Advertisements

இதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்!

ரு வருடத்தில் பெரும்பாலான நாள்கள் நமக்கு வெயில் காலம்தான். என்றாலும், கோடைக்காலம் வரப்போகிறது என்றாலே சற்று அதிகம் கவலைப்படத் தொடங்கிவிடுவோம். `இந்த வருஷம் வெயில் அதிகமாக இருக்கும்னு சொல்றாங்க… அதனால கண்டிப்பா ஏ.சி வாங்கிரணும்’ என்பது போன்ற திட்டமிடல்கள் அதிகரிக்கும். ஆனால், பிற காலநிலைகளைப்போலவே கோடைக்காலமும் பூமிக்குத் தேவையாக இருக்கிறது. பொதுவாக, கோடைக்காலத்தில் அம்மை, கண்வலி போன்ற நோய்கள் பாதித்தால், அதிகமாக பயப்படுவோம். ஆனால் இயற்கை, இந்த வெயில் காலத்திலும் மனிதகுலத்துக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கத்தான் செய்கிறது.

 

அந்த வகையில், எதிர்பாராத நேரத்தில் சட்டென்று உயிரிழப்பை ஏற்படுத்தும் மாரடைப்பு நிகழ்வுகள் கோடைக்காலத்தில் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய் மருத்துவர் பி.ஜெயபாண்டியன் கூறுகிறார்… “பிற காலநிலைகளை ஒப்பிடும்போது கோடைக்காலத்தில் மாரடைப்பு (Myocardial Infarction) நிகழ்வுகள் குறையும். பொதுவாக, குளிர்காலத்தில் அதிகாலை நேரத்தில் மாரடைப்பு அதிகமாக ஏற்படும்; உடலின் வெப்பநிலை குறையும்போது, அதைச் சமன்படுத்த வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் அதிகமாகப் பசி எடுப்பது, வளர்சிதை மாற்றம் அதிகமாவதன் அறிகுறியே. இப்படி வளர்சிதை மாற்றம் அதிகமாகும்போது இதயத்துடிப்பு தானாகவே அதிகரிக்கும். அத்தகைய சூழலில் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், ரத்தக்குழாய் வெடிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு   அவை வெடித்துவிடும் அல்லது சிதைந்துவிடும்.

 

900 பேர் இத்தகைய அபாய நிலையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் 100 பேருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், கோடைக்காலத்தில் வளர்சிதை மாற்றத்தின் அளவு இயல்பாக இருக்கும் என்பதால், இதயத்துடிப்பும் இயல்பாகவே இருக்கும். அதனால், கோடையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.     900 பேர் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாய நிலையிலிருந்தால், அவர்களில் 10 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குளிர்காலத்தில் அதிகாலை நேரங்களில் ஏற்படும் நிகழ்வுகளை ஒப்பிடும்போது பக்கவாதத்தைவிட மாரடைப்புதான் அதிகமாக ஏற்படுகிறது. காரணம், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் 10 மில்லிமீட்டர் அளவு இருக்கும். ரத்தம், அவற்றின் வழியாகச் செல்லும்போது அழுத்தம் குறைவாக இருக்கும். ஆனால், இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களின் அகலம் அதிகபட்சம் 5 மில்லிமீட்டரும், குறைந்தபட்சம் 2.5 மில்லிமீட்டராகவும் இருக்கும். அதனால் இதயத்துக்குச் செல்லும் அழுத்தமும் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அழுத்தம் இயல்பாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படுவற்கான வாய்ப்பு குளிர்காலத்தைவிட கோடைக்காலத்தில் குறைவாக இருக்கும். அதற்காக கோடைக்காலத்தில் இதய நோய்கள் ஏற்படாது என்றும் கூற முடியாது.

 

வைட்டமின் டி குறைபாடு மாரடைப்பை உருவாக்குவதற்கான முக்கியக் காரணியாக இருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே வைட்டமின் டி குறைபாட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சூரிய ஒளி மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளி உடலில்படும்போதுதான் வைட்டமின்      டி-ஐ  உடல் உற்பத்திசெய்யும். ஏ.சி அறைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இரவுப்பணி செய்துவிட்டு பகலில் தூங்குபவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இவர்களில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், ஆண்கள் கொஞ்ச நேரமாவது வெயிலில் வெளியே வருகிறார்கள். பெண்கள் கூடுதல் கவனத்துடன் வெயிலைத் தவிர்க்கிறார்கள். எலும்பு அடர்த்தி குறைவதற்கான காரணமும் வைட்டமின் டி குறைபாடுதான். கோடைக்காலத்தில் பல்வேறு வழிகளில் வைட்டமின் டி கிடைக்கிறது.

கோடைக்காலம் இயல்பாகவே நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். `பிற காலநிலைகளைவிட, கோடையில்தான் உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வோம்’ என்கின்றன ஆய்வுகள்.’’

 

“கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் நமக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன. கோடையில் கொசுக்களின் உற்பத்தி குறையும் என்பதால், மலேரியா, டெங்கு போன்ற நோய்களின் தாக்கம் குறையும்.

மழைக்காலம், குளிர்காலம் போன்ற நேரங்களில் மூச்சுத்திணறல், ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் அவற்றின் தீவிரம் குறையும். குளிர்காலத்தில் குளிரைச் சமாளிப்பதற்காக உடல் கூடுதலாக வெப்பத்தை உற்பத்தி செய்யும். அதனால் குளிர்காலத்தில் அதிகம் பசியெடுக்கும். அப்போது சாப்பிடும் உணவின் அளவும் அதிகரிக்கும். உணவின் அளவு கூடும்போது, உடலில் கலோரிகளும் அதிகரிக்கும். ஆனால், வெயில் காலத்தில் உணவுத் தேவை குறைவாக இருக்கும்.  அதனால் கலோரிகளும் குறைவாகவே இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கோடைக்காலம் உதவும்.

கோடையில் பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வோம். ஆக,  ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் கோடை உதவுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வலியை உருவாக்கும் தன்மை அகன்று வலிகள் குறையும். கைகால் மூட்டுகளின் இறுக்கம் தளரும். உடல் இயக்கமும் அதிகரிக்கும். குளிர்காலம், மழைக்காலத்தில் அடிக்கடி குளிப்பதைத் தவிர்ப்போம். அதனால் நோய்த்தொற்று, பூஞ்சைத்தொற்று போன்ற சரும நோய்கள் அதிகம் ஏற்படும். கோடைக்காலத்தில் ‘சன் பர்ன்’ (Sun Burn) போன்ற சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், அடிக்கடி குளிப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவை அதிகரிக்கும் என்பதால், சருமம் தொடர்பான தொற்றுகள் குறையும்” என்கிறார் பொது மருத்துவர் பி.கிருஷ்ணமூர்த்தி.

 

கோடையின் நன்மைகள் குறித்து சித்த மருத்துவம் என்ன சொல்கிறது? சித்த மருத்துவர் பிச்சையா குமார் விளக்குகிறார்.

“சித்த மருத்துவத்தில், `வெயில் நல்லது’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. `உடல் உழைப்பில் ஈடுபடுவர்களுக்கு காலை வெயிலும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மாலை வெயிலும் நல்லது’ என்கிறது சித்த மருத்துவம். சிகிச்சையளிக்கவும், மருந்துகள் தயாரிக்கவும் சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, உடலில் வைட்டமின் ஈ சத்துகளை நிலைநிறுத்த மறைமுகமாக உதவிசெய்யும்.

கோடைக்காலத்தில் வாதநோய்கள், கப நோய்கள் இரண்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சற்று மட்டுப்பட்டிருக்கும். மூட்டுவலி உள்ளிட்ட அனைத்து வகையான வலிகளும் வாதநோய்களில் அடங்கும்.  அடிக்கடி சளித் தொந்தரவு, ஆஸ்துமா பிரச்னை ஏற்படுபவர்களுக்கு கோடைக்காலம் சற்று ஆறுதல் அளிக்கும். 

 

கோடைக்காலத்தில் புழுக்கம் அதிகரிப்பதால், பெரும்பாலும் இரண்டு தடவை குளித்துவிடுவோம். தாகம் அதிகரிக்கும் என்பதால், சாதாரண நாள்களில் குடிக்கும் தண்ணீரைவிட இரண்டு மடங்கு தண்ணீர் அதிகம் குடிப்போம். தயிர் சாதம், பழைய சாதம், மோர் சாதம்  போன்ற குளிர்ச்சியான உணவுகளை உடலே விரும்பத் தொடங்கும். பூட்டிய அறைகளுக்குள்ளே ஏ.சியில் இருந்தாலும் சற்று காற்றோட்டமான இடத்தை மனது விரும்பும். பொதுவாக, கோடையில் செயற்கை விஷயங்களைத் தவிர்த்துவிட்டு இயற்கையோடு ஒன்றி வாழும் தகவமைப்பு ஏற்படும்.

கோடைக்காலத்தில் காரச் சுவையின் மீது நாட்டம் குறையும்.  வெப்பத்தைச் சமன்படுத்த கல்லீரலும் சருமமும் அதிகமாக வேலை செய்யும்.  இதனால் பித்தத்தின் குணம் அதிகரிக்கும். பித்தம் அதிகரிக்கும்போது  நம்மையும் அறியாமல் நாக்கில் கசப்புச் சுவை தோன்றும். நாவறட்சி, சுவையின்மை, நாக்கில் கசப்புச் சுவை தெரிவது என மூன்றில் ஏதாவது ஓர் அறிகுறியின் மூலம் நம் அனைவருக்கும் தெரியவரும். அந்த நேரங்களில் நமக்கு இயற்கையாகவே கசப்புச் சுவையின் எதிர் சுவைகளான இனிப்பு, புளிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். அதனால்தான் கோடையில் மாம்பழம், திராட்சை, இளநீர், கரும்புச்சாறு போன்ற இனிப்பு, புளிப்பு உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறோம். பித்தத்தின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும்போதே அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிட்டால் பித்தத்தின் தன்மை குறைந்து, கோடைக்கால நோய்களிலிருந்து உடல் தன்னைத்தானே இயற்கையாகவே தற்காத்துக்கொள்ளும்.” 

பூமியும் உயிரினங்களும் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை காலநிலை மாற்றங்கள்தாம்  அளிக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம். அதற்குக் கோடையும் விதிவிலக்கல்ல. எனவே, கோடைக்காலத்தில் ‘வெயிலோடு விளையாடி… வெயிலோடு உறவாடி… வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்’ போடுவோம்!


குழந்தைகளின் பாதங்களைப் பாதுகாக்க, ஷூ அணியத் தேவையில்லாத இடங்களில் செருப்புகளையே அணிந்துசெல்ல வையுங்கள். ஷூ அணிந்தே ஆகவேண்டியிருந்தால் காட்டன் சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும். ஒரு முறை அணிந்த சாக்ஸை துவைக்காமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இறுக்கமான ஷூ, காலணிகளால் விரல் இடுக்குகளில் வியர்த்து, தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


கோடைக்காலத்தில் டைபாய்டு, காலரா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமலிருக்க, வீட்டில் தயாரிக்கப்படும் சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிடவைக்க வேண்டும். தெருவில், உணவகங்களில் விற்கப்படும் பண்டங்கள் சுகாதாரமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.

Advertisements
%d bloggers like this: