நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… வாக்கு வங்கி அரசியல், இந்த தேசத்தின் சாபக்கேடு!

ஏதோ ஒரு காரணத்துக்காக முன்பு எல்லா திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்த ஆண்ட கட்சிகள் இப்போது அவற்றை எல்லாம் அனுமதிக்க மாட்டோம் என வாக்கு வங்கி அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுகிறார்கள். இந்த வாக்கு வங்கி அரசியல்தான் இந்த தேசத்தின் சாபக்கேடு.

நியூட்ரினோ திட்டம் ரத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும், காவிரி படுகையில் ஷேல் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம், என பல வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் இப்போது வாரிக்கொடுக்கிறார்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் எதற்காகவோ இதே அரசியல் தலைவர்கள் தான் அனுமதித்தார்கள். தொடர்ந்து நடந்து கொண்டும் இருந்தது.

இதன் விளைவுகளை அறிந்து மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்ற உடன் வாக்கு வங்கி அரசியலுக்காக அத்தனை அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி இதுவராது, அதுவராது என பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக இவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போடுவதும் போடாமல் இருப்பதும் நம் வாக்காளர்களின தலைவிதி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இன்றோ, நேற்றோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல. 1998ம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகிறது. அதற்கு முன்பே இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் இதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள் இருந்தாலும், தூத்துக்குடி பொதுமக்கள் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக கடும் எதிர்ப்பு தெரிவித்து, கொதித்து எழுந்து போராடினார்கள், அப்போது நடந்த கலவரத்தில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அச்சம் அடைந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை அவசர கதியில் மூடியது.

அனுமதி கொடுத்தது யார்?

இந்த ஆலையை திறக்க முதலில் அனுமதித்தது யார்? இந்த ஆலை இயங்க தொடர்ந்து அனுமதித்தது யார் என்றால், மத்தியலும் மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிகார பலத்தில் இருக்கும் போது அனுமதித்துவிட்டு, மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் இப்போது மூடப்படும் என எல்லாக் கட்சிகளுமே வாக்குறுதி கொடுக்கின்றன. இதற்கு பேர் தான் வாக்கு வங்கி அரசியல்.

இயற்கை எரிவாயு

அடுத்து நாம் காவிரி டெல்டா படுகைப்பகுதிக்கு வருவோம். இங்கு ஷேல் எரிவாயு, பாறை எரிவாயு என பெட்ரோல் எடுப்பதற்காக யாருடைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது என்பது ஊரறியும். அதேபோல் அத்திட்டத்தை செயல்படுத்த முனைந்த அரசு யார் என்பதும் ஊரறியும். இதற்கு எதிராக போராடிய மக்களை எப்படியெல்லாம் ஆளும் அரசுகள் ஒடுக்கின என்பதும் மக்களுக்கு தெரியும்.

மாற்றி பேசும் கட்சிகள்

இப்போது மக்களவை, மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வந்த உடன், அப்படியே அனைத்து கட்சிகளும் யூ டர்ன் அடிக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி படுகையில் இயற்கை வாயுவோ, ஷேல் எரிவாயுவோ எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். இதற்கு பெயர் வாக்கு வங்கி அரசியல் இல்லாமல் வேறு என்ன?

நியூட்ரினோ

விஞ்ஞான பூர்வமான திட்டம் என்று அழைக்கப்படும் நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்டம் தேவாரம் அருகே அப்பர்மலையை குடைந்து உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதில் வசிக்கும் விலங்குகள் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். இதற்காக முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து பல கோடி லிட்டர் தண்ணீரும் எடுக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள். இந்த திட்டத்துக்கு யார் அனுமதி கொடுத்தது. எந்த அரசு செயல்படுத்த முனைந்தது என்பது மக்களுக்கே தெரியும்.

வாக்குறுதி

இப்போது எந்த தலைவர்கள் அனுமதி அளித்தார்களோ, எந்த தலைவர்கள் செயல்படுத்தினார்களோ அவர்களே இப்போது நியூட்ரினோ திட்டம் ரத்து செய்யப்படும் என்கிறார்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது அதற்கான விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற உடன் அதனை ரத்து செய்வோம் என அரசியல்வாதிகள் கூறுவது வாக்கு வங்கி அரசியலை தவிர வேறு என்ன?

மத அரசியல்

இந்த தேசத்தில் சில கட்சிகள் தங்கள் மதத்தினருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும். தங்கள் ஜாதிக்கே ஓட்டுப்போட வேண்டும் என பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி செயல்படுவதும் நடக்கிறது. ஆனால் இதனை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றதில்லை. ஏற்பதும் இல்லை. இந்த ஜாதி தான் நான், இந்த மதம் தான் நான் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என ஓட்டுக்கேட்டு எந்த அரசியல்வாதியும் தமிழகத்தில் வெல்ல முடியாது. ஏனெனில் தமிழக வாக்காளர்கள் ஜாதி, மத அரசியலை ஏற்கவே மாட்டார்கள்.

சாபக்கேடு

அதே நேரம் வட மாநிலங்கள் போல் அல்லாமல், இங்கே வளர்ச்சி திட்டங்களை குறிவைத்து தான் வாக்கு வங்கி அரசியல் நடக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக முன்பு எதற்கெல்லாம் அனுமதி கொடுத்தார்களோ, அதை எல்லாம் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற உடன் , ஆட்சிக்கு வந்த பின் அதனை ஆதரிக்கிறார்கள், அதுதான் இங்கு பிரச்னையே. இவர்கள் அளிக்கும் இந்த வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடுவதும்,ஓட்டுப்போடமல் இருப்பதும் தமிழக வாக்காளர்களின் தலைவிதி.

%d bloggers like this: