உதயா’ வளர்ச்சிக்கு உதவலாம்… உதயசூரியன் வளர்ச்சிக்கு உதவுமா?

தி.மு.க., தேர்தல் வரலாற்றில், இரண்டாம் கட்ட தலைவர்கள், தமிழகம் தழுவிய அளவில் பிரசாரத்துக்கு வராத தேர்தலாக, இந்த லோக்சபா தேர்தல் இருக்கிறது என்ற விமர்சனங்கள், அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

கருணாநிதி இருந்தவரை, தமிழகம் தழுவிய தேர்தல் பிரசார பயணத்துக்கு அவர் செல்வதோடு, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், பல்வேறு தொகுதிகளுக்கு சென்று, பிரசாரம் செய்வர். ஒரே சமயத்தில், தி.மு.க., மேல்மட்ட தலைவர்களின் தேர்தல் பிரசாரம் பல்வேறு தொகுதிகளில் நடக்கும். இதன்

காரணமாக, தமிழகம் முழுக்கவே, தி.மு.க.,வின் தேர்தல் பிரசாரம் களைகட்டும்.கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தும் இந்த தேர்தலில், ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் மட்டுமே, தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் பிரசார பயணத்துக்கு புறப்பட்டுள்ளனர்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில், தி.மு.க.,வை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், பிரசார சுற்றுப்பயணத்தில் தென்படவில்லை. தி.மு.க., வட்டாரத்தில் விசாரித்தால், ‘இரண்டாம் கட்ட தலைவர்களும், அவர்களின் வாரிசுகளுமே பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அப்படியிருக்கும் போது, அவர்கள் எப்படி மற்ற வேட்பாளர்களை ஆதரித்து, மற்ற தொகுதிகளுக்கு பிரசாரம் மேற்கொள்வர்?’ என வேதனை பொங்க, கேள்வி எழுகிறது.
வட சென்னையில், ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி, தென் சென்னையில் தங்கம் தென்னரசின் சகோதரி, தமிழச்சி தங்கப்பாண்டியன், வேலுாரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி என, இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் களமிறங்குகின்றனர். மத்திய சென்னையில், தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதுாரில், டி.ஆர்.பாலு, அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், நீலகிரியில் ராஜா, துாத்துக்குடியில் கனிமொழி என, முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களும் தேர்தல் போட்டியில் இருக்கின்றனர்.
இப்படி இரண்டாம் கட்ட தலைவர்களும், அவர்களின் வாரிசுகளும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால், அவர்களின் தொகுதியில் மட்டுமே, கவனம் செலுத்துகின்றனர். கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்காக, பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதுபோல, கடந்த தேர்தல்களின் போது, நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும். அதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் களமிறக்கப்படுவர். அதுதொடர்பான பட்டியலும் இதுவரை வெளிவரவில்லை.

மொத்தத்தில் நடிகராகவும், நட்சத்திர பேச்சாளராகவும், இரண்டாம் கட்ட தலைவராகவும், தி.மு.க., சார்பில் தற்போது களமிறக்கப்பட்டிருப்பவர், ஸ்டாலினின் மகன், உதயநிதி மட்டும் தான். ஸ்டாலினுக்கு அடுத்து, கட்சியை தலைமை தாங்க, வாரிசை உருவாக்கும் முயற்சியாகவே, இது பார்க்கப்படுகிறது.ஸ்டாலினின் இந்த யுத்தி, உதயநிதி வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவலாம்; தி.மு.க., வின் வளர்ச்சிக்கு உதவுமா?

%d bloggers like this: