Advertisements

எடப்பாடி ஆட்சி கவிழுமா?

மிழகத்தில் எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே கொண்டுவந்துவிடும் அளவில், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஆட்சியை அ.தி.மு.க தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா என்பதுதான் எட்டு கோடி மக்களின் இதயங்களை எகிறவைக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க 135 இடங்களை வென்றது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களில் 18 பேர் டி.டி.வி தினகரன் பக்கம் சாய்ந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி (திருவாரூர்), திருப்பரங்குன்றம்- ஏ.கே.போஸ், சூலூர்- கனகராஜ் ஆகிய எம்.எல்.ஏ-க்களின் மரணம் காரணமாக மூன்று தொகுதிகள், தண்டனை பெற்றதால் பதவியைப் பறிகொடுத்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி என நான்கு தொகுதிகள் காலியாகின. ஆகமொத்தம் தற்போது 22 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், வழக்குகளைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வில்லை. தேர்தல் அறிவிக்கப் பட்டபின் சூலூர் கனகராஜ் மரணமடைந்தார். அங்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தற்போதுள்ள நிலையில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் பலம் சபாநாயகர் நீங்கலாக 113. இதில், இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அடக்கம். இவர்களில் தனியரசு மட்டும் இப்போதும் அ.தி.மு.க பக்கம் உள்ளார். மற்ற இருவரும் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். அதேசமயம், இந்த 113 பேரில் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய மூன்று பேர் தினகரனுக்கு ஆதரவாக நிற்கின்றனர். ஆகமொத்தம் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஐந்து பேர் எடப்பாடி அரசுக்கு எதிராகவே நிற்கிறார்கள். ஆக, சட்ட சபையில் அ.தி.மு.க-வின் உண்மையான பலம் 113-5= 108 மட்டுமே.
தமிழக சட்டமன்றத்தில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. தற்போது 212 உறுப்பினர்கள்தான் உள்ளனர். 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் முடிந்தால், இது 230 என்று உயர்ந்துவிடும். அத்தகைய சூழலில், ஆட்சியைத் தக்க வைப்பதற்கு 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும். கருணாஸ், தமீமுன் அன்சாரி, பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய ஐந்துபேரும் எடப்பாடி அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால், 108 என்கிற நிலையில் இருக்கும் தன்னுடய பலத்தை அ.தி.மு.க உயர்த்தியே ஆகவேண்டும். அதனால், இடைத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளை அந்தக்கட்சி கைப்பற்றியாக வேண்டும். சபாநாயகரையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஏழு தொகுதிகளில் வென்றால் கூட போதும். அப்படியில்லையென்றால், ஆட்சி கவிழ்வது உறுதி.
18 சட்டமன்றத் தொகுதிகளில், ‘ஜூனியர் விகடன்’ தற்போது நடத்தியுள்ள கருத்துக் கணிப்பின்படி, அதிகபட்சமாக 17 தொகுதிகளில் தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும் நிலை இருக்கிறது. இந்த முடிவுகளே, இடைத்தேர்தல் இறுதி முடிவுகளாக வரும்பட்சத்தில் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்துவிடும். அதேசமயம், உடனேயே தி.மு.க ஆட்சியைப் பிடித்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. தி.மு.க 88, காங்கிரஸ் 8 மற்றும் முஸ்லிம் லீக் 1 என தி.மு.க கூட்டணிக்கு மொத்தம் 97 எம்.எல்.ஏ-க்கள் இப்போது உள்ளனர். 17 இடங்களில் வெற்றிபெற்றால், இது 114 என்றாகிவிடும். இத்தகையச் சூழலில், அ.தி.மு.க ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஏற்கெனவே அ.தி.மு.க-வுக்குள்ளேயே கலகவாதிகளாக இருக்கும் 5 பேரும் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும்பட்சத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும்.

ஆனால், ‘தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் சிலவற்றைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமல்ல, ‘ஏற்கெனவே காலியாக இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி களுக்கு, தற்போது இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்’ என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவேளை, 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 4 தொகுதி களுக்கும் (நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தேதிக்குள்) சேர்த்தே தேர்தல் நடந்தால், அதிலும் தி.மு.க வெற்றிபெறும்பட்சத்தில் எளிதாக அது ஆட்சியில் அமர வாய்ப்பு உருவாகிவிடும். ஒருவேளை, பெரும்பாலான தொகுதிகளில், அ.தி.மு.க-வே வெற்றிபெற்றால்… ஆட்சியின் ஆயுள் கெட்டியாகிவிடும்.
இந்தக் கணக்குகளை எல்லாம் பலரும் போட்டுப் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குக்கு 500 ரூபாய், சட்டமன்றத் தொகுதி களில் வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதேசமயம், எதிர்க்கட்சித் தரப்பில் இப்படி பணத்தை அள்ளிவிட முடியாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் மூலமாக கெடுபிடி காட்டப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, கணிப்புகளை எல்லாம் காசு காலி செய்துவிடும் வாய்ப்புதான் அதிகம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: