சன்ஸ்கிரீன் உணவுகள்!

ப்பவே இப்படின்னா…. அடுத்தடுத்த மாசமெல்லாம் எப்படியிருக்குமோ தெரியலையே…’ என்கிற புலம்பலை எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது. வாட்டும் வெயிலைச் சகித்துக்கொள்ள முடியாத புலம்பல்கள் இவை. ஒரே ஒரு நாள் வெயிலில் சென்றுவிட்டு வந்தால் போதும். ‘நானே நானா… யாரோதானா…’ என்று பாடும் அளவுக்கு பலரின் சருமமும் படாத பாடுபடும். சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, தொப்பி, குடை உபயோகிப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். “வெயிலின் பாதிப்பிலிருந்து மீள சில வகை உணவுகளும் உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் அபிராமி. ‘‘கோடைக்காலத்தில் சூரியனிலிருந்து வெளியாகும் அதிகமான புறஊதாக் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படும்போது சருமத்திலுள்ள செபேஷியஸ் சுரப்பி


(Sebaceous Gland) அதிக அளவில் எண்ணெய்ப்பசையைச் சுரக்கும். தவிர, சருமத்தில் வறட்சி, நிறம்  மாறுதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க ரசாயனங்கள் நிறைந்த க்ரீம், லோஷன் போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிட்டாலே போதும்’’ என்கிற அபிராமி அப்படிச் சில உணவுகளைப் பட்டியலிடுகிறார்.

 

சிவப்பு, ஆரஞ்சு வண்ணக் காய்கறிகள், பழங்கள்

கேரட், தக்காளி, மாதுளம்பழம், சிவப்பு குடமிளகாய் மற்றும் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் காய்கறிகளில் `லைக்கோபீன்’ (Lycopene) என்ற தாவர  வேதிப்பொருள் அடங்கியுள்ளது. அதுதான் காய்கறிகளுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. இவற்றை உணவில்  சேர்த்துக்கொள்ளும்போது நமது உடலுக்கும் லைக்கோபீன் கடத்தப்படும். இது, சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களை உட்கிரகித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. உடலை, உடை எப்படிப் பாதுகாக்கிறதோ அதேபோல சருமத்தை லைக்கோபீன் பாதுகாக்கும். சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்களையும் காய்கறிகளையும் காலை 11 மணியளவில் சிற்றுண்டி போலச் சாப்பிடுவது நல்லது.

 


 

நட்ஸ் மற்றும் விதைகள்

வால்நட், முந்திரி, சியா விதைகள், வெள்ளை எள், ஆளி விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. மீன், முட்டையிலும்  இந்த அமிலம் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் தானாகச் சுரக்காது. உணவின் மூலமாக மட்டுமே கிடைக்கும்.  ஒமேகா  3 கொழுப்பு அமிலத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேஷன் தன்மைகள் நிறைந்திருக்கின்றன. இது சூரிய வெப்பத்தால் ஏற்படும் சருமப்  புற்றுநோயைக்கூடத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. சில நேரங்களில் உடல் கழிவுகள் உட்புறச் சருமத்தில் படிந்துவிடும். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சத்துகள்  நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளை உணவில் சேர்த்துக்கொண்டால், சருமத்தில் தேங்கும் கழிவுகள் வெளியேறும்.


 

கீரைகள்

பச்சை நிறக் கீரைகள் மற்றும் `க்ரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று அழைக்கப்படும் முட்டைகோஸ், காலிஃப்ளவர், புரொக்கோலி ஆகியவற்றில் பீட்டா கரோட்டின் என்ற தாவர வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இது இயற்கையாகவே சருமத்தைப் பாதுகாக்கும். மேலும், இந்த உணவுகளில் காணப்படும் லூட்டின் மற்றும் ஸீயஸான்தின் (Luetin, Zeaxanthin) போன்ற தாவர வேதிப்பொருள்கள், எண்ணெய்ப்பசை, சருமத்தில் உண்டாகும் சுருக்கம், சூரிய ஒளியினால் சருமம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்னைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.


 

கிரீன் டீ

கிரீன் டீயில் ஃப்ளேவனாய்டு (Flavonoid) என்ற தாவர வேதிப்பொருள் உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். மேலும், இதில்  காணப்படும் இஜிசிஜி (EGCG) என்ற வேதிப்பொருளுக்கு புறஊதாக் கதிர்களின் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. கிரீன் டீ பருகுவதால் சருமம் இயற்கையாகவே பொலிவுபெற்று, பிரகாசமாகத் தோற்றமளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் `கொலாஜென்’ (Collagen)  என்ற புரதம் உடலில் அதிகம் உற்பத்தியாவதற்கு கிரீன் டீ உதவும்.


 

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி ஆகிய பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்தப் பழங்கள் சருமத்தின் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவும். பழமாகவும் சாறாகவும் சாப்பிடலாம்.


 

இளநீர்

வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறையத் தொடங்கும். கோடைக்காலத்தில் இளநீர் குடிப்பது உடல் இழந்த நீர்ச்சத்தை மீட்டெடுக்கும்; ஆற்றல் தரும்; சருமத்தையும் காக்கும்.


 

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி (Anti Inflammatory) தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. இது, சருமத்தின் `எபிடெர்மிஸ்’ (Epidermis) என்ற உட்புற  அடுக்கைப் பாதுகாத்து, புறஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் தடுக்கும். அதனால் கோடைக்காலத்தில் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதோடு, குடிநீரிலும் கலந்து குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து குடிப்பது நல்லது. இரவு பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலும் மஞ்சள்தூள் சேர்த்துப் பருகலாம்.


 

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் `ஸ்குவாலின்’ (Squalene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது. இது, சருமத்திலிருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, பளபளப்பைக் கொடுக்கும். ஆலிவ் எண்ணெயை சாலட் போன்றவற்றில் ஊற்றிச் சாப்பிடலாம். இரவு படுக்கப்போகும்போது உடலில் தேய்த்துத் தூங்கலாம்.


 

அவகேடோ

‘அவகேடோ’ என்று அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட்டில் வைட்டமின் சி, ஈ, கே, பி-6 ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை வெயிலில் வறண்டுபோகும் சருமத்துக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். இதைப் பழமாகவோ, பழச் சாறாகவோ வாரத்துக்கு மூன்று என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல், ஆன்டிஇன்ஃபிளமேஷன் ஆகிய தன்மைகள் இருக்கின்றன. அதிக வெப்பத்தின் தாக்கத்தால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெயை சமையலில்  சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இரவில் படுக்கப்போகும்போது சருமத்தில் தடவிக்கொள்ளலாம்.

%d bloggers like this: