டார்கெட் 9… ‘மிஸ்’ஸானால் 5-க்கு வேட்டு!” – ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி!

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எல்லா யுக்திகளையும் கையாள ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நடைபெற்று முடிந்த தேர்தலிலும் நடக்க உள்ள நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவர் போட்ட கணக்கு ஒர்க் அவுட்டானால் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாதத் தலைவராக எடப்பாடி மாறிவிடுவார்” என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

“மே 23-க்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சி நீடிக்காது” என்று தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிவந்தார். அதற்குக் காரணம், 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடைபெற்றது. இந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஐந்து இடங்களையாவது கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலை இருந்தது. அ.தி.மு.க-வுக்குத் தற்போது சபாநாயகரோடு சேர்த்து 114 எம்.எல்.ஏ-க்கள் உள்ளார்கள். பெரும்பான்மைக்கான 118 இடங்களுக்கு இன்னும் நான்கு இடங்கள் தேவை. அதேநேரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலையில் இருப்பதால் அந்த ஐந்து இடங்களைச் சரிகட்ட கூடுதலாக ஐந்து இடங்கள் என ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறவேண்டிய நிலை உள்ளது. எடப்பாடி ஆட்சிமீது மக்களுக்கிருக்கும் அதிருப்தி, பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்ற காரணங்களால் அ.தி.மு.க எதிர்பார்க்கும் இடங்களில் வெற்றிபெறாமல் ஆட்சி கவிழும் எனத் தி.மு.க கணக்குப்போட்டது. ஆனால், தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்பாக அ.தி.மு.க தரப்பில் விநியோகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய், இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் அ.தி.மு.க-வுக்குச் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடியிடம் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் எட்டு முதல் 10 இடங்களைச் சட்டமன்றத் தொகுதியில் பெற்றுவிடலாம் என்று சொல்லியுள்ளார்கள். வாக்கு எண்ணிக்கை முடியும்வரை கணிப்புகளை நம்ப வேண்டாம். எனவே, அடுத்த நான்கு தொகுதிகளைக் குறிவைத்து களத்தில் இறங்க முடிவு செய்துவிட்டார் எடப்பாடி. 

நான்கு தொகுதி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, “நமது ஆட்சி தொடர வேண்டுமென்றால், இந்தத் தேர்தல் நமக்கு முக்கியம். அவரவர்களுக்குப் பிரித்துக் கொடுத்த தொகுதியில் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும். நம் ஆட்சிமீது மக்களுக்குப் பெரிய அளவில் வருத்தம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் சில இடங்களில் அமைச்சர்கள் சிலரே தொய்வாக வேலை செய்துள்ளார்கள். அந்த நிலை இந்த நான்கு தொகுதியில் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பேசியுள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளுக்கும் தொகுதிக்கு 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களைப் பிரித்துக்கொடுத்து, வரும் 1-ம் தேதி முதல் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தச் சொல்லியுள்ளார். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சியைத் தவிர… மூன்று இடங்களில் கண்டிப்பாக அ.தி.மு.க வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறாராம் முதல்வர்.

எடப்பாடி நடத்திய நிர்வாகிகள் கூட்டம், நான்கு தொகுதிகள் தேர்தல் வியூகம் குறித்து அ.தி.மு.க தரப்பில் கேட்டால், “18 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கில் வெற்றிபெற்றாலே ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால், ஐந்து எம்.எல்.ஏ-க்கள் எங்களுக்கு எதிராக இருப்பதால் ஆட்சிக்குச் சிக்கல் வந்துவிடும் என எடப்பாடி கருதுகிறார். அதனாலேயே மத்திய அரசு மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்புக்கு எடப்பாடியிடம் கேட்டபோது, உடனே ஒ.கே சொல்லிவிட்டார். இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வும் மிக நேர்த்தியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக எடப்பாடி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே வேட்பாளர் தேர்வில் பூசல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. திருப்பரங்குன்றம் தொகுதியில் பன்னீர் ஆதரவாளர் முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்பு வழங்க எடப்பாடி மறுத்துவிட்டார் என்கிறார்கள். உண்மையில், கள்ளர் சமூகம் அதிகம் உள்ள தொகுதியில் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவதைவிடக் கள்ளர் சமூகத்தினரை நிறுத்தினால் நல்லது என்ற அடிப்படையிலேயே முனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சின்னராசு என்பவருக்குப் பலரும் சிபாரிசு செய்தனர். குறிப்பாக, எடப்பாடி ஆதரவாளர்களே சிபாரிசு செய்தனர். ஆனால், மோகனுக்கு அங்கு செல்வாக்கு உள்ளது என்ற காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சூலூர் தொகுதியில் வேலுச்சாமிக்கு தொடர்புவிட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதால், அங்கு கனகராஜ் தம்பிக்கு வாய்ப்பு வழங்கி சென்டிமென்டாக ஓட்டைக் கறக்க முடிவு செய்தார். இப்படி எல்லா விஷயத்திலும் தனது ஆதரவாளர்கள் என்று பார்க்காமல் வேட்பாளர்களின் தகுதி மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. 

எடப்பாடியின் சில நடவடிக்கைகள் அம்மாவின் (ஜெயலலிதாவின்) நடவடிக்கை போன்று உள்ளது. தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, எடப்பாடியிடம் சென்று… ‘வேறு தொகுதியை மாற்றிக்கொடுங்கள்’ என்று கேட்க, ‘ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேலை செய்யுங்கள்’ என்று கறாராகப் பதில் சொல்லிவிட்டார். அதே போல், நாடாளுமன்றத் தொகுதியில் எந்தெந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க வாக்கு குறைந்துள்ளதோ, அந்த மாவட்டங்களின் அமைச்சர்களுக்குத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சிக்கல் உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் எல்லாம் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளதை எடப்பாடி கவனிக்கத் தவறவில்லை. கொடுத்த பணம் சரியாக வேலை செய்துள்ளது என்று அவர் நினைக்கிறார். எனவே, அடுத்து நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் கூடுதல் கவனிப்பை நடத்தவும் அவர் காய் நகர்த்துகிறார். கட்சியில் பன்னீர் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், இப்போது முடிவுகள் எல்லாம் எடப்பாடியால் மட்டுமே எடுக்கப்படுகிறது. அவரின் முடிவும் அவரது அரசியல் சாதுரியமும் ஆட்சி, கட்சி இரண்டையும் அவர் பக்கம் கொண்டுவந்துவிட்டது. அதேநேரம், 18 சட்டமன்றத் தொகுதிகளில் இவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், அ.தி.மு.க-வுக்கு எதிராக உள்ள ஐந்து எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து தனது ஆட்சியின் பெரும்பான்மையைக் காப்பாற்றிக்கொள்ளவும் எடப்பாடி தயாராக இருக்கிறார். ‘எனக்குப் பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகள் உயிர்ப்போடு இருக்கும்’ என்று ஜெயலலிதா சொன்னார். அதை எடப்பாடியும் செய்துவருகிறார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

ஆட்சியைத் தக்கவைக்க ரெடியாகிவிட்டார் எடப்பாடி!

%d bloggers like this: