கரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்!

‘இரண்டா….யிரம்… மூவா…யிரம்… நாலா…யிரம்!’ என்று காமெடி சேனலில் ஓடிய காட்சியைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகார், ‘‘சிச்சுவேஷன் சீன் சாலப் பொருத்தம்… தமிழ்நாட்டில் இப்போது இப்படித்தான் வாக்குகளை ஏலம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றார்.
‘‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிது இல்லையே!’’

‘‘இந்த முறை கரன்சி வழக்கத்தைவிட அதிகமாக ‘கரைபுரள’ போகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் இடங்களை நிரப்ப, கழகங்களுக்கு கரன்சிதான் ஒரே மாற்றாக இருக்கிறது. ‘ஆளும்கட்சிகள்மீதான அதிருப்தி, அ.தி.மு.க–வுடைய வாக்குகளைப் பிரிக்கும் அ.ம.மு.க’ என்று தி.மு.க கொஞ்சம் தெம்பாக இருக்கிறது. கொஞ்சம்போல பணம் கொடுத்தாலே போதும் என்பது தி.மு.க தரப்பினரின் எண்ணம். ஆனால், அ.தி.மு.க–வுக்குக் ‘கூட்டணி பலத்தைத் தாண்டி மக்களிடம் இருக்கும் அதிருப்தியைச் சரிக்கட்ட வேண்டியுள்ளது.’ அதற்கு அவர்கள் நம்பியிருக்கிற ஆயுதம் பணம் மட்டுமே!’’
‘‘ஓட்டுக்கு எவ்வளவு நோட்டு?’’

‘‘நாடாளுமன்றத் தொகுதிகளில் ஓட்டுக்கு 250 ரூபாய் என்று முடிவெடுத்திருந்தார்களாம். தி.மு.க–வும் இந்த அளவுக்குக் கொடுக்கத் தயாராக இருப்பது தெரிந்து, இப்போது 300 அல்லது 400 ரூபாய்வரை என்று தொகுதியின் நிலைக்கேற்ப நிர்ணயித்திருக்கிறார்களாம். ஒரு சில வி.ஐ.பி–க்கள் நிற்கும் தொகுதிகளில் இந்தத் தொகை 500 ரூபாய்வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக்கான ரேட் ஏகத்துக்கும் எகிறுகிறது. முதலில் இரண்டாயிரம் ரூபாய் என்றுதான் கணக்குப்போட்டு வைத்திருந்தார்களாம். கருத்துக்கணிப்புகளைப் பார்த்து விட்டு, சில தொகுதிகளில் நாலாயிரம் ரூபாய்வரை தரலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் களாம்!’’

‘‘அந்த நான்கு தொகுதிகளில்?’’
‘‘மே 19-ல்தான் அந்த நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்பதால், அத்தனை அமைச்சர் களும் அங்கே குவிந்துவிடுவார்கள். அந்த நான்கையும் அப்படியே அள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டிருக்கிறார். அதனால், அங்கே கழகங்கள் ஐந்தாயிரம் ரூபாய்வரை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது!’’
‘‘சிச்சுவேஷன் சீன் என்று நீர் சொன்னது இப்போது புரிகிறது… சரி, இந்தப் பணத்தை எல்லாம் எப்படிக் கொடுக்கப்போகிறார்கள்?’’
‘‘கொடுக்கப்போகிறார்களா…. ஏப்ரல் 12-ந்்தேதி வெள்ளிக்கிழமை நல்லநாள் என்று அன்றே பட்டுவாடாவை ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ‘நாலாயிரம்வாலா வெடி’யை 40 இடங்களுக்கு கொண்டு சேர்த்து விட்டார்கள். அங்கிருந்துதான் இப்போது பட்டுவாடா ஆரம்பித்திருக்கிறது. ‘நாலாயிரம் வாலா வெடி…’ புரிகிறது அல்லவா?”
‘‘ஓ… ‘கேடி’யாக அல்லவா இருக்கிறீர்… நன்றாகவே புரிகிறது… இதெல்லாம் எப்படிக் கொண்டுபோனார்களாம்?’’
‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ‘கான்வாய்’லேயே பணம் செல்வதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அது உண்மையா என்று தெரிய வில்லை. ஆனால், எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இனிஷியல் நிறுவனத்தின் ஆம்னி பஸ்களிலும், மன்மதனின் ஜோடி பேரைக் கொண்ட தென்மாவட்ட நிறுவனத்தின் ஆம்னி பஸ்களிலும்தான் பெரும்பாலான இடங்களுக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறதாம்!”
‘‘எந்தெந்தத் தொகுதிகளில் அதிகமாகப் பணம் விளையாடுகிறது?’’
‘‘சட்டமன்றத் தொகுதியைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத் தொகுதிகளில், தேனி டாப்பில் இருக்கிறது. அங்கே ஓ.பி.எஸ் மகன் பிரசாரத்தில், ஆரத்தி தட்டுக்கு 500, 1000 கொடுத்துவிட்டு, ‘ஓட்டுக்குத் தனியாக வீட்டுக்குத் தேடி வரும்’ என்று உறுதி அளித்திருக்கிறார்களாம்.’’
‘‘அடேங்கப்பா!’’
‘‘இதையும் கேளும்… தேனியில் அ.ம.மு.க–பலமாக உள்ள பகுதிகளில் ஐந்தாயிரம் ரூபாய்வரை கொடுப்பதற்கு ஆளும்கட்சி தரப்பு திட்டம் போட்டிருக்கிறதாம். தங்கதமிழ்ச்செல்வன் தரப்பில் 1000 ரூபாய் வரை கொடுக்கத்திட்டம் இருக்கிறது. ஆனால் பணம் இன்னும் வரவில்லை என்கிறார்கள். ஈ.வி.கே.எஸ் தரப்பில், பணப் பட்டுவாடா பற்றியத் தகவல் இதுவரை தெரியவில்லை. கடைசி நேரத்தில் தரப்படலாம்!’’
‘‘இத்தனை லட்சம் பேருக்கு 500 ரூபாய் கொடுப்பதற்கு சில்லறைக்கு எங்கே போவார்கள்?’’
‘‘அந்த வேலை எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. சென்னை தி.நகரின் பிரபல வணிக நிறுவனத்தில்தான், பெரும் தொகைக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றியிருக்கிறார்கள்!’’
‘‘என்ன செய்கிறதாம் வருமான வரித்துறை?’’

‘‘எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே ரெய்டு, பணம் பறிப்பு என்கிற பாரபட்சமான நடவடிக்கை, வருமானவரித்துறை அதிகாரிகள் இடையிலேயே புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. கொங்கு அமைச்சருக்கு நெருக்கமான சென்னை ஒப்பந்ததாரர் வீட்டில் 200 கோடி ரூபாய் ரொக்கப்பணம் இருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டுதான், அங்கே போயிருக்கிறார்கள். ஆனால், பாதியில் போன் வந்ததால், ஒன்றரை மணி நேரத்தில் ரெய்டை முடித்துக்கொண்டார்கள். இதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா… தமிழகத்தில் கூட்டணிகளைப் பேசி முடித்த மத்திய அமைச்சர் ஒருவரின் தலையீடுதான் அதற்குக் காரணம் என்று இப்போது தகவல் வந்திருக்கிறது. ஆனாலும், அதிகாரிகள் இடையே கிளம்பிய புகைச்சலால், ‘200 கோடி ரூபாய் பணத்தை எடுத்து கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள். கணக்குக்கு 16 கோடி ரூபாய் என்று வெளியே சொல்கிறார்கள்’ என்று பணத்தைப் பறிகொடுத்த அமைச்சர் தரப்பில் புலம்புகிறார்கள். இதனால் அதிகாரிகள் தரப்புக்கும் அமைச்சர் தரப்புக்கும்  இடையே லடாய் நீள்கிறது என்கிறார்கள்.”
“ஓஹோ”
“இன்னொரு பக்கம் பி.ஜே.பி., தமிழக ஆளும் தரப்புமீது, ‘தேர்தல் பணிகளில் சரியான ஒத்துழைப்பு இல்லை’ என்று கடுப்பில் இருக்கிறது. ஏற்கெனவே தமிழக அரசில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள சில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 22 பேருடைய சொத்துக் குவிப்பு, பினாமி விவரங்கள், பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை எல்லாம் விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறது பி.ஜே.பி தரப்பு. இங்கே பி.ஜே.பி தோற்று… மேலே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அ.தி.மு.க–வை உண்டு இல்லை என்று செய்வதற்கு பி.ஜே.பி தயாராயிருக்கிறது என்கிறார்கள்!’’
‘‘தி.மு.க–வில் என்ன நடக்கிறது?’’
‘‘அவர்கள், ‘சீக்கிரமே எங்கள் ஆட்சி வரப்போகிறது’ என்கிற தொனியில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம். சென்னையில் இது அதிகமாகவே நடக்கிறதாம். கரை வேட்டியை மாற்றி, கடற்கரையில் ஜெயித்த எம்.எல்.ஏ ஒருவர், முட்டைக்குப் பெயர்போன நாமக்கல்லில் இருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து 60 கோடி ரூபாயை வாங்கி, தி.மு.க–வில் இப்போது ‘பவர்ஃபுல்’ ஆக இருக்கும் ஒருவருக்குக் கொடுத்திருக்கிறாராம். இந்த டீலை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததற்காக அவருக்கு ஐந்து கோடி ரூபாய் கமிஷன் கொடுத்திருக்கிறதாம் வரி ஏய்ப்பில் சிக்கிய அந்த நிறுவனம்!’’
‘‘சரி, எதற்காக இந்த டீல்?’’
‘‘அந்த நிறுவனத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது,  பல கோடி ரூபாய்வரை அதிகாரிகள், அரசியல்வாதிகள், அவர்களின் உறவினர்களுக்கு லஞ்சம் கொடுத்த ஆவணங்களைக் கைப்பற்றியது நினைவிருக்கிறதா… அந்த விவகாரத்தைப் பிரசாரத்தில் பேசக்கூடாது என்பதுதான் அந்த நிறுவனத்தின் கோரிக்கை. அதற்குத்தான் இந்தக் காணிக்கை!’’
‘‘கட்சித் தலைமைக்கு இது தெரியாதா?’’
‘‘அது எனக்குத் தெரியாது. ஆனால், மு.க.ஸ்டாலின் இப்போதே முதல்வர் கனவில் மிதக்கிறாராம். எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கும் அவர், தூத்துக்குடியில் பிரசாரம் முடித்துவிட்டுக் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ஜூன் 3-ம் தேதியன்று கலைஞர் பிறந்தநாளில் ஆட்சி அமைத்துவிடுவோம்; இதுதான் கலைஞருக்கு நாம் கொடுக்கப்போகும் பிறந்தநாள் பரிசு’ என்று சொல்ல, கூடியிருந்தவர்கள் குஷியாகி விட்டார்களாம்!’’

‘‘சரி… தூத்துக்குடியில் கனிமொழிக்கு சிக்கல் என்கிறார்களே?’’
‘‘பெரிதாகப் பிரச்னை இல்லை… தூத்துக்குடி தொகுதியில் அவர் தத்தெடுத்த வெங்கடேசுவரபுரம் கிராமத்தில், ‘ஒரு கழிவறைகூட கட்டித்தரப்படவில்லை, நாடாளுமன்ற உறுப்பினரால்?’ என்று ஒரு போஸ்டரும், ‘நாயுடு வாக்கு வங்கி மட்டும் வேண்டும், எங்கள் சமுதாய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடையாதா?’ என்று ஒரு போஸ்டரும் ஒட்டி கனிமொழியை கவலையடைய வைத்திருக்கிறார்கள். இதை எதிர்பார்க்காத கனிமொழி, மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ண னிடம் இதைச் சரிக்கட்டச் சொல்லி யிருக்கிறாராம். இப்போது அங்கே ஓட்டுக்கு ரேட் எகிறியிருக்கிறது!’’
‘‘மறுபடியும் ராகுல் காந்தி வருகிறாரே?’’
‘‘ஆமாம்… தமிழகத்தில் ஒருநாள் மட்டுமே ராகுல் காந்தி பிரசாரம் என்று சொல்லி, நான்கு இடங்களை தேர்வுசெய்யச் சொன்னதாம் டெல்லி மேலிடம். ஆனால், தேனி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, அந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் கூடுதலாகப் பிரசாரம் செய்ய தமிழக காங்கிரஸ் தரப்பில் ஒப்புதல் வாங்கியிருக்கிறார்கள். மாணிக் தாகூர் தனது நண்பர் என்பதால், விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் ஒரு கூட்டத்தில் பேச ராகுல் காந்தியே முடிவு செய்தாராம்.  சென்னையில் கூட்டணிக் கட்சித்தலைவர்களோடு பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ‘முதல்வரின் சொந்தத் தொகுதியான சேலத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற வேண்டும்’ என்று சொல்லி, ராகுலின் பிரசாரத்தை சேலத்துக்கு மாற்றிவிட்டார்களாம்!”
‘‘பி.ஜே.பி தகவல்கள்?’’
‘‘ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மோடியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கும், நமோ டி.வி-க்கும் தேர்தல் ஆணையம் தடை… என்று அடுத்தடுத்து வாங்கிய அடிகளில் பி.ஜே.பி தலைமை கடும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறது!’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்!

%d bloggers like this: