கனிமொழி முன்னிலையிலேயே சண்டை; ரூ.5 கோடி டிமாண்ட்!’ – தெறிக்கவிடும் தூத்துக்குடி தி.மு.க

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டி சண்டையால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் மாவட்ட நிர்வாகிகள் நடத்தும் ஈகோ யுத்தத்தைக் கனிமொழி உற்றுக் கவனித்து வருவதால், தேர்தலுக்குப் பின்னர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் எனக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கருணாநிதியின் முரட்டுப் பக்தன் எனத் தன்னை வர்ணித்துக்கொண்ட என்.பெரியசாமி மாவட்டச் செயலாளராக இருந்தவரையிலும், அவரது விரல் அசைவில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரைப் பகைத்துக்கொண்டு கட்சியில் செயல்படுவது கடினம் என்கிற நிலையை ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு எதிராக ஒரு சிலர் செயல்பட்ட போதிலும், அவர்களால் தனித்துச் செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தார். 

பெரியசாமியின் மறைவுக்குப் பின்னர், அவரால் ஓரங்கட்டப்பட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தெற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். அத்துடன் உமரி சங்கர் உள்ளிட்டோரும் கட்சிக்குள் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ஆனாலும் கூட, பெரியசாமியின் மகளான கீதாஜீவன், மகன் என்.பி.ஜெகன் ஆகியோர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகக் கோஷ்டிகளைத் திரட்டி தனி அணியாகவே செயல்பட்டு வருகின்றனர். 

இது தவிர, முன்னாள் எம்.பி-யான ஜெயதுரை, மாநில நிர்வாகியான ஜோயல் ஆகியோரும்கூட தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோஷ்டி சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும் எனக் கட்சி மேலிடம் நம்பியிருந்தது. 

ஆனால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆளாளுக்கு கோஷ்டிகளைச் சேர்த்துக்கொண்டு மற்றவரை மட்டம் தட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் கோஷ்டி மோதல் கடந்த 25-ம் தேதி கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்தபோது வெளிப்படையாகவே வெடித்தது. கனிமொழி முன்பாகவே அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயதுரை, கீதாஜீவன், என்.பி.ஜெகன் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் கட்சித் தலைமை வரையிலும் புகாராகச் சென்றிருக்கிறது. 

வேட்புமனுத்தாக்கலுக்கு கனிமொழி தயாரான 25-ம் தேதி, அவர் தங்கியிருந்த குறிஞ்சிநகர் வீட்டில் இருந்தவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேருமாறு அனிதா ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். அப்போது அங்கிருந்து செல்லாமல், கனிமொழி காரிலேயே கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்லக் காத்திருந்த ஜெயதுரையிடம் அனிதா ராதாகிருஷ்ணனும் அவரின் ஆதரவாளரான உமரி சங்கர் என்பவரும் ஒருமையில் பேசி அருவருக்கத்தக்க வகையில் சண்டையிட்டுக் கொண்டனர். 

அப்போது சமாதானம் செய்து வைத்த கீதாஜீவனிடம் எகிறிய ஜெயதுரை, ‘உங்க அப்பா இருந்தவரைக்கும் என்னை ஊருக்குள்ளேயே விடலை. அவன் என்னைக் கொல்ல நினச்சான்’ என எகிறியிருக்கிறார். அதனால் ஆவேசம் அடைந்த கீதாஜீவனின் சகோதரரான என்.பி.ஜெகன், ‘யோவ்.. மரியாதையாப் பேசு. அளவுக்கு அதிகமாப் பேசினால் நடக்கிறதே வேறு’ எனக் கத்தியிருக்கிறார். வேட்புமனு தாக்கலுக்குச் செல்லக் காத்திருந்த கனிமொழி இந்தச் சண்டையைக் கண்டு அதிர்ந்துபோய் விட்டாராம்.

தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனிமொழி சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கும் கோஷ்டி அரசியல் குறைந்தபாடில்லை. அதனால் கீதாஜீவன் ஏரியாவில் கூட்டத்தைக் கூட்டுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தனது ஏரியாவில் கூட்டத்தைக் கூட்டி ஆரவாரம் செய்யும் அனிதா ராதாகிருஷ்ணன், அதற்கான செலவுக்கு கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில், அருகில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் பணம் கொடுக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது திருச்செந்தூர் காவல்நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த வீடியோ விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் அ.தி.மு.க-வினர், கனிமொழியைத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடை செய்ய வேண்டும் என்றும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்கும் விவகாரத்தை சீரியஸாக எடுத்து தி.மு.க-வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய இருக்கிறது. ஆரத்தி தட்டில் பணம் வைத்து, தேர்தல் நேரத்தில் கனிமொழிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாக எதிரணியினர் குற்றம் சாட்டுகிறார்கள். 

இதனிடையே, தேர்தல் செலவுக்காக கட்சி நிர்வாகிகளிடம் அனிதா ராதாகிருஷ்ணன் பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் கனிமொழியிடமும் கட்சித் தலைமையிடமும் புகார் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஞானதிரவியத்திடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் தலைமைக்குப் புகார் சென்றிருப்பதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். நெல்லை வேட்பாளரான ஞானதிரவியம் பெரும் செல்வந்தர் என்பதால் அவரிடம் 5 கோடி ரூபாய் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் நெருக்கடி கொடுப்பதால் புகார் செய்திருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் நடக்கும் நிலவரங்கள், கோஷ்டி மோதல்கள், தேர்தல் பிரசாரக் களத்தில் நடக்கும் உள்ளடி வேலைகள் என அனைத்தையும் மிகுந்த கவனமாக கனிமொழி கவனித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் இந்த களேபரங்களுக்காக நடவடிக்கை எடுத்தால் தனது வெற்றிக்குப் பாதிப்பாக அமைந்துவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். 

அதே சமயம், தேர்தல் முடிந்ததும் கட்சித் தலைமையிடம் தூத்துக்குடி தி.மு.க நிர்வாகிகள் குறித்த விவரங்களை எடுத்துக் கூற கனிமொழி திட்டமிட்டு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் தரப்பினரின் கோஷ்டி மோதல்களால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் குறித்தும் பண விவகாரங்களில் மாவட்ட நிர்வாகிகள் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் ஸ்டாலினிடம் அழுத்தமாகப் புகார் செய்யத் திட்டமிட்டுள்ளாராம். அதனால் தேர்தல் முடிந்த பிறகு, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என அடித்துச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்!

%d bloggers like this: