தேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்" – குஷியில் தி.மு.க புள்ளிகள்!

மே மாதம் 23-ம் தேதியோடு மத்தியில் உள்ள மோடி அரசுக்கும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசுக்கும் நீங்கள் முடிவுகட்ட வேண்டும்” என்று ஒவ்வொரு  கூட்டத்திலும் முழங்கிவருகிறார் ஸ்டாலின். கருத்துக்கணிப்புகளும் தி.மு.க -வுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் இப்போது டெல்லி செல்வதற்கான சிமிஞ்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.

இதுகுறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், “ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் பொதுத்தேர்தலில் தி.மு.க-வுக்கு சாதகமான நிலை தமிழகம் முழுவதும் நிலவிவருகிறது. 30 தொகுதிக்கு மேல் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் நிலை இப்போது உள்ளது. தலைவர் ஸ்டாலின் 35 தொகுதிகளுக்கும் மேல் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று நம்புகிறார். தி.மு.க சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகக் களத்தில் நிற்கும் முக்கிய வி.ஐ.பி-கள் பலர் காங்கிரஸ் கட்சிக் கூட்டணியே மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். சமீபத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமான ஒரு டீம் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்று ஆலோசனை செய்துள்ளனர்.

அப்போது இருபது தொகுதிகளில் தி.மு.க நேரடியாக வெற்றி பெற்றால் மத்தியில் மூன்று கேபினட், மூன்று  இணை அமைச்சர் பதவியை கண்டிப்பாக வாங்கிவிடவேண்டும் என்று பேசியுள்ளார்கள். மத்தியில் கேபின்ட் அமைச்சர்களாக தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, ஆ.ராசா, தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி ஆகிய மூவரும் முதன்மை இடத்தில் இருக்கிறார்கள். தயாநிதி மாறன், பாலு ஆகியோருக்கு ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பு தரமாட்டார் என்றும் பேச்சு நடந்துள்ளது. இணை அமைச்சர் வாய்ப்பு ஜெகத்ரட்சகன் மற்றும் துரைமுருகன் மகன் ஆகியோருடன் ஒரு புதுமுகத்தை நுழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள். இந்தப் பட்டியல் விவரங்கள் எல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா? என்று கேட்டால் மௌனமாக இருந்துள்ளார்கள், தலைவருக்கு நெருக்கமான அந்தப் புள்ளிகள். தேர்தலே இன்னும் நடக்கவில்லை அதற்குள் அமைச்சர்கள் யார் என்றெல்லாம் ஆரம்பித்துவிட்டார்களே என்ற புலம்பலும் மறுபுறம் உள்ளது.

அதேபோல், 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று உடன்பிறப்புகளிடம் இப்போதே உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சைரனில் பவனி வரும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற ஆசையில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஸ்டாலினுக்கு இப்போது சாமரம் வீசத் தயாராகிவிட்டார்கள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர்கள் பலர். மீண்டும் பி.ஜே.பி தலைமையில் ஆட்சி அமைந்துவிட்டால் சைரன் கனவில் இருக்கும் வேட்பாளர்களின் நிலையை நினைத்துபார்க்க வேண்டியுள்ளது.

%d bloggers like this: