உங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்!

ங்களின் வாழ்க்கையின் பொருளாதார நிலை குறித்து நீங்கள் தினமும் கவலைப்படு கிறீர்களா..? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரும் தரும் பதில், ஆம் என்றுதான் இருக்கும். உங்களது பொருளாதார வாழ்க்கை பாதுகாப்பின்றி இருப்பதாகத் தோன்றினால், தயவுசெய்து அதை அலட்சியப்படுத்தாதீர்கள். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளும் வழிகளைக் கண்டறியுங்கள்.

பணக்காரராக ஓர் எளிய வழி, அதிக பணம் சம்பாதிப்பதே. ஆனால், அதிக பணம் சம்பாதிப்பதினால் மட்டுமே ஒருவர்  பணக் காரராகிவிட முடியாது என்பதே உண்மை. என்ன குழப்பமாக இருக்கிறதா? மேற்கொண்டு படியுங்கள். 

  உங்களுக்குத் தெரியாத ஐந்து உண்மைகள்

உங்களின் தற்போதைய வருமானம் கடந்த ஆண்டைவிட அதிகம்தான்.  என்றாலும், நீங்கள் பெரிய அளவில் பணம் சேர்த்துவிடவில்லை. ஏன், இதற்குப் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?

1. குறுகிய வட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பது

அதிக பணம் சம்பாதிக்க நீங்கள் கடினமாக உழைப்பதும், நீங்கள் பார்க்கும் வேலையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதும் நல்ல விஷயம்தான். ஆனால், உங்களைப் பணக்காரராக மாற்ற இது போதுமானதா?

உங்களின் பணம் சம்பாதிக்கும் இந்த முயற்சியானது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தரத் தீர்வாக இருக்காது. இதனால் உங்களது பொருளாதார நிலை தற்காலிகமாக மாறலாம். ஆனால், சில நாள்களுக்குப்பிறகு மீண்டும் உங்களுக்குப் பாதுகாப்பற்ற பொருளாதார நிலை ஏற்படும். நீங்கள் மீண்டும் பணம் சம்பாதிக்க ஓடத் தொடங்குவீர்கள். இதற்குக் காரணம், சரியான நிதித் திட்டம் இல்லாததே ஆகும்.

2. பணத்தைச் செலவு செய்யத் தூண்டும் சந்தைகள்

இன்றைய சந்தைகள் உங்களுக்குத் தேவையான பொருள்களை விற்பதைவிட, உங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை உங்களிடம் விற்பதிலே குறியாக உள்ளன. நீங்கள் என்னதான் பட்ஜெட் போட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தி னாலும் அதில் தேவையில்லாத பொருள்களின் செலவுகள் நிச்சயம் இருக்கும். இன்றைய சந்தைகளும் வணிக நிறுவனங்களும் தேவையற்ற பொருள் களை வாங்க உங்களைத் தூண்டுகின்றன. எப்படி..?

பொதுவாக, நாம் நமக்காக வாழ்வதை விட சமூகத்திற்காகத்தான் அதிகம் வாழ்கிறோம். அதற்காக சில ஆடம்பரச் செலவுகளைச் செய்கிறோம். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சந்தைகள் உங்களுடைய அத்தியாவசியம் இல்லாத விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சலுகைகள், சர்வீஸ் மற்றும் லைஃப் டைம் சலுகை போன்றவற்றை வழங்கு கின்றன. இதனால் உங்களின் பணம் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதாக நீங்கள் நினைத்தாலும், தேவையற்ற பொருள்கள் உங்களிடம் குவிவது உங்களுக்கே தெரிவதில்லை.

3. நீங்கள் பணக்காரராக வங்கிகள் உதவுவதில்லை

வங்கிகள் நம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் சேவைகளை மட்டுமே வழங்குகின்றன. உங்களைப் பணக்காரராக மாற்றுவதற்கான சேவைகள் எதையும் வங்கிகள் தருவதில்லை. 

கிரெடிட் கார்டு இதற்குச் சிறந்த உதாரணமாகும். ‘பை நவ், பே லேட்டர் (buy now pay later)’ என்ற வாசகம் கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால், அது உங்களை எளிதில் கடனாளியாக்கிவிடும். கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தி நீங்கள் பெரிய செலவுகள் செய்யவில்லை என்று கூறலாம். ஆனால், நீங்கள் செய்யும் சிறிய செலவுகள் மாத இறுதியில் மலைபோல் உயர்ந்திருக்கும். அதற்காக உங்கள் சம்பளத்தில் பெரிய பகுதியை நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும்.   

உங்களைக் கடனாளியாக்க வங்கிகள் பயன்படுத்தும் மற்றொரு முக்கிய சேவை, வங்கிக் கடன். இந்தக் கடன் சில சமயங்களில் உதவியாக இருந்தாலும், அந்தக் கடன் வலையிலேயே சிக்கி, அடுத்தகட்ட முன்னேற்றத்தை இழக்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

 

4. உங்களுடையது என நீங்கள் நினைக்கும் சொத்து உங்களுக்குச் சொந்தமானதல்ல

உங்களுக்குச் சொந்தமான சொத்து உங்களுடையதல்ல என்று சொன்னால், என்ன நினைப்பீர்கள்? ஏதோ முட்டாள்தனமாக உளறுகிறார் என நீங்கள் நினைத்தாலும்,  அதில் உண்மை இல்லாமல் இல்லை.

நீங்கள் பணக்காரர் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக சில ஆடம்பரப் பொருள்களை மாதத் தவணை (EMI) மூலம் வாங்கியிருப்பீர்கள்.உங்களைப் பணக்காரராக காட்டிக்கொள்ள  நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் உங்களுக்குச் சரியாகவே தோன்றலாம். ஆனால், அதற்கான தொகையை நீங்கள் வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வாங்கிய பொருள்கள் (Asset) இப்போது வேண்டுமானால் மதிப்பானதாக இருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால், மாதத் தவணை மட்டும் தவறாது செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை, நீங்கள் மாதத் தவணை செலுத்தத் தவறினால் நீங்கள் வாங்கிய பொருள் உங்களுடையதாக இருக்காது.

உதாரணமாக, நீங்கள் கடன் மூலமாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள  கார் ஒன்றை  வாங்குவதாக வைத்துக்கொள்ளுங்கள், உங்களிடம் முன்பணம் ரூ.5 லட்சம் உள்ளது. மீதி ரூ.10 லட்சத்தை வங்கிக் கடன் மூலமாக வாங்க முடிவு செய்கிறீர்கள்.  அப்படியானால் உங்களுக்கு ஆகும் மொத்த செலவுக்கான ஒரு சிம்பிள் கணக்கு இதோ…

நீங்கள் கட்டும் முன்பணம் ரூ.5,00,000; வங்கிக் கடன் ரூ.10,00,000; வட்டி 8%; கடன் கட்ட வேண்டிய காலம் 60 மாதங்கள்; மாதத் தவணை ரூ.20,276

உங்கள் காரின் ஆயுள் காலம் 10-12 வருடங்கள் / காருக்கானக் கடனை நீங்கள்  கட்டி முடிப்பதற்குள் உங்களுக்கு ஆகும் மொத்தச் செலவு = 5,00,000 (கையிலிருந்து போட்டது) + 10,00,000 (கடன்) + 2,16,000 (வட்டி) + பழுது செலவுகள் + பராமரிப்பு + இன்ஷூரன்ஸ் பிரீமியம். அதாவது, சுமார் ரூ.20 லட்சம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்த வரை, ஐந்து ஆண்டுகளில் உங்கள் காரின் மதிப்பு 50% வரை குறையும். உங்களது கடன் முடியும்போது, நீங்கள் செய்த மொத்தச் செலவு ரூ.20 லட்சம். ஆனால், உங்கள் காரின் மதிப்பு ரூ.7.5 லட்சமாகக் குறைந்திருக்கும். இதனால் நீங்கள் வெற்றிகரமாக ரூ.12.5 லட்சத்தை இழந்துவிடுவீர்கள்.

 

5. உங்களுடைய சேமிப்புகள் பற்றிய உண்மைகள்

பணத்தைச் சேமிப்பது மிக நல்ல பழக்கம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மையா? சேமிப்புக் கணக்கு களைப் பொறுத்தவரை, ஆண்டு இறுதியில் பெறும் வட்டியானது நல்ல விஷயம்தான். என்றாலும், இதைக் கொஞ்சம் உன்னிப்பாக  ஆராய்ந்து பார்த்தால், உங்களுக்குப் பல உண்மைகள் புரியும்.

உதாரணமாக, ரூ.1,000-த்தை நீங்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறீர்கள். இதற்கு ஆண்டு வட்டி = 4%, விலைவாசி ஏற்றம் = 4.47%,  ஒரு வருடத்திற்குப் பிறகு, உங்களுடைய மொத்த வட்டி தொகை = 1000*4%=40, விலைவாசி ஏற்றத்தின் தாக்கம் = 1000*4.47%=47.40, உங்களுக்குக் கிடைத்த தொகையின் மதிப்பு = 1000+40-47.40=992.6

இதனால் நீங்கள் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 7 ரூபாய் இழப்பது நிச்சயம். எனவே, சேமிப்புக் கணக்குகள் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை. 

அப்படியானால், பணக்காரர் கள் என்பவர்கள் யார், அவர்கள் எப்படிப் பணக்காரர்களாக ஆனார்கள் என நீங்கள் கேட்க லாம். பணக்காரர்களும் உங் களை போல கடின உழைப் பாளர்கள்தான். ஆனால், அவர்கள் தங்களது உழைப்பால் கிடைத்த பணத்தை புத்திசாலி தனமாக அதிகரித்தனர். பணக்காரர்கள் தாங்கள் மென்மேலும் பணக்காரராகப் பயன்படுத்தும் ஐந்து உத்திகள் என்னென்ன..?

 

1. முன்யோசனையுடன் செயல்படுவது 

பணக்காரர்கள் நிதி சம்பந்தப்பட்ட புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. அவர்கள் தங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் காரணங்களை முன்னரே கணித்து, அதைக் கடந்துசெல்லும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுகின்றனர்.

மற்றவர்களைப்போல் இல்லாமல் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டும் கவனம் செலுத்து வதில்லை. ஏனெனில், இது நிரந்தரத் தீர்வல்ல என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான், இவர்கள் நிதித் திட்டமிடல்மூலம் எப்படிப் பணத்தைச் சேமிப்பது என்று யோசிக்கின்றனர். இப்படிச் சேமிக்கும் பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

2.  நிதிநிலை அறிந்து செயல்படுவது

தங்களுடைய நிதித் திட்டம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது அவர்கள் மிகுந்த விழிப்பு உணர்வுடன் நெட்வொர்த் அடிப்படையில் எப்போது எதை செய்ய வேண்டும் என அறிந்து செயல்படுகின்றனர். ஆனால், சாதாரண மக்கள் பலர் தங்களின் நெட்வொர்த் பற்றி அறியாமல் இருக்கின்றனர்.

சரி, நெட் வொர்த் என்றால் என்ன, அதை எப்படிக் கணக்கிடுவது? நெட் வொர்த் என்பது உங்களின் மொத்த சொத்துகளின் உண்மையான மதிப்பு ஆகும். அதாவது, நெட் வொர்த் = மொத்த சொத்துகளின் மதிப்பு – மொத்தக் கடன்.  இதனால் ஒவ்வொருவரும் தங்களின் உண்மையான நிதிநிலையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். அவரின் மாத வருமானம் ஒருபோதும் ரூ.1 லட்சத்தைத் தாண்டியதில்லை. ஆனாலும், அவர் தனது வருமானத்தை, எந்தவொரு ஒரு மதிப்பிழந்து போகும் பொருள்களின் மீதும் முதலீடு செய்யாமல், சிறந்த முறையில் சேமித்து, தனது எதிர்காலத்தையும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் காத்துக்கொண்டார்.

மற்றொருபுறம், உலகமெங்கும் புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன்  இறந்தபோது சுமார் 400 மில்லியன் டாலர் அதாவது, இன்றைய இந்திய ரூபாய் மதிப்பிற்கு சுமார் ரூ.2,861 கோடி கடன் இருந்தது. இப்போது சொல்லுங்கள், இந்த இருவரில் யார் பணக்காரர்? சில லட்சங்கள் நெட் வொர்த் உடைய சாதாரண மனிதரா அல்லது பல கோடிகளுக்கு கடனாளியான மைக்கேல் ஜாக்சனா?

 

3. கடன் வாங்குவதைத் தவிர்ப்பது

  கடனாளியாக்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும்; பணக்காரர்கள் அதற்கு விதிவிலக்கல்ல. மேலும், அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கடன் வாங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இதில் கிரெடிட் கார்டு கடனும் அடங்கும்.

ஒருவேளை, நீங்கள் இந்தக் கடன் வலையில் (debt trap) மாட்டிக்கொண்டிருந்தால், இதிலிருந்து விடுபட ஒரே வழி கடனை அடைப்பதாகும்.  நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் 10% கடனை அடைக்கும்போது, உங்கள் நெட் வொர்த் ஆனது 10% உயருகிறது என்பதை உணருங்கள்.

4. ஸ்மார்ட் சேவிங்

நீங்கள் செய்யும் சேமிப்பு உங்களைக் காப்பாற்றாது என்று ஏற்கெனவே பார்த்தோம். உங்களது சேமிப்பை மட்டும் நம்பி உங்களின் பொருளாதாரம் இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு உதவாது. ஆனால், பணக்காரர்களைப் பொறுத்தவரை, சேமிப்பு என்பது அவசரக் காலத்தில் உதவும் ஒரு சிறந்த நிதித் திட்டமாகும். ஆனால், அவசரக் காலத்தில் ஏற்படும் பணத் தேவையே ஒருவரைக் கடனாளியாக்கும். ஆனால், அவசர காலத் தேவைக்கென நீங்கள் தனியாகச் சேமித்து வைக்கும்போது நீங்கள் கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. 

நீங்கள், உங்கள் செலவுகள் போக, மீதமிருப்பதைச் சேமிப்பவராக இருந்தால், இனி உங்கள் மாதச் சம்பளத்தில் செலவுகள் போக, மீதமிருப்பதைச் சேமிப்பதை நிறுத்திவிட்டு, சேமித்து வைப்பதற்கென ஒருபகுதியை ஒதுக்கி, அந்தத் தொகை தானாகவே சேமிப்புக்குச் செல்லும்படி செய்யுங்கள். சேமிப்புக்குப்போக  மீதமிருப்பதை செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் தேவையில்லாத செலவுகள் தானாகவே குறையும்.  

5. நெட்வொர்த்தை அதிகரித்தல்

  இறுதியாக, பணக்காரர்கள் தங்களது பணத்தை அதிகரிக்க பயன்படுத்தும் முக்கியமான உத்தி, முதலீடு செய்வது. முதலீடு செய்வது சுலபமான செயலும் அல்ல, கடினமான செயலும் அல்ல.  முதலீடு செய்யும்முன், முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் லாபம் அதிர்ஷ்டத்தால் வருவதல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்யும்முன் எதில் முதலீடு செய்வது என்று ஆராய்வீர்கள். அப்படிச் செய்யும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது முதலீடு விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதாக இருக்க வேண்டும்.

முதலீடு செய்யும்போது, நீங்கள் செய்யும் நீண்ட கால முதலீடு விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதாகவும், உங்கள் நெட்வொர்த்தை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வருடத்திற்குப்பிறகு விலைவாசி ஏற்றம் 4.5% என்று வைத்துக்கொண்டால், 5 வருடங்களுக்குப்பிறகு உங்கள் கனவுகளை நிறைவேற்ற தேவைப்படும் பணம் எவ்வளவாக எனக் கணக்கிட்டுப் பார்த்து அறியமுடியும் (பார்க்க அட்டவணை 1)

வங்கி எஃப்.டி-யில் நீங்கள் முதலீடு செய்த தொகை = ரூ.1,00,000

5 வருடங்களுக்குப்பிறகு உங்கள் முதலீட்டின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி = 7.25%

இந்த முதலீட்டின்மூலம் நீங்கள் ஈட்டிய லாபத்தின்மீது செலுத்த வேண்டிய வரி = 30%

முதலீடுமூலமான லாபம் = ரூ.1,28,085

வரி கட்டியது போக லாபம் = ரூ.1,28,085 – ரூ.1,24,618 = ரூ.3,467. 

ஆனால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடுசெய்து, அதற்கு 12% வருமானம் கிடைக்கும் பட்சத்தில், ரூ.43,993-யை நீங்கள் கூடுதலாக லாபம் ஈட்ட முடியும்.    

ஆக, மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் செய்யும் நீண்ட கால முதலீடு மற்றும் அதில் பெற்ற லாபத்தை, எஃப்.டி-யுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதாகவும், உங்கள் நெட்வொர்த்தை  அதிகரிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறதில்லையா? (பார்க்க அட்டவணை 2 மற்றும் 3)

   மறுமுதலீடு செய்யுங்கள்

பொதுவாக, விவசாயிகள் 12-14 மாதங்களான மாமரத்தில் காய் காய்க்கும் காலம் வரும்போது அதன் பூக்களை பறித்துவிடுவார்கள். இதனால் மாமரத்தால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு கனிகளைத் தர முடியாது. இந்தச் செயலை விவசாயிகள் சில காலங்களுக்கு அதாவது மரம் முழுமையாக வளரும் வரை இப்படிச் செய்வார்கள். இது விவசாயிகளுக்கு நஷ்டம் தரும் செயல் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் வேறு. மாமரம் தொடக்கத்திலே கனி கொடுக்க ஆரம்பித்தால், சில ஆண்டுகளுக்குப்பிறகு அதனால் ஒரு முழுமையாக வளர்ந்த மரமாக வளர முடியாது அதிகமான கனிகளையும் தரஇயலாது.

மேலும், இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் லாபமும் இருக்காது. ஆனால், விவசாயிகளின் இந்தச் செயலால் மரமானது கனி தராத அந்தக் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் வலுவானதாகவும், அளவில் பெரியதாகவும் வளரும். மரம் முழுமையாக வளர்ந்த பிறகு காய்க்கும் கனியானது அதிகமாகவும், அவர்கள் இழந்ததைவிட இரு மடங்கு லாபம் தருவதாகவும் இருக்கும்.

அதுபோலதான் நீங்கள் செய்யும் முதலீடும், உங்கள் முதலீட்டின்மூலம் நீங்கள் ஈட்டிய தொகையும் வட்டியும் அதை செலவு செய்யும்போது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அது ஆரம்பத்திலே கனி தரும் மரம் போன்றது. ஆனால், நீங்கள் ஈட்டிய தொகையை மறுமுதலீடு செய்து நீண்ட காலத்திற்குப்பிறகு கிடைக்கும் பலனானது, உங்களது பணத்தைச் செலவு செய்யும் போது கிடைப்பதைவிட பல மடங்கு லாபத்தைத் தருவதாக இருக்கும்.

உங்களுக்கு  நிரந்தரப் பலன்  கிடைக்கவேண்டுமென்றால், உங்களது ஆசை நிறைவேறும்வரை உங்களுக்குக் கிடைத்த தொகையை மீண்டும் மீண்டும் முதலீடு செய்யுங்கள்.

உணர்வுகளுக்கு இடம்கொடுத்து முடிவெடுக்காதீர்கள்.

முதலீட்டைப் பொறுத்தவரை, எப்போ தும் பயம், பேராசை, பொறுமையின்மை போன்ற உணர்வுகளுக்கு இடம் தராதீர்கள். அப்படிப்பட்ட முடிவுகளால் ஒருபோதும் நீங்கள் எதிபார்க்கும் பலனைத் தர இயலாது.

உதாரணமாக, 2008-ல் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியினால், தங்களது பணத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தினால், இருப்பதையாவது காத்துக்கொள்ளலாம் என தங்களது பங்கினைக் குறைந்த விலைக்கு விற்றவர்கள் பலர். இதனால் அவர்கள் தங்களது முதலீட்டில் முழுமை யான பலனைப் பெறவில்லை. ஆனால், பங்குச் சந்தையின் அந்த நிலை வெகு நாள் களுக்கு நீடிக்கவில்லை. சிறிது காலத்திலே அது பழைய நிலைக்குத் திரும்பியதுடன், வளர்ச்சியும் பெற்றது. ஒருவேளை, அவர்கள் தங்களது பங்கினை விற்காமல் இருந்திருந்தால், இன்று அதன் மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கும்.   

    அதிக வருமானம் கிடைக்க நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் நீண்ட காலத்திற்குப்பிறகு ஏற்படும் விலைவாசி ஏற்றங்கள் உங்கள் நிதி சம்பந்தமான குறிக்கோள்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். உதாரணமாக, உங்கள் பிள்ளைகளின் திருமணம், ஓய்வுக்காலம் ஆகியவற்றிற்கு நீங்கள் தயாராக இருக்க இயலும்.

முதலீடு, நிதித் திட்டம் போன்றவை பணக்காரர்களுக்கு மட்டும்தான் என நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் கருத்தினை மாற்றிக்கொள்ளுங்கள். பொறுமை, நிதானம், மனஉறுதியுடன் சரியான நிதித் திட்டமும் இருந்தால், யார் வேண்டுமானாலும் பணக்காரர்கள் ஆகலாம் என்பது நிச்சயம்!

One response

  1. நீண்டகால முதலீடு என்பது எத்தனை ஆண்டுகள்? 10ஆண்டுகளா அல்லது 100ஆண்டுகளா? தெளிவு படுத்தவும். பங்குச்சந்தை இறக்கம் காணும் போது முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதையும் நடுநிலையோடு சொல்லியிருந்தால் பாராட்டுவேன்.

%d bloggers like this: