டிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”

தமிழ்நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகள் 19 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற இலக்குடன், பெரிய கட்சிகளின் கூட்டணி ஏதுமின்றி களமிறங்கியிருக்கிறார் டி.டி.வி. தினகரன்.

‘எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம்; பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றபடி புதுச்சேரியில் பிரசாரத்திற்குப் புறப்படும் முன்பாக, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் டிடிவி தினகரன். பேட்டியிலிருந்து:

கே. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 19 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறீர்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இது முதல் தேர்தல். வெற்றிபெறும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தாமல் அனைத்துத் தொகுதிகளும் போட்டியிடுவது ஏன்?

ப. அ.ம.மு.க. என்ற பெயர்தான் புதிது. இது உண்மையில் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.கவின் ஒரு அணி. எங்களுக்குள்ள உள்ள சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்தப் பெயரில் செயல்படுகிறோம். இப்போது எங்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்தவர்கள், ஜெயலலிதா காலத்தில் கவுன்சிலர், மந்திரி என பல பதவிகளில் இருந்தவர்கள்தான்.

இதுதவிர, புதிதாகவும் பிற கட்சிகளில் இருந்தும்வந்து ஆட்கள் இணைந்திருக்கிறார்கள். நானே பல தேர்தல்களில் ஜெயலலிதாவால் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவன். ஆகவே, இது புதிய பெயரில் இயங்குகின்ற பழைய கட்சிதான்.

கே. ஆக, அ.தி.மு.கவின் ஒரு அணி என்கிறீர்களா?

ப. ஆம். அதன் ஒரு அணிதானே நாங்கள். இப்போது உச்ச நீதிமன்றம் அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவிட்டது. ஆகவே இந்தப் பெயரை புதிதாக அ.ம.மு.க என்ற பெயரைப் பதிவுசெய்யப்போகிறோம். அ.தி.மு.கவின் ஒரு அணியாக இருந்தவர்கள், அ.ம.மு.க. என்ற பெயரில் இருக்கிறோம் என்கிறேன்.

கே. உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துவிட்ட நிலையில், நீங்கள் இந்த சட்டப்போராட்டத்தைத் தொடரப் போகிறீர்களா அல்லது அ.ம.மு.கவை உங்களது தனிக்கட்சியாகக் கருதி, அதில் கவனம் செலுத்தப் போகிறீர்களா?

ப. அ.ம.மு.கவை பதிவு செய்யப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்துவிட்டோம். மார்ச் 27ஆம் தேதியே இதற்கான பணிகளைத் துவக்கிவிட்டோம். ஆனால், அதே நேரத்தில் எங்கள் பொதுச் செயலாளர் மேல் முறையீடு செய்ய விரும்பினால், அவர் செல்வார்.

கே. ஆக, அ.தி.மு.க. மீதான உங்கள் உரிமைக் கோரிக்கையை விடுவதாக இல்லையா?

ப. சட்டப்படி இந்தக் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் மன்றத்தில் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது இருந்த தொண்டர்களில் 95 சதவீதம் பேருக்கு மேல் எங்களிடம் இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அங்கே இருக்கிறார்கள்.

அதற்காக அவர்களே கட்சி எனச் சொல்ல முடியாது. தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே, தொண்டர்கள்தான் இந்தக் கட்சியின் மையக் கரு. அவர்களில் 95 சதவீதம் பேர் இங்கே இருக்கிறார்கள். எலும்புக்கூடுதான் அங்கே இருக்கிறது.

இரட்டை இலை அந்தப் பக்கம் இருப்பதால் பலர் அங்கே இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சின்னம் துரோகிகள் கையில் இருப்பதாகக் கருதி பலர் இங்கே வருகிறார்கள். ஆர்.கே. நகரில் எப்படி வெற்றிபெற்றோமோ, அதேபோல நாடாளுமன்றத்திலும் வெற்றியைப் பெறப் போகிறோம். அதற்குப் பிறகு, எல்லோரும் இங்கே வந்துவிடுவார்கள்.

கே. இந்தத் தேர்தலில் உங்கள் நோக்கம் என்ன – நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதா அல்லது குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்று, நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என நிரூபிப்பதா?

ப. இந்தக் கேள்வி மட்டுமல்ல, இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துகிறீர்களா அல்லது சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்துகிறீர்களா என்கிறார்கள். என்னைக் கேட்டால் நான் இரண்டிலும்தான் கவனம் செலுத்துகிறேன்.

மாபெரும் வெற்றியைப் பெறுவோம். ஜெயலலிதா பல நாட்களாகவே தனித்துப் போட்டியிடவே விரும்பினார். அதை 2014லும் 2016லும் செயல்படுத்தினார். இப்போது நான் தனித்து தேர்தலை எதிர்கொள்கிறேன். கூட்டணி என்று வந்தால், காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகளின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கையில்லை.

அந்தக் கட்சிகளுக்கு தமிழக நலன்களின் மீது அக்கறையில்லை. தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றித் தரவில்லை. அதனால்தான் ஜெயலலிதா தனித்து நிற்க முடிவுசெய்தார். நீட் தேர்வு, மீத்தேன், உதய் மின்திட்டம், கெயில் திட்டம் போன்றவற்றைத் தடுத்தார். இப்போது அதே வழியில் நாங்கள் போராடுகிறோம்.

நீங்கள் சொல்வதைப் போல இத்தனை சதவீத வாக்குகளைப் பெறுவதல்ல எங்கள் நோக்கம். குறைந்தது 37 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம். மே 23வரை பொறுத்திருந்து பாருங்கள்.

கே. தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் இங்கு ஆட்சி மாற்றம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா.. அம்மாதிரி சூழலில் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?

ப. பா.ஜ.கவுக்கு மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. மோதி தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தவிர, எச். ராஜா போன்றவர்கள் பேசிய பேச்சுகள். ஏது இவர்கள்தான் இந்து மதத்தைக் கண்டுபிடித்து, பாதுகாப்பதைப் போல. இந்தியா முழுவதுமே வெறுப்பில்தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களால் வெல்ல முடியாது.

அவர்களுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. அவர்களைப் பிற கட்சிகள் ஏற்காது. மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி, பிஎஸ்பி, லாலு, நிதீஷ்குமார் போன்றவர்கள் பா.ஜ.கவை ஏற்பார்களா? எஞ்சியிருப்பது காங்கிரஸ்தான். என்னுடைய கணிப்பின்படி, காங்கிரசிற்கு பெரும்பான்மை கிடைக்காது. தனிப்பெரும் கட்சியாக வரலாம். கர்நாடகாவில் செய்ததைப்போல மம்தாவையோ, மாயாவதியையோ பிரதமராக்குவதற்கு ஆதரவளிக்கலாம். அப்போது நாங்களும் ஆதரவளிப்போம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம்.

கே. அப்படியானால், நீங்களும் தி.மு.கவும் ஒரே அணியில் இருப்பீர்கள்..

ப. அப்படி வருமா எனத் தெரியவில்லை. தி.மு.க. வெற்றிபெற்றால்தான் அந்தக் கூட்டணிக்கு வர முடியும்? நாங்கள் போன முறை 37 இடங்களில் வென்றதைப் போல இந்த முறையும் வென்றால் அவர்களுக்கு ஏது வாய்ப்பு.. இந்த தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும்தான் தி.மு.கவை தூக்கிப்பிடிக்கிறார்கள். உதாரணமாக இடைத்தேர்தல் நடந்தது. அப்போது என்ன சொன்னார்கள் என்றால், அ.தி.மு.க. இரண்டாக நிற்பதால், அக்கட்சியின் ஓட்டு இரண்டாகப் பிரியும். ஆகவே தி.மு.க. வெல்லும் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?

கே. பா.ஜ.க. மீது இப்போது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலிலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் நீங்கள் கேட்காமலேயே பா.ஜ.கவுக்கு ஆதரவளித்தீர்கள்.

ப. இந்தக் கேள்விக்கு நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன். எங்களிடமிருந்து பிரிந்துசென்றவர் தம்பிதுரை. நான் ஒரு முறை பொதுச் செயலாளரைச் சந்திக்க சிறைக்குச் சென்றபோது அவரும் வந்திருந்தார். “பிரதமரை நாடாளுமன்றத்தின் மத்திய ஹாலில் பார்த்தேன். அப்போது அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். சசிகலா பக்கமும் சிலர் இருப்பதால், அவர்களது ஆதரவைப் பெற தான் வந்திருப்பதாக” சொன்னார்.

எங்களை ஒதுக்கிய பிறகு தம்பிதுரை வந்து பார்ப்பது அதுதான் முதல் முறை. நான் சென்று சசிகலாவைப் பார்த்தபோது, நாம் எதற்கு பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனக் கேட்டேன். ஆனால், தம்பிதுரை வந்து கேட்கிறார், தி.மு.க. காங்கிரசிற்கு ஆதரவாக நிற்கிறது.. ஆகவே அந்தப் பக்கம் சென்றால், தி.மு.கவுடன் ரகசிய உடன்படிக்கையில் இருப்பதாகச் சொல்வார்கள். ஆகவே, பா.ஜ.கவுக்கு ஆதரவளிப்பதாக சொல்லுங்கள் என்றார் சசிகலா. நான் வேண்டாமென்று நினைத்தாலும், பொதுச் செயலாளர் சொல்லும்போது மீற முடியவில்லை. அதற்காக, நாங்கள் பா.ஜ.கவிடம் பிரதிபலனை எதிர்பார்த்ததாக அர்த்தமில்லை.

பிறகு, பொதுச் செயலாளரே இந்தத் தவறை உணர்ந்தார். கடந்த இரண்டாண்டுகளில் எந்தக் குற்றமும் சாட்ட முடியாதபடி நான் செயல்பட்டுவரும் நிலையில் இந்த விவகாரம் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கப்படுகிறது. நான் இத்தனைக்கும் வாக்களிக்காமல் இருந்துவிடலாம் என்று சொன்னேன். ஆனால், தம்பிதுரை கேட்கிறார் என்று சசிகலா வலியுறுத்தினார்.

அதற்காக, நாங்கள் பா.ஜ.கவுடன் பேரம் பேசுகிறோம் எனக் குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களோடு பேரம்பேச என்ன இருக்கிறது? இவர்களுக்கு ஆதரவளித்தால் சிறையிலிருந்து வெளிவந்துவிட முடியுமா?

படத்தின் காப்புரிமை Twitter

கே. உங்கள் மீதுள்ள வழக்குகளுக்கு உதவலாமே?

ப. என் மீதான வழக்குகளை எடுத்து நடத்தத்தானே செய்தார்கள். நான்தானே உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறேன்.

கே. அப்போது பா.ஜ.கவை ஆதரித்ததற்காக வருந்துகிறீர்களா?

ப. நாம் ஆதரவளித்தால், அவர்கள் உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் வருத்தம் இருந்திருக்கும். எனக்கு அப்படி எண்ணம் ஏதும் கிடையாது. தம்பிதுரை வந்து கேட்பதால் உதவலாம் என பொதுச்செயலாளர் சொன்னதால் ஆதரவளித்தோம். அது குறித்து வருத்தமெல்லாம் படவில்லை. சிறுபான்மை மக்களுக்குத் தெரியும், நாங்கள் பா.ஜ.கவோடு சேர்வோமா இல்லையா என்பது.

மத்திய அரசு சொன்னதால்தான் சுயேச்சையாகப் போட்டியிடும் எங்களுக்கு ஒரே சின்னம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அந்த உத்தரவை பிறப்பித்தது நீதிமன்றம். பா.ஜ.க. சொல்லி நீதிமன்றம் உத்தரவிடுமா? பா.ஜ.க. தருவதாக இருந்தால் குக்கர் சின்னத்தையே தந்திருக்கலாமே. அது ஒரு பொய்ப் பிரசாரம்.

கே. தி.மு.க. மீது நீங்கள் மென்மையான போக்கை கையாளுவதாக ஒரு பார்வை இருக்கிறது..

ப. அது ஒரு தவறான பார்வை. மற்றொருவர் சொல்கிறார், ஆளுங்கட்சியைத் தாக்கும் அளவுக்கு தி.மு.கவை தாக்குவதில்லை என்கிறார். நான் இருவரையும்தான் விமர்சிக்கிறேன். நீங்கள்தான் தி.மு.க. கூட்டணியைப் பெரிதாகப் பார்க்கிறீர்கள். அது ஒரு பெரிய கூட்டணியே அல்ல. கருணாநிதி இருந்தபோது இருந்த அளவுக்கு வாக்குவங்கி இல்லை. அதனால், எங்களுடைய எதிரிகளும் துரோகிகளும் உள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கிறேன்.

கே. உங்கள் கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மத்தியிலும் சில மாவட்டங்களிலும்தான் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது..

ப. அது ஒரு பொய்ப் பிரசாரம். பொய்யான கருத்தைத் திணிப்பது. எம்.ஜி.ஆர். என்ன அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரா? அவருக்கு வலுவான இடம் எது? மதுரைதானே? அருப்புக்கோட்டை, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில்தானே எம்.ஜி.ஆர். வெற்றிபெற்றார். மதுரைப் பகுதிகள் அ.தி.மு.கவுக்கு வலுவான இடங்கள். 1999ல் என்னை நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பகுதியில் ஜெயலலிதா என்னைத் தேர்தலில் நிறுத்தினார். எனக்கு அந்தப் பகுதியில் அறிமுகம் அதிகம். நான் அங்கு பணியாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான்.

நான் இப்போது வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் என்ன நீங்கள் சொல்லும் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியா? அவர்கள் அங்கே 5 ஆயிரம் பேர்கூட கிடையாது. இதெல்லாம் பொய்ப் பிரசாரம். எங்களுடைய வெற்றியோடு இந்தக் கதைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

கே. அ.ம.மு.க. விரைவில் அ.தி.மு.கவுடன் இணைந்துவிடும் என மதுரை ஆதீனம் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?

ப. அவருடைய உண்மைப் பெயர் அருணகிரி. தமிழரசு பத்திரிகையில் நிருபராக இருந்தவர். சிறுவயதிலிருந்தே துறவறம் பூண்டவரல்ல. அவர் எப்போதுமே அரசியல்வாதி போலத்தான் பேசுவார். இவர் மட்டுமல்ல மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலேயும் இப்படிச் சொல்லியிருக்கிறார். அது அவரது விருப்பம். அவ்வளவுதான். அது உண்மையல்ல.

நான் ஆதீனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனச் சொன்னவுடன் வாயைத் திறக்கவில்லையே. ஆதீனத்தின் பெயரைக் காக்கவாவது, நாங்கள் அருணகிரி மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும் போலிருக்கிறது. இதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதி. தைரியமாக பொய் சொல்கிறார்கள் அவ்வளவுதான்.

படத்தின் காப்புரிமை Getty Images

கே. நீங்கள் அ.தி.மு.கவிலிருந்து விலக்கிவைக்கப்பட்டபோது உங்களுடன் இருந்த பலர், குறிப்பாக செந்தில் பாலாஜி, கலைராஜன், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் உங்களைவிட்டு விலகியிருக்கிறார்கள். என்ன காரணம்?

ப. இதெல்லாம் கானல் நீர் தோற்றம்தான். உங்கள் பார்வையில் உள்ள பிரச்சனைதான். செந்தில் பாலாஜி போனதால் என்ன பிரச்சனை ஏற்பட்டுவிட்டது? அவருக்குப் பதிலாக தங்கவேலு மாவட்டச் செயலாளராகியிருக்கிறார். அவரோடு வேறு சில நிர்வாகிகள் போயிருந்தால், அதற்கும் ஆட்களை நியமித்திருக்கிறோம். கலைராஜன் போனதால் என்ன ஆகிவிட்டது? இவர்கள் இருவரும் ஏதாவது காரணங்களைச் சொல்லியிருக்கிறார்களா? அப்படி ஏதாவது சொன்னால், அதற்கு பதில் சொல்லலாம்.

நாஞ்சில் சம்பத் தமிழிசை சௌந்தரராஜனைப் பற்றி விமர்சித்தவுடன் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவருக்கு நாங்கள் ஜாமீன் வாங்கிக் கொடுத்தோம். அவர் அதில் பயந்துவிட்டார். குண்டாசில் போட்டுவிடுவார்கள் என நினைத்துவிட்டார். யாரோ சிலர் வெளியில் செல்வதால், ஒரு இயக்கம் பலவீனமடைந்துவிடாது.

கரூரில் செந்தில் பாலாஜியைவிட சிறந்த வேட்பாளர், படித்தவர், செந்தில் பாலாஜிக்கெல்லாம் உள்ள சில மைனஸ் பாயிண்டுகள் இல்லாதவர் அங்கே நிற்கிறார்.

கே. நீங்கள் புதிதாக இயக்கம் துவங்கும்போது, அந்தப் பெயரில் திராவிடம் என்ற பெயர் இல்லை என்பதால்தான் வெளியில் செல்வதாக நாஞ்சில் சம்பத் சொன்னார்.. உங்களுக்கு திராவிடம் என்ற பெயர், அந்த பெயருக்கு உரித்தான சமூக நீதி போன்ற கொள்கைகள் மீது நம்பிக்கையில்லையா?

ப. அம்மான்னா யாரு? கட்சிப் பெயரை அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்னு வைக்கவேண்டிய அவசியமே கிடையாதுன்னு நினைச்சேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவம் அம்மாதான். அதனால் அவர்கள் பெயரில் கட்சியைத் துவங்கியிருப்பதாக கட்சியைத் துவங்கிய அன்றே சொல்லிவிட்டேன். சமூக நீதி காத்த வீராங்கனையே அம்மாதான்.

நான் பிறப்பால திராவிடன்தான். திராவிடம்,,திராவிடம்னு சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றும் வேலை எனக்குத் தெரியாது. நான் யதார்த்தமான ஒரு பிரஜை. திராவிடம் என்ற வார்த்தையைப் போட்டுத்தான் என்னை திராவிடன்னு காண்பித்துக்கொள்ளனுமா?

இன்னொரு விஷயம், இவர்கள் ஜாதி மறுப்பை சொல்கிறார்கள். ஆனால், இன ரீதியான வெறுப்பும் தவறுதானே..

கே. ஜாதி ரீதியான மேலாதிக்கத்தைத்தானே சுட்டிக்காட்டுகிறார்கள்..

ப. அது யாரோ பத்துப் பேர் செஞ்சதுக்கு ஒரு இனத்தையே எதிர்ப்பது சரியா? யாரோ சிலர் செய்தததற்காக பிராமணர்களை மொத்தமாக எதிர்ப்பது சரியா? அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் இருக்கிறார்கள், எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். நாம் சிறுபான்மையாக இருப்பவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஜாதி மறுப்பைப்போல இனத்தை வெறுப்பது சரியான்னு என் மனதுக்கு தோணுது. அதுக்காக நான் திராவிடக் கொள்கைக்கு எதிரானவன்னு நீங்க பேசுனா.. பேசலாம்..

ஆனால், ஜாதி வெறுப்பு கூடாது என்பவர்கள், இனத்தை ஒழிக்கனும்ங்கிறாங்களே அது என்ன என்பதுதான் என் கேள்வி. இந்தியாவில் வாழும் அத்தனை பேரும் இந்தியர்கள். தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள்தான். தாய்மொழி தமிழாக இருப்பவர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்றால் அதை என் மனது ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து, தெலுங்கு, கன்னடம், வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நம்மைவிட தமிழில் புலமையோடு இருக்கிறார்கள். .யாரோ ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்தினால், அதை எப்படி ஒரு இனத்தின் மேல் ஏற்றுகிறீர்கள்? பெரியார் இருந்திருந்தால் அவரிடமே பேசியிருப்பேன்.

வீரமணி தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். ஆனால், அவர் கிருஷ்ணரை தாக்கிப் பேசியது தவறு என்றுதான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை, ஜாதி – மதத்தைப் பற்றி அரசியல் கட்சிகள் பேச வேண்டியதில்லை. அது தனி மனிதர் சம்பந்தப்பட்டது என நினைக்கிறேன்.

கே. திராவிட இயக்கங்கள் முன்வைக்கும் சமூக நீதி, பெண் விடுதலை, வடவர் ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறீர்களா?

ப. ஆமா, ஆதரிக்கிறேன். அதை எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறோம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை ஆதரிக்கிறோம். 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று சொல்கிறேன். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, சமூக ரீதியாக – கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களை மேம்படுத்த பல வழிகள் இருக்கின்றன என்றுதானே சொல்லியிருக்கிறேன். பெண் கல்வி, பெண்ணுரிமையிலும் முன்னணியில்தான் இருக்கிறோம். எங்கள் கட்சியில்தான் மூன்று பேர் பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பின்பற்றிய எந்தக் கொள்கையிலும் மாற்றமிருக்காது. ஆனால், பிராமணர் என்பதற்காக ஒருவரைத் தாக்கிப் பேசுவது தவறு என்கிறேன். அரசியல்வாதிகள் இதைவிட்டு வெளியில்வர வேண்டும்.

கே. கடந்த 60 ஆண்டுகளாக பேசி வந்த அரசியலிலிருந்து வெளியில் வர வேண்டுமெனக் கூறுகிறீர்களா?

ப. நிச்சயமாக. நாம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். இளைஞர்கள் நிறைய படித்துவந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நமது மாநிலம், நமது நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாற வேண்டும். பழசையே இப்படி பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அந்தக் காலத்தில் இப்படி ஒற்றுமையில்லாமல்தான் அரசர்கள் ஆட்சியை இழந்தார்கள். நம்மிடம் இருக்கும் வளத்திற்கு, திறமைக்கு நாம் எங்கேயோ போய்விடலாம். அரசியல்வாதிகள் குறுகிய மனதுடன் தேர்தலில் வெல்ல இதையெல்லாம் செய்துபார்க்கிறார்கள்.

கே. தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. அதற்கு கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சி செய்த கட்சிகளும் அவை பேசிய திராவிடமும் காரணமில்லையா?

ப. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர், பக்தவத்சலம் போன்ற எல்லா தலைவர்களுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பான்மை ஆட்சிக் காலத்தில் இருந்தது திராவிடக் கட்சிகள் என்பது உண்மைதான். அதனால் நான் திராவிடக் கட்சிகளின் கொள்கைகள் தவறு எனச் சொல்லவில்லையே.. பெரியார் அந்த காலகட்டத்திற்குச் சொன்னதை இன்னும் எடுத்துட்டு வராதீங்கன்னு சொல்றேன். அவர் கடவுள் இல்லை என்று சொன்னதற்காக, அதைச் சொல்லிவிட்டு, இப்போது இந்துக்களுக்கு எதிரியில்லை என்று சொல்கிறீர்களே.. அது தேவையில்லை என்கிறேன். பெரியார் அந்த காலகட்டத்தில் சொன்னது இந்த காலகட்டத்திற்கு பொருந்துமா என்று பாருங்கள் என்கிறேன்.

கே. தேர்தல் பிரசாரத்திற்கு பெரிய அளவில் பணம் செலவழிக்கிறீர்கள். சில நாட்களுக்கு முன்பாக குஜராத் வைரச் சந்தையில் பெரிய அளவில் வைரங்கள் விற்கப்பட்டன. அதோடு உங்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாயின..

ப. என் பெயரைச் சொல்லவில்லையே..

கே. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திருமதி சசிகலா தரப்பின் பெயரைச் சொல்கிறார்கள்..

ப. அது பற்றி நான் விசாரித்தேன். யாரோ ஒரு நபர் அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு தவறு செய்கிறார். பணபலத்தால்தான் தொண்டர்களுக்கு உற்சாகம் வருமென்றால் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கோஷ்டிதான் உற்சாகமாக இருக்கும். பணத்தால் வாக்குகளை வாங்கிவிட முடியுமா?

ஆர்.கே. நகரில் ஒரு ஓட்டுக்கு ஆறாயிரம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. கேட்டால் டோக்கன் கொடுத்தேன் என்கிறார்கள். அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துவிட்டார். பணத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்றுவிடலாம் என்றால் டாடாவும் அம்பானியும் அதானியும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 கோடிகளைச் செலவழித்து வெற்றிபெற்றுவிட மாட்டார்களா? ஆட்சியைப் பிடித்துவிட மாட்டார்களா?

நீங்கள் சொல்வதுபோல பணம் வந்தால், இன்னும் உற்சாகமாக இருந்திருப்பேன்.

கே. நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஃபெரா வழக்கு, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு போன்றவை இருக்கின்றன.

ப. நான் 1999ல் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பாகவே என் மீது ஃபெரா வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கோடுதான் 1999ல் ஜெயித்தேன். இப்போது 2017லிலும் ஜெயித்தேன். மக்களுக்குத் தெரியும். இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்தேன் என்கிறார்கள். யாருக்குக் கொடுத்தேன்? இதெல்லாம் அரசியலுக்காக போடப்பட்ட வழக்குகள்.

கே. இந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள ஆட்சி என்னவாகும்?

ப. இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். 22 தொகுதிகளில் 6-7 தொகுதிகளை ஜெயித்தாக வேண்டும். நான்கு தொகுதிகள் எல்லாம் போதாது. அவர்கள் ஆதரவாளர்களில் 6 பேர் யார் பக்கம் இருக்கிறார்கள் என்றே தெரியாது. உண்மையைச் சொன்னால் அவர்களால் நான்கு தொகுதிகளில்கூட ஜெயிக்க முடியாது. 22 தொகுதிகளிலும் நாங்களே வெற்றிபெறுவோம்.

கே. நீங்கள் தி.மு.க. அரசமைக்க ஆதரவளிப்பீர்களா?

ப. இப்படிக் கேட்கலாமா.. எங்கள் ரத்தத்திலேயே தி.மு.க. எதிர்ப்புணர்வு உள்ளது. அவர்களோடு கூட்டணி வைப்பீர்களா என்றால் என்ன சொல்வது…? சான்ஸே கிடையாது.

%d bloggers like this: