஹவாலா’ பாணியில் ஏற்பாடுகள் செய்துள்ளனராம். அதாவது, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிலிருக்கும் ஒருவருக்குக் கணக்கில் காட்டாமல் பணத்தை அனுப்புவதைத்தான் ‘ஹவாலா’ என்பார்கள். குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டிலிருக்கும் நபரிடம் அந்த நாட்டு கரன்ஸியாகக் கொடுத்தால், அவருடைய ஆள் மற்றொரு நாட்டிலிருப்பவரிடம் அந்த நாட்டின் கரன்ஸியாகக் கொடுத்துவிடுவார். இதே ஸ்டைலில்தான் பணமழை பொழிகிறது’’

‘‘கொஞ்சம் விவரமாகச் சொல்லும்’’
‘‘ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கட்சிக்குச் சற்றும் சம்பந்தப்படாத பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள் என்று பலரையும் பட்டியல் போட்டு முன்கூட்டியேப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டனர். அந்த நபர்கள் மூலமாக உள்ளூரில் பணப்பட்டுவாடா நடக்குமாம். இப்படிப் பணம் கொடுப்பவர்களுக்கு, வெவ்வேறு இடங்களிலிருந்து பணம் சப்ளை ஆகிவிடுமாம்.’’
‘‘ஓ… லோக்கல் ஹவாலா. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இப்படியெல்லாம் கஷ்டப்படவில்லை போலும்.’’
‘‘ஏதோ சேதி தெரிந்துகொண்டுதான் சொல்கிறீர். அ.தி.மு.க-வுக்கு சிக்கல் ஏதும் இருக்காது என்றாலும், பட்டவர்த்தனமாகக் கடத்த முடியாது என்பதால், இந்த முறை ஆம்புலன்ஸை விடுத்து ‘ஆம்னி பஸ்’ டெக்னிக்கில் இறங்கியுள்ளனர். சோதனை ஓட்டமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளியின் வீட்டுக்குச் சென்னையிலிருந்து அதிமுக்கிய அதிகாரிகள் பலரும் ஆம்னி பஸ்ஸில் கடந்த சில தினங்களுக்குமுன் சென்றார்கள். பஸ் முழுவதும் கட்டுக்கட்டாய் நோட்டுகள் பண்டல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே உட்காருவதற்கே திண்டாடிவிட்டார் களாம் அந்த அதிகாரிகள். இப்படி அதிகார வர்க்கத்துடன் சென்றால்தான் பணத்துக்குப் பாதுகாப்பு என்று இந்த ஏற்பாடாம். பண்டல்களும் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டது!’’
‘‘பலே… பலே’’
‘‘இந்தமுறை ஆளுங்கட்சியில் அதிருப்திகள் அதிகம் என்பதால் அந்தப் பள்ளங்களை எல்லாம் பணத்தால் பூசி மெழுக முடிவு செய்திருக்கிறார்கள். மண்டலம் வாரியாகப் பிரித்து அமைச்சர்களுக்கு பட்ஜெட் அளிக்கப்பட்டிருக்கிறதாம். பணம் செல்லும் வழிகளில் செக் செய்தால், அதற்கென ‘பாஸ்வேர்டு’ நிர்ணயித்திருக்கிறார்களாம். அதைச் சரியாகச் சொல்லிவிட்டால் மறுபேச்சே கிடையாதாம்.’’
‘‘என்ன ஒரு மூளை?’’
‘‘ஆனால், சிலநாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஒருவரின் பிரசார வாகனம் ஒன்று இப்படியான சோதனையில் ‘வெயிட்டாக’ சிக்கிக் கொண்டதுதான் சோகம். அவர்களிடம் ‘பாஸ்வேர்டு சிஸ்டம்’ எல்லாம் இல்லை என்பதால், அ.தி.மு.க தரப்பிலிருந்து போன் போட்டுச் சொன்னார்களாம். அதன் பின்பும் வாகனத்தை விடவில்லை. சத்தமில்லாமல் கரன்ஸி மட்டும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகப் பேசிக் கொள்கிறார் கள்” என்றபடிச் சிறகை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: