சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. இது நமக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உணர்த்துகிறது எனச் சொல்லலாம். வீட்டை வாங்கும்போது வெளிப்படை யாகத் தெரியும் கட்டணங்கள் குறித்து நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். குறைவான விலை, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிந்துவைத்திருக்கும் நாம், அத்தியாவசியமான பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.


ஒரு வீட்டை வாங்கும்போது, மறைமுகமாக நாம் செலுத்தக்கூடிய கட்டணங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். வீட்டை வாங்குவதற் கான பட்ஜெட் என்பதில் டவுன் பேமென்ட் மற்றும் மாதத் தவணைகள் உள்ளடக்கியதாகும். மேலும், சில கூடுதல் இணைப்புகளாக வரும் செலவுகளைக் கணக்கில்கொள்ள தவறிவிடுவதால், வீட்டை வாங்கி முடிக்கும்போது கணிசமானதொரு தொகை கூடுதலாகச் சேர்ந்து நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. வீடு வாங்கும்போது கூடுதலாக வரக்கூடிய கட்டணங்கள் என்னென்ன எனத் தெரிந்து கொள்வது அவசியம். வீடு வாங்கும்போது ஏற்படும் ஏழு வகையான மறைமுகச் செலவுகளை இனி பார்ப்போம்.

பராமரிப்புக்கான முன்பணம்

நீங்கள் வாங்கும் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால், இரண்டாண்டு காலப் பராமரிப்புக்கு முன்பணமாக ஒரு தொகையை பில்டர்கள் வாங்குவார்கள். ஒரு சதுர அடிக்கான பராமரிப்புக் கட்டணம் என்பது, நீங்கள் வாங்கவுள்ள வீடு அமைந்துள்ள இடம், நிலமதிப்பு, வீட்டின் வகைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. டெவலப்பர்களால் வழங்கப்படும் வசதிகளும் இந்தச் செலவுகளுடன் இணைக்கப்படலாம். 

முத்திரைத்தாள்/பதிவுக் கட்டணம்

ஒரு வீட்டை வாங்கும்போது அந்தச் சொத்துக்கான முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணத்தைக் கண்டிப்பாக அரசுக்குச் செலுத்தியாக வேண்டும். இந்தக் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம்  மாறுபடக்கூடும். இது சாதாரண தொகை போன்று தெரியலாம். ஆனால்,  உண்மையாக இது கணிசமான தொகையாகும்.

வாகன நிறுத்துமிடத்துக்கான விலை

ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பில் வாகன நிறுத்துமிடம் மிக முக்கியமான தேவையாகும். வாகன நிறுத்துமிடம் இருந்தால் தான் அதை  மறுவிற்பனை செய்யும்போது அதற்கு மதிப்பு இருக்கும். அதேவேளை, வீட்டை வாங்கும்போது அது கூடுதல் செலவாகவும் இருக்கும். இது மறைமுகச் செலவாக இல்லாவிட் டாலும், வீடு வாங்கும்போது வீட்டுக்கான வாகன நிறுத்துமிடமும் இலவசமாகக் கிடைக்கும் என்று பலரும் கருதுவதால் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

 

உள்அலங்காரச் செலவுகள்

நாம் வாங்கும் வீடு, கூடுதல் உள்அலங்காரச் செலவுகளுடன்தான் கிடைக்கிறது. உங்களுடைய கனவு இல்லத்தை அடிப்படை வசதிகள்போக, பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், பெயின்டிங், மரச் சாமான்கள் போன்ற கூடுதல் செலவுகளுடன்தான் அலங்கரிக்க வேண்டும். பில்டர்கள் மூலமே உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் செய்துவிட்டால், அதற்காக நாம் செலவு செய்யும் தொகை சிறிது குறைவதற்கு வாய்ப்புள்ளது. 

ஆய்வுக்கான கட்டணம்

நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வீட்டுக் கடனுக்கான தகுதியைக் கணக்கிடுவதற்காக மூன்றாம் நபர் ஆய்வாளர்களை வங்கிகள் நியமிக்கின்றன. இதற்கான கட்டணம், உங்களுடைய வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்ததும் வசூலிக்கப்படும். இத்துடன்  கூடுதலாக சொத்து வரி, வீட்டுக்கான காப்பீட்டுக் கட்டணம் போன்றவற்றையும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இது கட்டாயமல்ல என்பது முக்கியமான விஷயம்.

வீட்டுத் தேர்வுக்கான முன்னுரிமைக் கட்டணம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏரியைப் பார்த்தோ, பூங்காவைப் பார்த்தோ இருக்கிற வீட்டைத் தேர்வு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். சில நகரங்களில், அப்பார்ட்மென்டின் தரைதள வீட்டின் விலை, மேல்தளத்து வீடுகளைவிட அதிகமாக இருக்கும் அல்லது மேல்தளம் செல்லச் செல்ல அதிகமாக இருக்கும்.

 

இந்த முன்னுரிமைக் கட்டணம், வீட்டின் சதுர அடி, சூப்பர் பில்ட்-அப் ஏரியா மற்றும் தளத்தைப் பொறுத்து வேறுபடும். இந்த முன்னுரிமைக் கட்டணத்தை நீங்கள் வாங்கவுள்ள வீட்டிற்குப் பொருந்துமெனில், ஒவ்வொரு தளத்துக்கும் நன்கு ஒப்பீடு செய்து, பிறகு முடிவெடுங்கள்.

தரகுக் கட்டணம்

வீடு வாங்குவதற்கான தரகுக் கட்டணமானது  மறைமுகக் கட்டணம் இல்லை என்றாலும், வீடு வாங்கும்போது இந்தக் கட்டணம் நம் சிந்தனை யிலிருந்து மறந்துபோகும். சொத்து மதிப்பு மற்றும் வீட்டுத் தரகரைப் பொறுத்து இந்தக் கட்டணம் வேறுபடும். பொதுவாக, ஒரு வீட்டின் மதிப்பில் 1-2 சதவிகிதமாக இருக்கும். இதற்குமேல் தரகுக் கட்டணமாகத் தரத் தேவையில்லை.

சொந்த வீடு வாங்குவது மகிழ்ச்சிகரமான ஓர் அனுபவம்; நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முக்கியமான ஒரு மைல்கல். நன்கு ஆராய்ந்தறிந்து, திட்டமிட்டு வீடு வாங்கினால், மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகப்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை!

%d bloggers like this: