நாய்க்குட்டிகிட்ட இதெல்லாம் கவனிங்க… அதோட பாஷையும் புரியும்!

நாய்க்குட்டிகளோட இந்த பாஷையை என்றைக்காவது புரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளீர்களா?

நாய்க்குட்டிகிட்ட இதெல்லாம் கவனிங்க... அதோட பாஷையும் புரியும்!

செல்லப்பிராணிகள் யாருக்குத்தான் பிடிக்காது. அவற்றுள் எப்பொழுதும் முதல் இடத்தில் இருப்பவை நாய்கள்தான். மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படுவதும் நாய்தான். ஓநாயில் இருந்து பிரிந்த இனமாகக் கருதப்படும் இவைதான் முதன்முதலில் பழக்கப்படுத்திய மிருகம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆபத்து என்றால், தன் பாதுகாவலரின் உயிரைக் காக்க தன் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு விசுவாசி இந்த விலங்கு.

ஒரு காலத்தில் வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தினோம். இப்போதோ குடும்பத்தின் உறுப்பினராகவே மாறிவிட்டது. எல்லோரும் ஒரு கட்டத்தில் இவை பேசினால் எப்படி இருக்கும், அதுவும் மனித மொழியில் என்றால் எப்படி இருக்கும் என்று நம்மில் பலர் நினைத்துப்பார்த்து இருக்கிறோம். ஆனால், அப்படி பேசவில்லையென்றால்தான் என்ன? அது இப்போதும் நம்மிடம் பேசிக்கொண்டுதானே இருக்கிறது? ஆம், அது தனது தனது சத்தத்தையும், உடல் மொழியையும் வைத்தே நம்மிடம் தகவலைப் பரிமாறிவிடுகிறது. நாம்தான் புரிந்துகொள்வதில்லை. பாதுகாவலர்கள் அடிக்கடி சொல்லக்கூடிய ஏவல் கட்டளைகள், மனித முகபாவனைகள் போன்றவற்றை அவை நன்கு தெரிந்து வைத்திருக்கும். அவற்றின் ஞாபக சக்தி 200 வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு உண்டு. யார் எதிரி, நண்பன் என்று நன்கு அறிந்து வைக்கக்கூடிய மோப்ப சக்தியும் உடையது. எனவே நாமும் அவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

நாய்க்குட்டி

ஒரு பாதுகாப்பாளர்  நாயின் உடல்மொழியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதனுடைய அசைவுகளை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதனுடைய தலை, காதுகள், வால், வாய், குரல், கண், இன்னும் சொல்லபோனால் உடல் அமைப்பு முழுவதுமாக தெரிந்திருப்பது மிகமிக அவசியம். நாயின் குரலில் நிறைய மாறுபாடுகள் உள்ளன. நன்கு கவனித்தால் குரைக்கும் சத்தம், சிணுங்குதல் சத்தம் என்று வேறுபடும். நாய்கள் பொதுவாக பயந்தோ, உடம்பு சரியில்லாமல்லாமலோ அல்லது மிகுந்த ஆவலோடு இருந்தால் சிணுங்குவதாக அர்த்தம். குரைக்கும் முறையிலும் கூட பல விதமான காரணங்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக அது உற்சாகத்தில் இருந்தாலோ, எதிரிகள் வந்தாலோ இடைவெளி இல்லாமல் குரைக்கிறது. உறவினரைத் தவிர வேற யாராக இருந்தால் தாக்கவும் முயற்சி செய்கிறது. பற்கள் மூலமாகவும் தனது உணர்ச்சிகளைப் பாதுகாவலருக்கு தெரிவிக்கிறது. மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டினால் கோபத்தில் இருப்பதாக அர்த்தம். அதேபோல் கண்களிலும் நிறைய வேறுபாடுகளைப் பாதுகாவலர்கள் கவனிக்க வேண்டும். ஒரு நாயின் கண்களிலிருந்து அவை பசி, கோபம், அமைதி, பாசம், அன்பு, சோம்பல் ஆகியவற்றை யூகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாய்க்குட்டி

கோபமுற்ற நாய் தன் கண்களை எதிராளியின் கண்களை நோக்கித்தான் பார்க்கும். அவற்றின் இயல்புநிலையை விட சின்னதாக இருந்தால் அவை பயந்தோ, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அர்த்தம். நீங்கள் அவற்றுடன் பேச வேண்டும் என்றால் அவற்றின் கண்களையும் உடல் அசைவுகளைப் பார்த்து பேச ஆரம்பிக்கவேண்டும். மனிதர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முகஅசைவுகளை நன்கு கவனிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் சத்தத்தால் விடையளிக்கிறது. எடுத்துக்காட்டாக நீ சாப்பிட்டியா என்று கேளுங்களேன். அதற்கு சிணுங்குவதாக இருந்தால் சாப்பிடவில்லை என்ற அர்த்தம். குரைத்தால் சாப்பிட்டுவிட்டது என்று அர்த்தம். உன்னை யாரவது அடித்தார்களா எனக் கேட்டால் அதிகமான சத்தத்தில் குரைத்து காட்டலாம். அதற்கு அர்த்தம் அடித்து இருக்கிறீர்கள் என்பதுதான். ஆனால், இந்தளவுக்கு உரையாடல் இயல்பாக வேண்டுமென்றால் அவற்றோடு தினமும் உரையாடவேண்டும். அப்போதுதான் உங்கள் வார்த்தைகளையும், பாவனைகளையும் அது புரிந்துகொள்ளும்.

அவற்றின் உளவியல் பிரச்னைகளை  தெரிந்துகொள்ள கால்நடை மருத்துவர் ஆர். ராஜாவிடம் பேசினோம். “பண்டைய காலத்தில் இருந்தே நாய்கள் நம்முடைய பாதுகாப்பில்தான் இருக்கிறது. குறிப்பாக அதன் உணவு, இருப்பிடம் அனைத்தும் மனிதர்களைச் சார்ந்தே இருக்கிறது. அதனால் நம் கட்டுப்பாட்டை விட்டு விலகுவதில்லை. இதுவும் உளவியல் ரீதியாக ஒரு காரணம். இதனால்தான் புதிதாக ஒரு நாயை வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஏற்கெனவே இருக்கும் நாய் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. தன் இடம் பறிபோகிறது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் காப்பாளர்களை வெறுக்க ஆரம்பிக்கிறது. நாய் வாங்கும்போது இருக்கும் கவனம், பராமரிப்பிலும் இருக்கவேண்டும் என்கிறார்.

செல்லப்பிராணிதானே என அசட்டையாக இல்லாமல், அவற்றை ஒரு மனிதனாகவே நினைத்து தினமும் உரையாடி, அவற்றின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால், நல்லதொரு உறவு பிறக்கும்.

%d bloggers like this: