மெஜாரிட்டி கிடைக்காவிட்டால்…? பி.ஜே.பி-யின் Plan B என்ன?

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 8 தொகுதிகளையும் கடந்த முறை நாங்கள் கைப்பற்றினோம். ஆனால், இந்த முறை அதில் எங்களுக்கு கவுதம்புத்தா நகர் மற்றும் காஸியாபாத் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போல தெரிகிறது. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் கணிசமான இடங்களை இழக்க வாய்ப்புள்ளது’’

நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பிஜேபி-க்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனாலும், குறைந்தது 165 இடங்கள் கிடைத்தாலே நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், அந்த அளவுக்குத் தேர்தல் முடிவு வெளியான 20 நிமிடங்களிலேயே செயல்படுத்தக் கூடிய மாற்று ரகசியத் திட்டம் ஒன்றை பா.ஜ.க தயாரித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டபேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில், ஆந்திரா 25, அருணாசல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோராம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரப்பிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபர் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  

கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

விவசாயிகள் பிரச்னை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அமலாக்கம் மற்றும் ரஃபேல் விமான ஊழல் குற்றச்சாட்டு போன்ற பல்வேறு காரணங்களால்  மோடி இந்த முறை ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம்தான் என்று இந்த ஆண்டு தொடக்கம் வரை கூறப்பட்டு வந்தது. ஆனால், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள் வாக்காளர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து மோடியும், பா.ஜ.க-வினரும் மக்களிடையே பெரிய அளவில் மேற்கொண்ட பரப்புரை அக்கட்சிக்கு ஓரளவுக்கு இழந்த செல்வாக்கை மீட்டுக் கொடுத்ததாகக் கூறப்பட்டது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக  பல்வேறு தொலைக்காட்சிகள், தனியார் ஏஜென்சியுடன் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறினாலும், மொத்தம் வெளியான 7 கருத்துக் கணிப்பு முடிவுகளின் சராசரியைப் பார்த்தால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 277 இடங்கள் வரை கிடைக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும், இதரக் கட்சிகள் 128 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்றும் அது தெரிவிக்கிறது. 

தேர்தல் அறிக்கை, ரஃபேல்…

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஆட்சியமைக்கத் தேவையான  272 இடங்களைவிட 5 இடங்கள் மட்டுமே அதிக இடங்கள் என்பது பின்னடைவுதான். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக் கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், பா.ஜ.க மட்டுமே 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. இந்த முறை தேர்தல் நெருக்கத்தில் மக்களிடையே பா.ஜ.க-வுக்குப் பாதகமான வேறு ஏதேனும் விஷயங்கள் பரப்பப்பட்டால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு. 

மேலும்,  இந்தக் கருத்துக் கணிப்பு பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 8-ம் தேதியன்று வெளியிடப்பட்ட  அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. 2014-ம் ஆண்டில் கூறப்பட்ட அதே அம்சங்கள்தான் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதி, சமூக ஊடகங்களில் பெரிய அளவில் கேலிப் பொருளாக சித்திரிப்புக்குள்ளானது. 

இது ஒருபுறம் இருக்க, `ரஃபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை, பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதை நிராகரித்து, `ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும்’ என்று  புதன்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது மோடி அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காங்கிரஸ் தனக்குச் சாதகமாக தேர்தல் பிரசார களத்தில் முன்வைக்கும் என்பதால், நகர்ப்புற வாக்காளர்களிடையே அது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 

மெஜாரிட்டி கிடைக்காமல் போனால்…

இந்த நிலையில்தான், தேர்தலில் ஒருவேளை ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காமல் போனாலும், குறைந்தது 160 இடங்கள் கிடைத்தால் கூட மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தக் கூடிய வகையிலான ‘பி’ பிளான் ஒன்றை அக்கட்சி  தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை வெளியிட்டிருப்பவர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உதவியாளர். 

“உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 8 தொகுதிகளையும் கடந்த முறை நாங்கள் கைப்பற்றினோம். ஆனால், இந்த முறை அதில் எங்களுக்கு கவுதம்புத்தா நகர் மற்றும் காஸியாபாத் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போல தெரிகிறது. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் முன்னர் வெற்றி பெற்ற குறிப்பிட்ட மண்டலங்கள் அல்லது பகுதிகளில் கணிசமான இடங்களை இழக்க வாய்ப்புள்ளது. 

ஆனால், அவ்வாறு இழப்புக்குள்ளானாலும், குறைந்தது 160 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்று விட்டாலே மீண்டும் ஆட்சியமைத்து விடுவோம். அதற்கான ‘பி’ பிளான் ஒன்றைத் தயாரித்து வைத்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான 20 நிமிடங்களில் அத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடிய வகையில் எல்லா ஏற்பாடுகளையும் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

‘பி’ பிளான் ரகசியம்

மோடி, ஆந்திராவில் பிரசாரம் செய்யும்போது பார்த்திருப்பீர்கள். அவரது தாக்குதல் எல்லாமே தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை மையப்படுத்தியே இருந்தது. அதே சமயம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ அல்லது அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பற்றியோ அவர் எதுவுமே கூறவில்லை. இதுதான் ‘பி’ பிளான் ரகசியம். அதாவது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பின்னால் தேவைப்பட்டால் அவர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்குமாறு திட்டத்தைத் தயார்படுத்தி விட்டோம். ‘

இதே கதைதான் தெலங்கானா மாநிலத்திலும். அந்த மாநிலத்தில் எங்களுக்கு உண்மையான எதிரி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சிதான். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வை 5 இடங்களிலிருந்து ஒரே ஒரு இடத்துக்குத் தள்ளியது அந்தக் கட்சிதான். ஆனால், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத்தான் அதிகமாக விமர்சித்தாரே தவிர, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை அல்ல. இதுவும் ‘பி’ திட்டத்தின் ஒரு அம்சம்தான். 

அதேபோன்று ஒடிசாவிலும், மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியைத்தான் கடுமையாக விமர்சித்தாரே தவிர, ஆளும் பிஜு ஜனதா தளக் கட்சியைப் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை. முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குக் கைமாறின என்று தெரிவித்தார்.

எதிரி காங்கிரஸ் மட்டுமே

`முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக முடிவெடுப்பதில் காலதாமதம் காட்டுவதால், மத்திய அரசின் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது’ என்ற அளவிலேயே அவரது விமர்சனங்கள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையிலும், ஒடிசா மாநிலத்தின் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளையும், 147 சட்டசபைத் தொகுதிகளில் 112 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதன்படி பார்த்தால், ஒடிசாவில் பா.ஜ.க தனது பிரதான எதிரியாக  பிஜு ஜனதா தளத்தைத்தான் கருத வேண்டும். ஆனால், மோடி பேசியதைப் பார்த்தால் நாங்கள் அப்படிக் கருதவில்லை என்பதும், காங்கிரஸ்தான் எங்கள் எதிரி என்பதும் புரியும். இதிலிருந்தே எங்கள் திட்டம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்தப் புள்ளி விவரங்களைப் பாருங்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவில் மொத்தம் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வாக்கு 21 சதவிகிதம். ஆனால், பிஜு ஜனதா தளத்துக்குக் கிடைத்தது 44.7 சதவிகிதம். பா.ஜ.க-வுக்கு 8 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது. அதேபோன்று சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 25.71%, பா.ஜ.க 17% மற்றும் பிஜு ஜனதா தளம் 43.35% வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியைத்தான் பா.ஜ.க பலவீனப்படுத்த முயன்று, அக்கட்சிக்கு ஆதரவான வாக்காளரை தன் பக்கம் திருப்ப முயன்றுள்ளதே தவிர, பிஜு ஜனதா தளத்தை அல்ல. இவ்வாறு செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியைச் சுத்தமாக காலி செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக பா.ஜ.க விரும்புகிறது என்பதுதான். ஆனால், இது சாத்தியமாக நீண்ட காலம் ஆகலாம். அதுவரை எதிரியின் (காங்கிரஸ்) எதிரியை ( பிஜு ஜனதா தளம்) ஏன் நாங்கள் நண்பனாக்கிக் கொள்ளக்கூடாது? வேறு விதமாகச் சொல்வதானால்,  பிஜு ஜனதா தளத்துடன் ஏன் நட்பாக இருக்கக்கூடாது?” என்று  ‘பி’ பிளான் ரகசியத்தைச் சொல்லி அதிர வைக்கிறார் அந்தப் புள்ளி. 

மேலும், தேவைப்பட்டால் வேறு சில மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில கட்சிகளும் இந்த ‘பி’ பிளான் திட்டத்துக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவதற்குள்ளாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் பா.ஜ.க இன்னும் எத்தனை ரகசியத் திட்டங்களை அரங்கேற்றப் போகிறதோ!? 

%d bloggers like this: