கொந்தளித்த எடப்பாடி… களையெடுப்புக்கு ரெடி!

நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் செம ஸ்பீடாக நடக்கின்றன’’ என்றபடியே ‘சர்’ரென்று ‘ஸ்பீட் என்ட்ரி’  கொடுத்த கழுகார், செய்திகளைத் தொடர்ந்தார்.

“ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி இருப்பதால், நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது ஆளும் அ.தி.மு.க. குறிப்பாக, ஒரு தொகுதிக்கே, பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தொகுதியில் முகாமிட்டுப் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். ‘18 தொகுதிகளின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது நம் கையில் லட்டுபோல நான்கு தொகுதிகள் இருக்கின்றன. மொத்த பலத்தையும் காட்டிக் கைப்பற்றியே தீரவேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டாராம் முதல்வர்.’’

“அந்த அளவுக்கு பலம் இருக்கிறதா?’’

“எடப்பாடியின் கனவு பலிக்காது என்றுதான் தி.மு.க தரப்பில் சொல்லிக்கொண்டுள்ளனர். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் வெற்றி உறுதி என்கிறார்கள் தி.மு.க தரப்பில். அதனால், இந்த இரண்டு தொகுதிகளுக்குக் கூடுதல் கவனிப்புக் காட்டுகிறது அ.தி.மு.க. நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள் நடந்த உள்குத்து மோதல்களை வைத்துப் பார்த்தால், வெற்றி வாய்ப்பை இப்போதைக்கு உறுதியாக நிர்ணயிக்க முடியாமல்தான் இருக்கிறது. தேர்தல் முடிவுகள், எடப்பாடி ஆட்சித் தொடர்வதை உறுதிப்படுத்தினால், தமிழக அரசியலிலும் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.’’

“அடேங்கப்பா…’’

 

“ஜெயலலிதா பாணியில் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கப்போகிறாராம் எடப்பாடி. தேர்தல் வேலைகளைச் செய்வதில் அமைச்சர்கள் பலரும் பம்மிவிட்டார்கள் என்று எடப்பாடியின் காதுகளுக்குத் தகவல்கள் வந்துள்ளனவாம். சிலர் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும்கூட தகவல். இதை எல்லாம் கேட்டு கொந்தளித்த எடப்பாடி, ‘தேர்தல் முடிவுகள் வந்த கையோடு இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது’ என்று தீர்மானித்துள்ளாராம்.’’

“ம்!’’

“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ‘இது இதுக்கு இவ்வளவு ரூபாய்’ என்று நிர்ணயிக்கப்பட்டத் தொகை சரியாகச் சென்று சேரவில்லை என்பது தெரிந்து அ.தி.மு.க. தலைமை கொதிப்படைந்துள்ளது. இது இந்த மாவட்டங்களைக் கவனித்துக்கொண்ட அமைச்சர் பெஞ்சமின் மீது கோபத்தைக் கிளப்பியுள்ளதாம். வேலூர் நிலோஃபர் கபில், சிவகங்கை பாஸ்கரன், ராமநாதபுரம் மணிகண்டன், திருநெல்வேலி ராஜலட்சுமி ஆகிய அமைச்சர்களின் தலைகளும் உருள்கின்றன. இவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தோல்வி என்றால், கட்டாயம் பதவி பறிபோகக்கூடும்.’’

“முதல்வருக்கு நெருக்கமாக முதல் வட்டத்தில் இருக்கும் அமைச்சர்களுக்கும் இதேகதிதானா?’’

“டெல்லியுடன் நெருக்கம் காட்டிவரும் அமைச்சர்களிடம் எந்த அளவுக்கு எடப்பாடியின் அஸ்திரம் பாயும் என்று தெரியவில்லையே. குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ‘பவர்ஃபுல்’ அமைச்சர் ஒருவர், தனக்கு வரும் வருமானத்தைக் கணக்குப் போடவே 25 இளைஞர்களை ஊதியம் கொடுத்துவைத்திருக் கிறார் என்றால் பார்த்துக்கொள்ளும். அந்தத் தொகை மொத்தமும் சட்டவிரோத ‘ஹவாலா’ பணப் பரிவர்த்தனை முறையில் ஹாங்காங் செல்கிறது. அங்கு நகை தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பணிகளும் நடக்கின்றனவாம். அந்த அமைச்சருக்குச் சென்னையிலே ஆறு நகைக்கடைகள் செயல்படுகின்றன. இந்த விவரங்கள் எல்லாம் முதல்வருக்கும் நன்றாகத் தெரியும் என்கிறார்கள்.’’

“மூன்றாம் கட்டத் தேர்தல் முடிந்துவிட்டது. ஏதாவது, முக்கிய தகவல்கள் உண்டா?’’

“குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளிலும் பி.ஜே.பி வெற்றிபெறக்கூடும் என்று வந்திருக்கும் செய்திகள், ஆளும் பி.ஜே.பி தரப்புக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதேசமயம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிறைய தொகுதிகளைப் பிடிக்கலாம் என்கிறார்கள். குஜராத், மேற்கு வங்கம் இரு மாநிலங்களிலுமே எதிர்க்கட்சிகளை ஏறிமிதித்துள்ளன ஆளுங்கட்சிகள் (பி.ஜே.பி, திரிணாமுல் காங்கிரஸ்). குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பி.ஜே.பி கட்சியினர், தேர்தல் நடந்த ‘பூத்’ பக்கம்கூட போக முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது, திரிணாமுல் காங்கிரஸ்.’’

 

“கொடுமைதான்.’’

“இந்திய அளவில் இதுவரை ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுகளையும், அங்கு வெற்றி வாய்ப்பு எப்படி என்கிற விவரங்களையும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறாராம். மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்திருக்கும் நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு வாய்ப்பு இல்லை என்று கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டதாம் பி.ஜே.பி. அதனால், கூட்டணி ஆட்சி என்பதை இப்போதே உறுதிப்படுத்திக்கொள்ளும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, ‘தமிழகத்தில் தி.மு.க முன்னிலைக்கு வந்தால், கைகோக்கத் தயங்க வேண்டாம்’ என்றே பேசிவைத்துள்ளனராம். அப்படியொரு சூழல் வந்தால், ஆதரவு தரும் கட்சிகள் பலவும் ‘மோடி பிரதமராகக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைக்கும். அதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தலையாட்ட தயாராகவே இருக்கிறதாம். முதல் சாய்ஸ்,  நிதின் கட்கரி. ஒருவேளை உத்தரபிரதேசத்தில் கூடுதல் இடங்கள் கிடைத்தால், ராஜ்நாத் சிங்கூட பிரதமர் ஆகக்கூடும் என்கிறார்கள்.’’

“ஏன், மோடி மேஜிக் எடுபடவில்லையா? நடிகர் அக்‌ஷய்குமாரை வைத்து இன்டர்வியூ எல்லாம் எடுத்துப் பார்க்கிறார்களே?’’

“நீர் ஆர்.ஜே பாலாஜியின் எல்.கே.ஜி படம் பார்த்தீரா… தேர்தல் புரமோஷன் வேலைகளைச் செய்யும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பாலாஜிக்கு தேர்தல் தந்திரங்களைச் சொல்லித்தரும். அதேநிறுவனம்தான், பாலாஜியின் எதிரியாகப் போட்டியிடும் ஜே.கே ரித்தீஷுக்கும் தந்திரங்களைச் சொல்லித்தரும். கிட்டத்தட்ட இதே கதைதான் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸுக்கும் நடக்கிறது. பி.ஜே.பி-க்கான தேர்தல் புரோமோஷன் வேலைகளை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம்தான் பார்க்கிறது. இதே நிறுவனத்துக்கு நெருக்கமான மற்றொரு நிறுவனம்தான்… காங்கிரஸுக்கும் வேலைகளைப் பார்க்கிறது. ஆக, இந்தியா யாருடைய கைகளில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளும்’’ என்று கண்ணடித்துச் சிரித்தபடியே பறந்தார் கழுகார்.


ஆளுக்கொரு பங்கு!

தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில், பெரும் தொகை சிக்கியதாம். உடனே ஆளும்கட்சித் தரப்பிலிருந்து முக்கிய புள்ளி ஒருவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரிக்கட்டியுள்ளார். அதற்குள் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்குத் தகவல் தெரிந்து அவர் கிடுக்கிப்பிடி போட்டாராம். சிக்கிய தொகையில், அவருக்கும் பங்கு கொடுத்து விஷயத்தை அமுக்கிவிட்டார்களாம்.

%d bloggers like this: