Advertisements

களத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம்! ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்

தேர்தல் வெற்றிக்காக, ஒரு பக்கம் பிரசாரம் மும்முரமாக நடந்தாலும், மறுபக்கத்தில், கடைசி ஆயுதமாக, எதிரணியை பலவீனப்படுத்தும் முயற்சியில், ஆளும் தரப்பு இறங்கி உள்ளது. தி.மு.க.,வில், ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் இருக்கும், மாவட்ட

செயலர்களை வளைக்கவும், களத்தில் சுறுசுறுப்பாக இயங்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கு முட்டுக்கட்டை போடவும், புதிய வியூகம் வகுக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு கட்சியின், ‘பவர் சென்டராக’ இருக்கும், மந்திரிகள் மூவரிடம் தரப்பட்டு உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா, 2016 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வில் அதிருப்தியில் இருந்த மாவட்ட நிர்வாகிகள், எதிரணியுடன், ரகசிய கூட்டணி அமைத்தனர். இதை பயன்படுத்தி, எதிரணியினர் பல இடங்களில் ஊரகப் பகுதிகளில், ‘பூத்’களை கைப்பற்றியதாக, புகார் எழுந்தது. கடந்த தேர்தல்களில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள், தங்கள் தோல்விக்கு, இது தான் காரணம் என, ஸ்டாலினிடம் புகார் கூறின.

‘ரூட்’டை மாற்றி:

மேலும், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும், இதுவே காரணமாக அமைந்தது. இதனால், உஷாரான, தி.மு.க., தலைமை, இம்முறை, விலை போகாதவர்களாக பார்த்து, பூத் கமிட்டிகளில் நியமித்துள்ளது. மேலும், அவர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக, கடந்த தேர்தல்கள் போல, அவர்களை வளைப்பது, எளிதான காரியமல்ல என்பதை, ஆளும் தரப்புக்கு, உளவுத் துறை உணர்த்தி உள்ளது. அதனால், இந்த தேர்தலில், அந்த யுக்தியை மாற்றி, புதிதாக சிந்திக்கத் துவங்கியுள்ளது.

அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தரும் பொறுப்பை, மும்மூர்த்திகளாக விளங்கும், மூன்று மந்திரிகளிடம், ஆளும் தலைமை ஒப்படைத்திருக்கிறது. அதற்கு உதவிகரமாக, உளவுத் துறையும், உள்ளூர் போலீசாரும் இருப்பர் என்ற உத்தரவாதமும், மேலிடத்தால் தரப்பட்டு உள்ளது. இதையடுத்து, களத்தில்

சுறுசுறுப்பாக இயங்கும், தி.மு.க., – காங்கிரஸ் மற்றும் அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகிகள் பட்டியல், உளவு போலீஸ் உதவியுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தேர்தலில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாந்த, எதிரணி நிர்வாகிகள் யார் யார் என்ற பட்டியலும், மும்மூர்த்திகளின் கைவசம் வந்துள்ளது.

இலக்கை நோக்கி:

இந்த இரு பட்டியல்களையும் வைத்து, கச்சிதமாக காய் நகர்த்தும் பணி துவங்கி உள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் தான், இவர்களின் உதவி மிகவும் அவசியம் என்பதால், அதற்குள், இவர்களை வளைத்து விடும் முடிவோடு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு, ‘டீம்’ களம் இறக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் உதவியுடன், இந்த டீம், தன் இலக்கை நோக்கி, முன்னேறும் தகவல் தெரிய வந்துள்ளது. பணமும், சுகமும் தான், இன்றைய அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் என்பதால், அதற்கு ஆட்படும், எதிரணி நிர்வாகிகள், ஓட்டுப்பதிவு நாளில் ஒளிந்து கொள்வதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது.

இத்தகவல், எப்படியோ ஸ்டாலின் காதுக்கும் எட்டி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, அனைத்து மாவட்ட செயலர்களுடனும், மொபைல் போனில் பேசியுள்ள ஸ்டாலின், ‘முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். ஆளும் அணிக்கு, நேரடியாகவோ, மறைமுகமாக யாராவது உதவினால், அவர்களை பாராபட்சம் பார்க்காமல், கட்சியை விட்டு நீக்கி விடுவேன்’ என, எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள், ‘திக்… திக்…!’

இதற்கிடையில், சென்னையில், புதிய அதிகார மையங்கள் உருவாவதை, தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்ற தகவல், அறிவாலய வட்டாரத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சென்னையில், கட்சி ரீதியாக, தி.மு.க.,விற்கு, நான்கு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், கீழ்மட்ட நிர்வாகிகள் அனைவரையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால், வசூல் மழையில், இவர்கள் நனைந்து வருகின்றனர். சில மாவட்ட நிர்வாகிகள், ஆளும் கட்சியினருடன் ரகசிய கூட்டணி அமைத்து, பல தொழில்களையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில், வடசென்னை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வீராசாமி மகன், கலாநிதி போட்டியிடுகிறார்.

Advertisements
%d bloggers like this: