அ.தி.மு.க. ஆட்சியின் கதி நிர்ணயகிக்க படும் நாள் மே 23

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டமாக வரும் 18ம் தேதி 18 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. அதைத் தொடர்ந்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இவ்விரண்டு இடைத்தேர்தலின் முடிவுகளும் மே 23ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அந்நாளே அ.தி.மு.க. அரசின் கதியை நிர்ணயிக்கும் நாளாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வின் பெரும்பான்மை குறையத் துவங்கியது.

தகுதி நீக்கம்:

ஜெ. மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடந்த சென்னை ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் மறைவு காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாகின.
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். அதனால் அவர் வெற்றி பெற்ற ஓசூர் தொகுதியும் காலியானது. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகள் தவிர மீதமுள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு:

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின் சூலுார் அ.தி.மு.க. – எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள

சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் சூலுார் தொகுதிக்கும் லோக்சபா தேர்தலுடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு வசதியாக திருப்பரங்குன்றம் தொகுதியில் போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. பிரமுகர் சரவணன் தொடர்ந்த வழக்கில் அ.தி.மு.க. வெற்றி செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆலோசனை:

இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் வழக்கு தொடர்ந்தவர் தேர்தலில் போட்டியிடாத தனி நபர் என்பதால் அது தேர்தலுக்கு தடையாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்தது.

சமீபத்தில் தமிழகம் வந்த தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சியினர் காலியாக உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வலியுறுத்தினர். அவர்களும் விரைவில் முடிவெடுப்பதாக கூறிச் சென்றனர். அதன் பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்தது.

114 எம்.எல்.ஏ.,க்கள்:

அதன் தொடர்ச்சியாக நேற்று தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நான்கு தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தமிழக சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.விற்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி; விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன்; கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு; மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் தமிமுன் அன்சாரி; முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்றதால் அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.க்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க.விற்கு எதிராக உள்ளனர். தனியரசு ஊசலாட்டத்தில் உள்ளார். எனவே இவர்களை தவிர்த்து விட்டால் அ.தி.மு.க.விற்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில் யார் எப்போது தடம் மாறுவரோ என்ற அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக்கு தற்போது 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
இச்சூழ்நிலையில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு தேர்தலிலும் பதிவான ஓட்டுகள் மே 23ல் எண்ணப்படுகின்றன. அன்றைய நாளில் தான் அ.தி.மு.க. ஆட்சியின் கதி என்னவாகும் என்பது தெரிய வரும்.

%d bloggers like this: