Advertisements

எடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா?

டைமே இல்லை…’ – இந்த ஒரு சாக்கை எத்தனை விஷயங்களுக்குக் காரணமாகச் சொல்லிச் சமாளிக்கிறோம்?

குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பார்த்துப் பார்த்துச் சமைத்துக்கொடுப்பார்கள். குழந்தைக்குப் பிடிக்கிற பொட்டேட்டோ ஃப்ரை, சுகர் பேஷன்ட்டான மாமனாருக்கு ஆகாதே என்கிற கவலையில் அவருக்காக இன்னொன்று சமைப்பார்கள். கணவரின் இதயநலனில் அக்கறைகொண்டு அவருக்கு மட்டும் ஆலிவ் எண்ணெயில் சமைப்பார்கள். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிக்குக்கூட பிடித்தது, பிடிக்காதது அறிந்து செய்வார்கள். ஆனால், தமக்கென வரும்போது, அலட்சியப்படுத்துகிறவர்கள் பெண்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமலிருக்க அவர்கள் சொல்லும் ஒரே காரணம், ‘டைமே இல்லை’ என்பது. டயட் விஷயத்திலும் அவர்களுக்கு இதுவே சாக்கு.

‘என் ஒருத்திக்காகத் தனியா சமைக்க முடியுமா?’ என்று தனக்குப் பொருந்தாதவற்றையும் பிடிக்காதவற்றையும் சாப்பிடுகிறவர்களே பெரும்பான்மை. என்ன கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதைச் சாப்பிடுவது… பிறகு அதற்காக வருத்தப்படுவது… இதுதான் பலரின் வாழ்க்கையிலும் நடக்கிறது. வாரத்தில் ஒருநாள் சரியான திட்டமிடல் இருந்தாலே அந்த வாரம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

எடை குறைப்புக்காக என்னைச் சந்திக்க வருகிறவர்களில் பலரும் செய்கிற பரவலான தவறுகள் என்னென்ன தெரியுமா?

* தினமும் இரவு உணவுக்கு தோசை சாப்பிடுவது. தொட்டுக்கொள்ள பொடி, சாம்பார் அல்லது மீந்து போன கிரேவி.

* பகல் உணவுக்கு முன்பும் மாலையிலும் பசிக்காக பிஸ்கட் சாப்பிடுவது. ‘வேற எதுவும் கிடைக்கலை’ என்கிற சமாதானத்துடன்.

* எப்போதெல்லாம் பசிக்கிறதோ, அப்போதெல்லாம் காபி, டீ குடிப்பது.

* இரவு உணவை 9 மணிக்கு மேல் எடுத்துக்கொள்வது. என்ன செய்யப் போகிறோம், என்ன சாப்பிடப் போகிறோம் என்கிற திட்டமிடல் இல்லாததே காரணம்.

வார இறுதி நாள்களை எப்படி ஆரோக்கியமாக மாற்றிக்கொள்ளலாம்?

* புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றில் சட்னி தயார் செய்துவைத்துக்கொள்ளலாம்.

* கொண்டைக்கடலை, காராமணி போன்றவற்றை ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளலாம்.

* ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், செக்கு எண்ணெய் வகைகள், நட்ஸ், பருப்பு, சீட்ஸ் போன்றவற்றை வாங்கிவைக்கலாம்.

* அசைவ உணவுகளை வாங்கி, ஒரு வேளைக்கு ஏற்ற அளவுள்ள பெட்டிகளில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கிலோ மீன் வாங்கினால் அதை நான்கு கால் கிலோ அளவுகளில் நான்கு பெட்டிகளில் மஞ்சள்தூளும் மிளகாய்த்தூளும் தடவி வைக்கலாம். தேவைப்படும்போது சமைத்துச் சாப்பிடலாம்.

 

பிரச்னைக்குரிய பகுதியைக் கண்டறியுங்கள்

சிலருக்கு மாலைநேர நொறுக்குத் தீனி தான் பிரச்னையே. காலையிலிருந்து மாலை வரை ஆரோக்கியமாக சாப்பிட்டிருப்பார்கள். மாலையில் வடை, பஜ்ஜி, சமோசா, பப்ஸ் எனச் சாப்பிட்டு அத்தனை மணி நேர ஆரோக்கியத்தையும் காலியாக்கிக் கொள்வார்கள். சிலர் இரவு உணவை ரொம்பவே தாமதமாகச் சாப்பிடுவார்கள். வேலை முடிந்து வீடு திரும்பும்போது கொலைப் பசியுடன் இருப்பார்கள்.

இவர்களுக்கும் இருக்கிறது தீர்வு!

மாலையில் பசியெடுக்கும் 4 முதல் 6 மணிக்குள் பொட்டுக்கடலை, பழம், சுண்டல், சோயா மில்க், சாண்ட்விச் போன்ற ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு சாப்பிடும் முன் அநியாயத்துக்குப் பசிக்கிறதா? மாலையிலேயே கொஞ்சம் பலமாக சாப்பிட்டுவிடலாம். சாம்பார் இட்லி, ஒரு தோசை, ஒரு பெசரட்டு, அடையுடன் அவியல், ஒரு ராகி தோசை… இவற்றில் ஏதேனும் ஒன்று. வீட்டுக்கு வந்த பிறகு வேகவைத்த காய்கறிகள் அல்லது சூப் ஒரு கப், கூட்டு அல்லது பொரியல் ஒரு கப்,  அல்லது ஒரு பழம், ஒரு கப் பால் சாப்பிட்டு அன்றைய தினத்தை முடித்துக்கொள்ளலாம். மாலையில் நீங்கள் உட்கொண்ட டிபன்தான் உங்கள் இரவு உணவு. அதைக் கணக்கில் கொள்ளாமல் மறுபடியும் இரவில் இட்லி, தோசை சாப்பிடக் கூடாது.  இரவு 8 மணிக்கு மேல் பலமாக எதையும் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.

ஏன்?

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால், அது செரிக்க இன்னும் 2 மணி நேரமாகும்.  அதனால் உங்கள் உறக்கமும் தாமதமாகும்.

போனில் பேசுவீர்கள். வாட்ஸ்அப்பில் சாட் செய்வீர்கள். டி.வி பார்ப்பீர்கள். தூங்கும் நேரத்தைக் கோட்டைவிட்டு, நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருப்பீர்கள். இரவு உணவை முறையாகத் திட்டமிடாததன் விளைவுகளே எல்லாம்.

இரவு உணவுக்கும் தூக்கத்தும் இடையில் 3 மணி நேரம் இடைவெளி விட்டுப் பழகிப் பாருங்கள்.  உங்கள் வயிறு பெருக்காது. நல்ல தூக்கம் வரும். மொத்தத்தில் அன்றைய நாளே அருமையாக இருந்ததாக உணர்வீர்கள்.

இவருக்கு நேரம் இருக்கிறது!

தியேட்டர் அதிபரான அந்தப் பெண் என் கிளையன்ட். ஒரு நாளைக்குத் தேவையான அனைத்தையும் சின்னச் சின்ன டப்பாக்களில் நிரப்பி எடுத்து வருவது அவரது வழக்கம். தியேட்டர் கட்டுமான ஸ்டேஜில் இருந்த நேரம் அது. அதிகாலையில் சீக்கிரமே சைட்டுக்குப் போக வேண்டும். அதன் பிறகு அந்த நாள் முழுவதும் நிறைய மீட்டிங்ஸ் இருக்கும். பாதாம், உலர் திராட்சை, பேரீச்சை, வால்நட்ஸ், பிஸ்தா என எல்லாவற்றையும் கொண்டு போவார். எடுத்துச் செல்ல எளிதான ஆப்பிள், கமலா ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யா போன்றவற்றில் ஏதேனும் ஒன்று… டெட்ரா பேக்கிங்கில் வரும் சோயா மில்க் 200 மி.லி., பொட்டுக்கடலை, தேங்காய் துண்டுகள், மோர், மீல் ரீப்ளேஸ்மென்ட் பவுடர்கள் (மெடிக்கல் ஷாப்புகளில் சின்னச்சின்ன சாஷேக்களில் கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்த புரதப் பவுடர்), வீட்டிலேயே செய்த சுண்டல், சாலட் போன்றவற்றை பக்கா வாகத் திட்டமிட்டு எடுத்துச் செல்வார். வார இறுதியில் அந்த வாரம் முழுவதற்கும் இப்படி பிளான் செய்து கொள்வார். ‘டைம் இல்லை’ என்று சாக்கு சொல்லவில்லை இவர். எடை குறைப்பில் தன் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

நடிகர்களைப் பார்த்து ஏங்காதீர்கள்!

 

டிகர்களின் வாழ்க்கையைப் பார்த்து ஏங்கும், பொறாமைப்படும் குணம் நம்மில் பலரிடம் இருக்கும். ‘நினைச்சதைச் சாப்பிடலாம்… நினைச்சதைச் செய்யலாம். ராஜபோக வாழ்க்கை அது’ என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் நீங்களும் நானும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல அவர்களால் நினைத்த நேரத்துக்கு நினைத்ததைச் சாப்பிட முடியாது. படத்துக்குப் படம் அவர்கள் வேறு வேறு தோற்றத்துக்குத் தயாராக வேண்டும். எடை குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி, முகத்தில் களை குறையக்கூடாது. நடிகர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? அவர்களுக்கும் உடம்புக்கு முடியாமல் போகும். ஹார்மோன் குறைபாடுகள் வரும். மனநிலையில் மாற்றங்கள் இருக்கும்.

படப்பிடிப்புக்காக அவர்கள் எங்கெங்கோ பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப் போகிற எல்லா இடங்களிலும் அவர்களுக்கான உணவுகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. டாய்லெட் வசதிகள் இல்லாத இடங்களில் ஷூட்டிங் நடக்கும்போது தண்ணீர் குடிப்பதையே தவிர்த்துவிடுவதாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். இரவு தாமதமாக ஷூட்டிங் முடிந்து, மறுநாள் காலையில் சீக்கிரமே தொடங்கும் நிலையையும் அவர்கள் சகித்துக்கொண்டாக வேண்டும். உணவும் உறக்கமும் பாதிக்கப்படுவதால் வயிற்றுப்போக்கும் வேறு உடல் உபாதைகளும் வரலாம். இத்தனைக்குப் பிறகும் வேலையில் அவர்கள் காட்டும் முனைப்பு என்னை ஆச்சர்யப்படுத்தும். புதிய படத்தில் புதிய கெட்டப்புக்காக உப்பில்லாத உணவுக்கும், வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுகிற டயட்டுக்கும், திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கண்டிஷனுக்கும் 100 சதவிகிதம் தயாராவார்கள். அந்த அர்ப்பணிப்பு எல்லோரிடமும் இருந்தால் இலக்கை எளிதில் எட்டலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: