கிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? – ஒரு செக் லிஸ்ட்

ந்தியாவில் கிரெடிட் கார்டு  பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை, ஜனவரி, 2019 நிலவரப்படி 4.51 கோடி யாக அதிகரித்திருக்கிறது என ஆர்.பி.ஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.06 கோடி அதிகம். வருகிற 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 10 கோடியைத் தொடும் என வங்கி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டின் பயன்பாடு இப்படித் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், அதனைப் பற்றி மக்கள் எந்த அளவுக்கு சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. நீங்கள் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா என்று  பாருங்கள். இதன்மூலம் கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியும்.

 

தகுதி 1 – முக்கிய விவரங்களைப் பாதுகாப்பவரா?

நீங்கள் உங்களுடைய கிரெடிட் கார்டு  குறித்த விவரங்களைக் கேட்ட இடங்களில் எல்லாம் தருகிறீர்கள் எனில், கிரெடிட் கார்டினைப்  பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்று அர்த்தம். வங்கி சார்ந்த விவரங்கள் எதுவாக இருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்பது தான் பொதுவான விதி. ஆனால், நம்மில் பலர் தெரிந்தோ, தெரியாமலோ கிரெடிட் கார்டு குறித்த முக்கியமான விவரங்களை அடுத்தவர் களிடம் பகிர்ந்துகொள்கிறோம். இது மகா தவறு. எந்தச் சூழ்நிலையிலும் கிரெடிட் கார்டு  குறித்த விவரங்களைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வது கூடாது.

பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்ற பொது இடங்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போதுதான், அதுசார்ந்த விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. அதனால் பொது இடங்களில் கிரெடிட் கார்டு களைப் பயன்படுத்தும்போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.  வங்கிகள் நம்மிடம் இருக்கும் கிரெடிட் கார்டு,  டெபிட் கார்டு குறித்த விவரங்களைக் கேட்டு போன் செய்யமாட்டார்கள். அப்படி யாரோ கேட்டு, நீங்கள் தரத் தயாராக இருந்தால், கிரெடிட் கார்டினை வைத்துக்கொள்ளும் தகுதி உங்களுக்கு நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். 

தகுதி 2 – சரியான தேதியில் பணம் கட்டிவிடுவீர்களா?

கடன் கொடுத்தவர் யாராக இருந்தாலும், உரிய நேரத்தில் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கிரெடிட் கார்டு விஷயத்திலும் அப்படித்தான். தவணைத் தொகைக்கான தேதியை, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் மெயில் மூலமாக, எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லது போன் அழைப்பின் மூலமாக உரியவர்களுக்குத் தெரியப்படுத்தும். இந்தக் கெடு தேதியைத்  தவறவிடாமல், பணத்தைச் செலுத்துவது நல்லது. அப்படியில்லாமல், தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப் போடும் பழக்கம் உங்களிடம் இருந்தால்,  கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

தகுதி 3 – கிரெடிட் கார்டில் பணம் எடுப்பீர்களா?

நீங்கள் உங்களுடைய அவசரத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுப்பீர்கள் எனில், நீங்கள் அதனைப்  பயன்படுத்தப் பொருத்தமான ஆள் கிடையாது. இன்று, பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை மொபைல் வாலட் களுக்கும் அல்லது மற்றொரு வங்கிக் கணக்கு களுக்கும் பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்கின்றன. ஏனெனில், கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் தொகைக்கு வட்டிவிகிதம் அதிகம்.கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்த அடுத்த நிமிடத்திலிருந்தே 36% வட்டி விதிக்கப்படும். இது தெரியாமல் சிலர் அவசரப் பணத்தேவைக்காக கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்கிறார்கள். பொருள்களையும், சில சேவைகளையும் வாங்கத்தான் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம் எடுக்க அல்ல!

தகுதி 4 – லிமிட்டைத் தாண்டிப் பயன்படுத்துவீர்களா?

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிக்கும் கிரெடிட் லிமிட் முழுவதையும் பயன்படுத்துபவராக  நீங்கள் இருந்தால், இனிமேல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த சரியான நபர் கிடையாது. உங்கள் வருமானத்துக்கேற்ப நீங்கள் இவ்வளவு செலவு செய்யலாம் என உங்களுக்கு ஒரு லிமிட் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கும். இந்த லிமிட்டுக்குள் நீங்கள் செலவு செய்யலாம் என்றாலும், லிமிட் முழுவதையும் பயன்படுத்தும்போது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், நீங்கள் வாங்கிய கடனை சரியாகத் திரும்பக் கட்டமுடியாமல் போகவும் வாய்ப்புண்டு.

தகுதி 5 – ரிவார்ட் பாயின்டுகளுக்கான பொருள்களை வாங்குவீர்களா?

கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவு களுக்கு ரிவார்டு பாயின்டுகளை வழங்குவது வங்கிகளின் வழக்கம். அந்த ரிவார்டு பாயின்டு களைப் பெறுவதற்காகவே பலர் அதைப் பயன் படுத்துகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கில்லை. ஏனெனில், 5,000 பாயின்டுகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள், சில ஆண்டுகளில் 7,000 பாயின்ட் இருந்தால்தான் கிடைக்கக்கூடும். இந்த உத்தியானது உங்களின் கிரெடிட் கார்டினை அதிகம் பயன்படுத்த வைக்கவே தவிர, சலுகைகள் வழங்க அல்ல!

%d bloggers like this: