தி.மு.க 30 – அ.தி.மு.க 7 – இழுபறி 3

மிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த சர்வே ரிசல்ட் பேப்பர்களை வைத்துக் கொண்டு பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தது, ஜூ.வி. டீம். சத்தம் இல்லாமல் அலுவலகத்துக்குள் ‘என்ட்ரி’ கொடுத்த கழுகார்… ‘‘எப்போதும் என்னிடம்தானே கேள்வி கேட்கிறீர்கள். இப்போது நான் உங்களிடம் கேள்வி கேட்கப் போகிறேன்” என்று பீடிகை போட்டபடி அமர்ந்தார்.
“கேளுங்கள்” என்றோம்.
“உமது கருத்துக்கணிப்பு ரிசல்ட் என்ன?”

“சட்டமன்ற இடைத்தேர்தல் சர்வே பணிக்காக நமது நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் என 90 பேர் கொண்ட  படையைக் களத்தில் இறக்கினோம். அவர்கள், இடைத்தேர்தல் நடக்கவிருக்கிற 18 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் பத்தாயிரம் நபர்களைச் சந்தித்து சர்வே எடுத்துள்ளனர். நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் அந்த மாவட்ட நிருபர் உட்பட மூன்று நபர்கள் கள நிலவரத்தை ஆராய்ந்தனர். ஐந்து தொகுதிகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் என நியமிக்கப்பட்டு, அவர்கள் களப்பணியிலிருந்தவர்களிடம் பேசி அப்டேட் செய்துவந்தனர். இழுபறியாக இருந்த சில தொகுதிகளுக்கு மேற்பார்வையாளர்கள் நேரிலும் சென்று களநிலவரத்தை அலசி ஆராய்ந்தனர். இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்தக் குழுவும் இந்தப் பணிகளுக்காகக் கடுமையாக உழைத்துள்ளது.”
“அருமை… அருமை…”
“பொதுவாக  பெருவாரியான தமிழக மக்களின் மனநிலை இப்போது தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அ.தி.மு.க வாக்கு வங்கியில், சரிவு ஏற்பட்டுள்ளது நமது சர்வே முடிவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில்  17 தொகுதிகளில் தி.மு.க-தான் முன்னிலையில் இருக்கிறது. அந்தத் தொகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வே குறித்துத் தனிக்கட்டுரையாகத் தந்துள்ளோம். அதைப் படித்துக்கொள்ளும்.”
“நல்லது. நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்களைச் சொல்லும்”

“40 நாடாளுமன்றத் தொகுதிகளிலுமே, அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைதான் உள்ளது. அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ள தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது பலமில்லாத எதிரணி வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போன்றவைதான் காரணமாக இருக்கின்றன.  மோடி அரசுமீதான அதிருப்தி மற்றும் தினகரனின் அ.ம.மு.க செய்துவரும் களப்பணி ஆகியவை மக்கள் மத்தியில் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் முழுக்கத் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. அவற்றை எல்லாம் நமது நிருபர்கள் அப்டேட் செய்துகொண்டே இருந்தனர்.”
“சரி, எத்தனை தொகுதிகள் தி.மு.க-வுக்குக் கிடைக்கும்?”
“தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கின்றன. இன்றைய நிலவரப்படி  முப்பது தொகுதிகள் தி.மு.க வசம் வரக்கூடும். ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறக்கூடும்.  மூன்று  தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளன.”
“ஒஹோ!”
“பல இடங்களில் தி.மு.க கூட்டணிக்குள் ஒத்துழைப்பு இல்லை என்பதும் தெரிகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தன் மகன் போட்டியிடுவதால் விழுப்புரம் தொகுதியைக் கண்டுகொள்ளவில்லை அந்த மாவட்டச் செயலாளரான  பொன்முடி. அதனால், அங்கு போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் நொந்துவிட்டார்.”
“இந்தத் தகவல் உமக்கு வந்துவிட்டதா… அதில் ஒரு கூடுதல் தகவல் சொல்கிறேன்”
“அதுதானே… கழுகாரிடம் இல்லாத தகவலா… சொல்லும்.”
“விழுப்புரத்தில் தி.மு.க கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் விழுப்புரத்துக்குப் பிரசாரம் செய்ய வந்தபோது, அவரைத் தனியாகச் சந்தித்த ரவிக்குமார், ஸ்டாலினிடம் அதுகுறித்துச் சொல்லியிருக்கிறார். அதற்கடுத்துத்தான், பொன்முடியை அழைத்து, ‘என்ன செய்வீர்களோ தெரியாது. விழுப்புரத்தில் உதயசூரியன் உதித்தாக வேண்டும்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். உடனே, கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரத்துக்குத் தனது ஜாகையை மாற்றிக்கொண்ட பொன்முடி தி.மு.க-வினரை முடுக்கி வருகிறார்” என்ற கழுகார், “சரி, அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

“அந்தக் கட்சி சட்டமன்ற இடைத்தேர்தலில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. ஆனாலும், ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெறும்.
பல தொகுதிகளில், அ.தி.மு.க-வுக்கு நல்ல குடைச்சலைக் கொடுக்கிறது அ.ம.மு.க. கிருஷ்ணகிரியில் முனுசாமிக்கு வெற்றி வாய்ப்பிருந்தாலும், அங்கு, முனுசாமிக்கு முட்டுக்கட்டை போடுகிறார் அ.ம.மு.க வேட்பாளர் கணேசகுமார். அதேபோல, தேனியில் தங்கதமிழ்ச்செல்வனுக்குச் செல்வாக்கு உயர்ந்துள்ளதையும் நமது நிருபர் குறிப்பிட்டுள்ளார்.”
“மிகச் சரியாகவே சொல்லியுள்ளனர், உமது நிருபர் படையினர்!”
“ஓய்வு இல்லாமல் உழைத்து மிக உன்னிப்பாகக் கவனித்துத்தான் தகவல்களைத் தந்திருக்கிறது, நமது நிருபர் படை. ஆனால், தேர்தலுக்கு முன்பாக அள்ளிவிடப்படும் கரன்சி, அதிரிபுதிரி பிரசாரம், உள்குத்து வேலைகள் போன்றவை கள நிலவரத்தில் மாற்றங்களை உருவாக்கக் கூடும். அதைவைத்து வெற்றி வாய்ப்பு மாறலாம்.”
நமது டீமுக்கு வாழ்த்துகளைச் சொன்ன கழுகார், “புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் முந்துகிறார். இது மட்டும்தான் உமது படை சொல்ல மறந்த சர்வே செய்தி” என்று சிரித்தபடியே சொல்லிச் சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: