எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட்! – பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட்

கோடைக்காலம் அல்லவா… இம்முறை கழுகாருக்கு இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘உம்மைக் குளிர்விப்பதே, உம்மிடம் உள்ள சூடானச் செய்திகளை வாங்கத்தான்’’ என்றோம். கழுகார், ‘‘நிறையவே இருக்கிறது. குறித்துக்கொள்ளும்’’ என்று தகவல்களைக் கொட்டினார்…
‘‘ஊடகம் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்புகளில், ஆளும் கூட்டணிக்கு எதிரான முடிவுகள் வருவதால் ஆளும்தரப்பு ‘அலர்ட்’ ஆகியிருக்கிறது. திட்டமிட்டதைவிட அதிகமான பணத்தை இறக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது!’’
‘‘அதுதான் ஆம்னி பஸ்களிலும், அதிகாரிகளின் வாகனங்களிலுமே பணம்போவதாக ஏற்கெனவே சொன்னீரே?’’

‘‘அதிகாரிகள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லமுடியாது. போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள்தான், இதற்கு அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்கிறார்கள். கடந்த வாரத்தில், சென்னையிலிருந்து கொங்கு மண்டலத்துக்குப் பெரும்தொகையை ஏற்றிக்கொண்டு, காவல்துறை வாகனங்கள் சென்றதாக போலீஸ் வட்டாரத்திலேயேப் பேசிக்கொள்கிறார்கள்!’’

‘‘கோவையில் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஓர் உயர் போலீஸ் அதிகாரி, மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாகச் சொன்னாரே?’’
‘‘ஆமாம்… அவர் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. அவரும் எஸ்.பி அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பிலுள்ள ஒரு இன்ஸ்பெக்டரும்தான் இந்தப் பணப் பட்டுவாடா வேலைகளைச் செய்கிறார்களாம். ‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அங்குள்ள எஸ்.பி–யை மாற்றாமல் இருப்பது ஏன்?’ என்று பலரும் கேட்கிறார்கள்.’’

‘‘தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை என்னசெய்கிறது?’’
‘‘இந்தத் தேர்தலில்தான் பறக்கும்படை அதிகாரிகளின் வாகனங்களில் ஜி.பி.எஸ் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாகனங்கள் எங்கெங்கே போகின்றன என்பதை போலீஸ் அதிகாரிகள், தங்கள் இடத்திலிருந்தே கண்டுபிடித்துவிடலாம். எனவே, அந்த ரூட்டைவிட்டு, வேறு ரூட்டில் போலீஸ் வாகனங் களிலேயே பணத்தைக் கொண்டு செல்கிறார் களாம். குறிப்பாக, ஆளும்கட்சிக் கூட்டணிக்கு இந்தப் பணிகளைக் கவனிப்பதே உளவுத்துறையின் மிக முக்கியமான அதிகாரி ஒருவர்தான் என்கிறார்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அவர், ஒருகாலத்தில் கொங்கு மண்டலத்தில் டி.எஸ்.பி–ஆகவும் பணியாற்றியிருக்கிறார். அவர்தான், இந்தப் பணிகளை ஒருங்கிணைக் கிறாராம். கொங்கு மண்டலத்துக்கானப்  பணப் பட்டுவாடாவை, கேரளாவில் தங்கிக் கவனித்த அவர், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தங்கியிருந்து மாநில எல்லைகளில் உள்ள தொகுதிகளுக்குப் பணம் கொண்டுசெல்லும் வேலைகளை வழி நடத்தியிருக்கிறாராம்!’’
‘‘எதிர்க்கட்சியினர் எப்படி கொண்டு போகிறார்கள்?’’
‘‘அவர்கள் பாடு திண்டாட்டம்தான்… வாக்காளருக்குக் கொடுக்கும் பணம் மட்டும் இல்லாமல், தொகுதிக்குள் இருக்கும் தி.மு.க–வினரையும் சரிக்கட்டிவருகிறார்கள் ஆளும் கட்சியினர். உதாரணத்துக்கு, தொண்டாமுத்தூர் சட்டசபைத் தொகுதியில், தேர்தல் வேலை பார்க்கும் பொறுப்பு, அங்குள்ள எம்.எல்.ஏ ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர், ‘இது ஆளும்கட்சியின் கோட்டை. இங்கே எல்லாம் வேலை செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டாராம். அவருக்கும், ஆளும்கட்சி வி.ஐ.பி–க்கும் ரகசியத் தொடர்பு இருப்பதாகக் கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே பலரும் புகார் சொல்லியிருக்கிறார்கள். மேலும், கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்குக் கொடுத்த விவகாரத்தில், ஆளும்கட்சி வி.ஐ.பி மூலம் அந்த எம்.எல்.ஏ, எட்டு கோடி ரூபாய் அளவுக்குப் பலன் அடைந்தாராம். இதை எல்லாம் அப்போது, தி.மு.க தலைமை கண்டுகொள்ளாததின் விளைவே, இப்போது கட்சிக்கே குழிபறிக்கும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள்.”
‘‘எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் இருகட்சிகளுக்குமே இழுபறி என்கிறார்களே?’’
‘‘பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க கூட்டணியும், சில தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியும் ஜெயிக்கும் என்று கணிப்புகள் சொல்கின்றன. இப்போதைக்கு எட்டுத் தொகுதி களில் இழுபறி இருப்பதாகச் சொல்கிறார்கள். போலீஸ் கொடுத்த ரிப்போர்ட்களிலும் இது உறுதியாகியிருக்கிறதாம். டி.ஜி.பி ஆபீஸில் டார்க் ரூம் என்கிற பெயரில் ரகசிய உளவுப் பிரிவு இயங்குகிறது. கிராக் இன்டெலிஜென்ஸ் எனப்படும் இவர்களின் ரிப்போர்ட்டும் இதையேதான் சொல்கிறதாம்!’’

“எவை அந்த எட்டுத்தொகுதிகள்?’’ 
‘‘தேனி, சிவகங்கை, சேலம், பொள்ளாச்சி, மதுரை, நாமக்கல், திருச்சி, மத்தியசென்னை தொகுதிகளில் நான்கு தொகுதிகள் வி.ஐ.பி–க்கள் நிற்பவை. மூன்று தொகுதிகளுக்குமான ஓர் ஒற்றுமை, பலம் வாய்ந்த அ.ம.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதுதான். தேனியில் தங்கதமிழ்ச்செல்வனின் பிரசாரம் அனல் பறக்கிறது. பணம் கொட்டவும் அஞ்சவில்லை. பிறமலை கள்ளர் சமுதாய வாக்குகளும் வலுவாக இருக்கிறது. அதனால், அவரே ஜெயிப்பாரா அல்லது அ.தி.மு.க– வாக்குகளைப் பிரித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஜெயிக்கவைப்பாரா என்று கணிக்க முடியவில்லை. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரும் பணத்தைத் தண்ணீராய் இறைக்கிறார். அதனால், அங்கே இழுபறி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!’’
‘‘மற்ற தொகுதிகள்…?’’
‘‘சிவகங்கை தொகுதியில், கார்த்தி சிதம்பரம், ஹெச்.ராஜா இருவர்மீதுமே, கட்சிக்காரர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி… அதிருப்தி இருக்கிறது. அங்கே அ.ம.மு.க–வில் நிற்கும் ‘தேர்போகி. பாண்டி’, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குவங்கியும், அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகளும் தங்களுக்கு வெற்றியைத்தரும் என்று ராஜாவும் கார்த்தியும் கணக்குப்போடுகிறார்கள். ஆனால், வெற்றி எந்தத் திசையில் திரும்புமென்றே யூகிக்க முடியவில்லை. திருச்சியில் திருநாவுக்கரசருக்கும் இதே நிலைதான். அ.ம.மு.க வேட்பாளர் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், வாக்குகளைப் பிரிக்கிறார். தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவனுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், அ.தி.மு.க–வினரின் வேலை, அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஆக, அங்கேயும் இழுபறிதான்!’’
‘‘மதுரையில் என்ன பிரச்னை?’’
‘‘அங்கே அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கும் இடையேதான் போட்டி. வெங்கடேசனுக்கு மக்களிடம் இருக்கும் பொதுவான அறிமுகம், அவரது மனைவி செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர் என சில சாதகங்கள் இருக்கின்றன. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புப் பெரிதாக இல்லை. ராஜ் சத்தியனுக்கு சமூக வாக்குகள் பலம் இருக்கிறது. அவருக்கு எதிராகவும் கட்சிக்குள் ஏராளமான உள்ளடி வேலைகள் நடக்கின்றன. முன்னாள் சபாநாயகர் மறைந்த காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, அ.ம.மு.க–வில் நிற்பதால், அவர் சமூக வாக்குகளும் பிரியும். அதனால், அங்கேயும் யாருக்கு வெற்றி என்பதை எளிதாகக் கணிக்க இயலவில்லை.’’
‘‘சரி… சேலம், நாமக்கல், பொள்ளாச்சி?”
‘‘சேலம் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குவங்கி, பலமாக இருக்கிறது. முதல்வர் ஊர் என்பதால் ‘பசை’யாக கவனிக்கிறார்கள். அதேசமயம் அங்கு அ.ம.மு.க வேட்பாளரான எஸ்.கே.செல்வத்துக்கு இவரைவிட செல்வாக்கு இருக்கிறது. தவிர, தொகுதியில் பி.ஜே.பி மீதும் அதிருப்தி இருக்கிறது. இவை எல்லாம் ஆளும்கட்சிக்குப் பாதகங்கள். தி.மு.க சார்பில் நிற்கும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்குத் தொகுதியில் அறிமுகம் இருந்தாலும், சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லை. கூட்டணிக் கட்சியினரும் சுணக்கம் காட்டுகிறார்கள்.
நாமக்கல் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பனுக்கும், கொ.ம.தே.க வேட்பாளர் சின்ராஜுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. இருவருக்கும் சமூக வாக்குகள் மொத்தமாகக் கிடைக்க வாய்ப்பு இல்லை. இருதரப்பும் பணத்தை வாரி இறைப்பதால், போட்டிக் கடுமையாக இருக்கிறது. அ.தி.மு.க–வின் கோட்டையாக இருந்த பொள்ளாச்சியில், பாலியல் விவகாரத்தால் ஓட்டை விழுந்துவிட்டது. எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய தொகுதியில், இப்போது வாக்குக் கேட்கவே ஆளும்கட்சியினர் அஞ்சுகின்றனர். ஆனாலும், தி.மு.க எளிதில் ஜெயித்துவிடும் சூழ்நிலை அங்கில்லை!’’
‘‘மத்தியசென்னை தி.மு.க கோட்டையாயிற்றே?’’
‘‘உண்மைதான்… ஆனால் தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினரின் வாக்குகள், பா.ம.க வேட்பாளர் சாம் பால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் தெஹ்லான் பாகவி, மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமீலா நாசர் ஆகியோருக்குப் பிரிகின்றன. தேர்தல் காலத்தில் மட்டும் கட்சியில் தலைகாட்டுபவர் என்று தயாநிதி மாறன்மீது உடன்பிறப்புகளும் உஷ்ணத்தில் உள்ளனர். பணமும் எதிர்பார்த்தபடி இறங்கவில்லை என்ற கோபமும் அவர்களிடம் தெரிகிறது. ஆக அங்கேயும் தி.மு.க எளிதில் ஜெயிக்க வாய்ப்பில்லை. இன்னொரு விஷயம், இப்போதே சொல்லிவிடுகிறேன். கடைசி நேரத்தில் எதுவும் மாறலாம். குறிப்பாக, இந்த எட்டுத் தொகுதிகளிலும் இழுபறி இருப்பதால் வாக்கு எண்ணிக்கையின்போது ஆளும்கட்சி ஆதரவு தேர்தல் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தீர்மானிக்கும். அதனால் அங்கே அடிதடி, கலவரம் போன்ற பிரச்னைகள் வெடிக்கவும் வாய்ப்பு அதிகம். இதையும் கணித்துள்ள ஐ.எஸ் ரிப்போர்ட் அரசுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுத்திருக்கிறது!’’

‘‘அகில  இந்திய அளவில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?’’
‘‘கடந்த வாரம்வரை உற்சாகமாக இருந்த பி.ஜே.பி, தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தனியாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. முன்பு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 280 இடங்களைப் பிடித்துக் கூட்டணி ஆட்சி அமைத்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தது. ஆனால், 2014–ம் ஆண்டில் பெரியஅளவில் கைகொடுத்த உத்தரப்பிரதேசத்தில் இந்தமுறை மிகவும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்புத் தகவல் முதல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.’’
‘‘அடுத்து?’’
‘‘ஐந்து கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.பி ரிப்போர்ட் போயிருக்கிறது. அதைவிட, மார்ச் 27-ம் தேதியன்று பிரதமர் மோடி சாதனை என்று சொல்லி வெளியிட்ட அறிவிப்பு, பி.ஜே.பி–க்கு எதிராகத் திரும்பிவிட்டது!’’
‘‘மிஷன் சக்தியைச் சொல்கிறீரா?’’
‘‘ஆமாம்… பிரதமர் அறிவிப்பதற்கு முதல் நாளில் அவரது அலுவலகத்தில் இதைப்பற்றி ஆலோசனை நடந்திருக்கிறது. ‘தேர்தல் நேரத்தில் இதை பிரதமர் அறிவித்தால் நன்றாக இருக்காது’ என்று உயரதிகாரிகள் சிலர் சொல்லியிருக்கிறார் கள். எதையும் பொருட்படுத்தாமல் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர். அதுதான் ‘அட்டர்ஃப்ளாப்’ ஆகிவிட்டது!’’
‘‘தமிழ்நாட்டில் எத்தனைத் தொகுதிகளில் பி.ஜே.பி கூட்டணி ஜெயிக்கும் என்று அவர்களின் கருத்துக்கணிப்பு சொல்கிறது?’’
‘‘40-ல் 24 முதல் 28 தொகுதிகள்வரை என்கிறதாம். ஆனால், உண்மை நிலை அப்படி யில்லை என்று தமிழக பி.ஜே.பி–காரர்களே புலம்புகிறார்கள்.’’ என்ற கழுகார் சிறகு விரித்துப் பறந்தார்!

%d bloggers like this: