Advertisements

டாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

நிதியாண்டு 2018-19 நிறைவடைந்துவிட்டது. அதற்கான வருமான வரியும் கட்டியாகிவிட்டது.  இனி, ஜூன் 15-க்குப்பிறகு படிவம் 16-ஐ பெற்று, ஜூலை 31-க்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்து விட்டால் கடந்துபோன நிதியாண்டுக்கான வரிக் கடமை முடிந்துவிடும் என்ற சம்பளதாரர்களின் நினைப்பது சரிதான்.

ஆனால், வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்முன், நிதியாண்டில் பெற்ற பல்வேறு வகை வருமானமும் வரிக் கணக்குத் தாக்கலில் கொண்டுவரப்பட்டு விட்டதா, வரிச் சலுகைகள் வருமான வரிச் சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு க்ளெய்ம் செய்யப்பட்டுள்ளதா,  கணக்கிட்டுக் கட்டப்பட்ட வரியானது சரிதானா என்பன போன்ற விவரங் களைச் சரிபார்த்துவிடுவது நல்லது.

இதை ஏன் சரிபார்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு.

கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி வரிக் கணக்குப் படிவங்கள், வரிக் கணக்குடன் பொருந்தவில்லை. சம்பளம் வழங்கிய அதிகாரி சமர்ப்பித்த சம்பளக் கணக்குக்கும், சம்பளம் பெற்றவர் வரிக் கணக்குத் தாக்கலில் தெரிவித்த கணக்குக்கும் வேறுபாடு இருந்தன.

 

தவிர, வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதும், வரிச் சலுகையை அதிகப்படுத்திக் காண்பிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்கிறது வருமான வரித்துறை அறிவிப்பு. இந்தக் குறைபாடு இரண்டையும் இனியும் தொடராமல் தடுப்பதற்கு, வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் இதுவரை இல்லாத ஒரு புதுமுறையை அமலாக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை.

அதாவது, வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, சம்பளம் வழங்கும் அதிகாரி, சம்பளம் பெறும் ஊழியரின் வருமான வரியைக் கணக்கிட என்ன நெறிமுறையோ, அதனை அப்படியே பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டுக்கு (அதாவது, 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கு) வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய புதிய படிவம்  ஐ.டி.ஆர் 1. 

சென்ற மதிப்பீட்டு ஆண்டு வரை அமலாக்கம் பெற்றிருந்த வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் தவறு இருந்தால், அதனைக் கண்டுபிடிப்பது சிரமம். நடப்பு மதிப்பீட்டு ஆண்டுக்கான  (நிதியாண்டு 2018-19-க்கான) படிவத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, வருமான விடுபாடு, தவறான வரிச் சலுகை கோரிக்கை, குறைவான வருமான வரிக் கணக்கீடு முதலானவற்றை வருமான வரித்துறை சுலபமாகக் கண்டுபிடித்துவிடும். அவ்வாறு தவறு இருப்பது கண்டுபிடிக்கப்படுமானால் விடுபட்ட வரி மற்றும் அதற்கான வட்டி, அபராதம், தண்டனை என்பதாகத் தொடரும் வரித்துறை நடவடிக்கைகள்.

எனவே, வரிக் கணக்குத் தாக்கலுக்குமுன் வரிக் கணக்கீட்டைச் சரிபார்த்துக்கொள்வது தவிர்க்க முடியாத கடமை.  தற்போது வரிக் கணக்குக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வருமான விவரம், கோரப் பட்டுள்ள வரிச் சலுகை,  செலுத்தப்பட்ட நிகர வரி ஆகிய மூன்றும் சரியாக இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கான ஆவண ஆதாரங்களை ஆயத்தமாக வைத்திருப்பதுடன், அந்த ஆவணங்கள் வரிச் சலுகைக்கு உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவையா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சென்ற ஆண்டுக்கான வரித் தாக்கல் படிவத்துக்கும், தற்போதைய வரிக் கணக்குத் தாக்கல் படிவத்துக்கும் பல்வேறு தகவல்கள், பல்வேறு நிலைகளில் மாறுபடுகின்றன. இந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அலவன்ஸுகள்

 

சென்ற நிதியாண்டில் அலவன்ஸுகள் தவிர்த்த நிகரத் தொகையே சம்பள வருமானமாகப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அனைத்து அலவன்ஸுகளையும் சம்பள வருமானத்தில் சேர்த்துக் கணக்கிட வேண்டும். அதன்பிறகு, பிரிவு 10-ன் கீழ் உள்ள, வரி விலக்குக்குத் தகுதி யான அலவன்ஸுகளை மட்டுமே கழிக்க முடியும். பிரிவு 10-ன் கீழ் 20 வகையான அலவன்ஸுகள் கழிவுக்குத் தகுதியானவை என்றாலும், வீட்டு வாடகை அலவன்ஸ் மட்டுமே அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதற்கு நிபந்தனைகளும்கூட உண்டு. அவற்றைப் பின்பற்றி கழிவு பெற வேண்டும்.

வீட்டுச் சொத்து வருமானம்

சொந்த முயற்சியில் கட்டிய வீடாக இருந்தாலும், வீட்டுக் கடன் வாங்கிக் கட்டிய வீடாக இருந்தாலும், அதனை வாடகைக்கு விட்டிருந்தால் மட்டுமே வருமானம் பிளஸ்-ஆக இருக்கும். வீட்டுக் கடன்  மூலம்  வாங்கிய வீட்டில் சம்பளதாரரே குடியிருக்கும் பட்சத்தில் அந்தத் தொகை மைனஸ்-ஆக இருக்கும். வருமானத்தில் ரூ.2 லட்சம் வரை கழித்துக்கொள்ளலாம். கடன் தந்த நிறுவனம் மற்றும் கடன் தொகை, கட்டிய தொகை அனைத்துக்கும் ஆவண ஆதாரம் அவசியம்.

இதர வருமானம்

இந்தத் தலைப்பின்கீழ் பொதுவானவை வட்டி வருமானமும், குடும்ப பென்ஷனும்தான். பிறவகை வருமானமும் இருக்கலாம். முந்தைய ஆண்டுகளில் இதர வருமானம் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தால்போதும். தற்போது இனவாரியாகப் பதிவு செய்வது அவசியம்.

இதில் கவனிக்கவேண்டியது, சேமிப்புக் கணக்கில் பெறப்படும் ரூ.10,000 வரையான வட்டிக்கு வரிச் சலுகை. மூத்த குடியினருக்கு இதன் வரம்பு ரூ.50,000 வரை.

அனைத்து வகை பிராவிடண்ட் ஃபண்ட்,    சி.பி.எஸ், என்.பி.எஸ், போன்றவற்றின் வட்டி, வருமானக் கணக்கில் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால், தேசிய சேமிப்புப் பத்திரம், டைம் டெபாசிட் போன்றவற்றுக்கான வட்டி விடுபாடு இல்லாமல் வருமானக் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றுக்கான வரியும் முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மேற்சொன்னவற்றை முறையாகச் செய்துவிட்டால், வருமானத்தைக் குறைத்துக் காட்டிய குற்றம் நம்மை அணுகாது. இனி வரிச் சலுகை களுக்கான நிபந்தனைகளைப் பார்ப்போம்.

பிரிவு 80D-யின் கீழ் செலுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் ஒரே தவணையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குச் செலுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சலுகையானது 2018-19 நிதியாண்டுக்குரிய பிரீமியத்துக்கு மட்டுமே.

பிரிவு 80E-யின்கீழ் கல்விக் கடனுக்கான வட்டிச் சலுகை வட்டி கட்டத் தொடங்கியது முதல் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே.

பிரிவு 80DD மற்றும் பிரிவு 80U-வின் கீழ் மாற்றுத்திறனாளியாகச் சார்ந்து வாழ்பவருக்கும், மாற்றுத் திறனாளியாகவே உள்ள சம்பளதாரருக்கும் பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் சலுகை உண்டு. உடல் இயலாமையைக் கருத்தில் கொண்டு தரப்படும் சலுகை இது. இயலாமை தற்காலிகமானது என்றால் நிதியாண்டு முழுமைக்கும் சான்று உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

சார்ந்து வாழ்வோர்

சம்பளதாரருக்கு மட்டுமன்றி, சம்பளதாரரைச் சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கும் சலுகைகள் தரப்படுகின்றன. இதன்படி பிரிவு 80D-யின் கீழ் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவச் செலவுக்குரிய சலுகை, சம்பள தாரரைச் சார்ந்து வாழும் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு மட்டுமே. ஆனால், பிரிவு 80DD-யின் கீழான மாற்றுத் திறனாளிக்கான சலுகை, பிரிவு 80DDB-யின்படி தரப்படும் சில சிறப்பு நோய் சிகிச்சைக்கான சலுகைகள் சார்ந்து வாழும் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோருடன்கூட சார்ந்து வாழும் சகோதர, சகோதரிக்கும் உண்டு.

கூடுதல் பயனாளிகள்

பிரிவு 80C-யின்கீழ் அனுமதிக்கப்படும் கல்விச் செலவுக்கான சலுகையானது, சம்பளதாரரின் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. பிரிவு 80E-யின் கீழான கல்விக் கடன் வட்டிக்கான சலுகை, சம்பளதாரர், அவரது மனைவி, அவரது பிள்ளைகள் மற்றும் அவர் கார்டியனாக இருக்கும் குழந்தைக்கும்கூட பொருந்தும்.

01.04.18 முதல் 60 வயதானால் மூத்த குடிமக்கள், 80 வயதானால் மிகவும் மூத்த குடிமக்கள் என்ற பாகுபாடு நீக்கப்பட்டு, மூத்த குடிமக்கள் என்ற ஒரே தலைப்பின்கீழ் ஒரே அளவான தொகைக்கு சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், முதல்கட்ட வரியில்லா வருமான வரம்பு ரூ.5 லட்சம் என்ற சலுகை மட்டும் மிக மூத்த குடிமக்களுக்கு இன்றளவும் தொடர்கிறது.

சலுகைக் குழப்பம் தவிர்க்க…

பிரிவு 80C-யின்படியான சலுகை கல்விச் செலவுக்கு உரியது. ஆனால், பிரிவு 80E சலுகை கல்விக் கடன் வட்டிக்கு உரியது. கல்விக் கடன் அசலுக்குச் சலுகை இல்லை.

வீட்டுக் கடனுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டிச் சலுகை உண்டு. ஆனால், வீடு பழுது பார்த்தல், விஸ்தரித்தல், மாற்றியமைத்தல் போன்ற கடனுக்கு வட்டிச் சலுகை ரூ.30,000 மட்டுமே.

பிரிவு 80GG-யின் கீழ் அனுமதிக்கப்படும்  சலுகையானது, சம்பளத்துடன் வீட்டு வாடகை பெறாதவர்களுக்கு மட்டுமே. அதிகபட்சமாக மாதம் ரூ.5,000 வீதம் ஆண்டொன்றுக்கு 60,000 ரூபாய் அல்லது ஓராண்டு சம்பளத்தில் 25% இவை இரண்டில் எது குறைவோ, அந்தத் தொகை கழிவு பெறும். மேலும், பணி செய்யும் ஊரில் குடியிருப்பது சொந்த வீடாக இருக்கக்கூடாது.

தவறுகளிலெல்லாம் பெரிய தவறு எது என்றால், சார்ந்து வாழும் ஒரே நபருக்கு குடும்பத்திலுள்ள இரண்டு சம்பளதாரர்களும் சலுகை பெறுவதுதான். அதேசமயம், கணவன்  மனைவி இருவருமே சம்பளதாரர்களாக இருந்தால். ஆளுக்கொரு பிள்ளைக்கு கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டிச் சலுகை பெறலாம்.

இவற்றையெல்லாம் கவனித்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Advertisements
%d bloggers like this: