ஐ.சி.யூ-வில் உள்ள ஆட்சியை அ.தி.மு.கவே பார்த்துக் கொள்ளட்டும்!’ – பின்வாங்கிய பி.ஜே.பி.

நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது தேர்தல் ஆணையம். எடப்பாடியின் அரசு நீடிக்குமா? நீடிக்காதா என்கிற கேள்விக்கு இன்னும் ஒரு மாதத்தில் முடிவுதெரிந்துவிடும். இந்தத் தேர்தல் அறிவிப்பு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் “நான்கு தொகுதி இடைத்தேர்தல் தள்ளிப்போனதை எங்களுக்குச் சாதகமாகவே எடுத்துக்கொண்டோம். நாங்கள் செய்த பெரிய தவறு, நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டது. சட்டமன்றத்திற்குத் தனியாக நடத்தியிருந்தால் எங்கள் கை ஓங்கியிருக்கும். இந்த நான்கு தொகுதித் தேர்தலை இப்போது நடத்தமாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால், பி.ஜே.பி தரப்பு எங்கள் காலை வாரிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கும் விவரம் நேற்றே அ.தி.மு.க தலைமைக்குத் தெரியும்” என்கிறார்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு பி.ஜே.பி என்ன செய்யமுடியும் என்கிறார்கள் டெல்லி பி.ஜே.பி தரப்பினர். “நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நான்கு தொகுதிகளை மட்டும் நடத்தாமல் நாங்கள் எப்படி காபந்து பண்ணமுடியும். இந்த ஆட்சியே ஐ.சி.யூவில்தான் உள்ளது. எத்தனை நாள்கள் நாங்களே பாதுகாக்கமுடியும். அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்குத் தேவையான தொகுதியை ஜெயிப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்கட்டும். பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் ஆயிரம் சிக்கல் இருக்கும்போது,அ.தி.மு.க-வைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது” என்கிறார்கள்.

அதேநேரம் இந்த இடைத்தேர்தலில் ஒருவேளை அ.தி.மு.க தரப்பு தங்கள் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதியை வென்றால்கூட மத்தியில் தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைந்தால், இந்த ஆட்சியை தி.மு.க நீடிக்கவிடாது என்று பி.ஜே.பி தரப்பு உறுதியாக நம்புகிறது. இந்தத் தகவல் அ.தி.மு.க வுக்குத் தெரியாமல் இல்லை.

`தேர்தல் பிரசாரங்களில் தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்கிப் பேசும் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியைக் கண்டுகொள்ளாமல் விடுவது எதிர்காலத் திட்டதோடு என்று பி.ஜே.பி தரப்பு நினைக்கிறது. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் இப்போது அ.தி.மு.க ஆட்சிக்குத் தேர்தல் களத்தில் சோதனையை வைத்துவிட்டார்கள். அதே நேரம் கடைசிக் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கும் ஜாக்பாட் பரிசு காத்திருக்கிறது’ என்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.`பதினெட்டு தொகுதிகளில் நாங்கள் நினைத்தது போல கரன்சிகளை களத்தில் இறக்கமுடியவில்லை. ஆனால், இந்த நான்கு தொகுதிகளில் எங்கள் முழுபலத்தையும் காட்டுவோம்’ என்கிறார்கள் நம்பிக்கையோடு. 

%d bloggers like this: