ஆடிப்போன எஸ்பி-க்கள்; சசிகலாவுக்குக் கண்டம்; அடுத்த தலைமைச் செயலாளர்!?’ – யார்கிட்டயும் சொல்லாதீங்க

தமிழக நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு டிஜிபி-யாக அசுதோஷ் சுக்லா பதவியேற்றதும், வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தமிழகம் முழுக்க உள்ள எஸ்பி, டிஐஜி, ஐஜி உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று பேசினார். ”உங்களில் சில எஸ்பி-கள் பணத்தை போலீஸ் வாகனத்துல கடத்துனதெல்லாம் எனக்குத் தெரியும். இதுவரை எப்படியோ… இதோ, நான் வந்துட்டேன். இனிமேலும் அப்படி நடந்தா, கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என்றாராம்.

ஆடிப்போய்விட்டனர் அந்த சில எஸ்பி-கள். அதேபோல, கடந்த தேர்தலின்போது உளவுத் துறை ஐஜி-யாக இருந்த சத்தியமூர்த்தியை மாற்றினார்கள். அதேபோல, இந்தத் தேர்தலின்போதும் சத்தியமூர்த்தியை மாற்றச் சொல்லி சுக்லா, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினாராம். ஆனால், அவரை தேர்தல் கமிஷன் மாற்றவில்லையாம். அ.தி.மு.க அனுதாபிகளான அதிகாரிகள், சுக்லா மீது கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். 

* சுக்லா பற்றி இன்னொரு நியூஸ்… தஞ்சாவூர் மாவட்டம் சாஸ்தா பல்கலைகலைக்கழக தரப்பினர் இட ஆக்கிரமிப்பு செய்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்துவருகிறது. சாஸ்தாவுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜாவின் ஆசி உண்டு என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தநிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம், தமிழக சிறைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடம். அதன் தலைவராக இருந்தவர் அசுதோஷ் சுக்லா. அங்கிருந்துதான் தேர்தல் பாதுகாப்புப் பிரிவு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் இடத்தை மீட்டுவிட சபதமே செய்திருந்தாராம் சுக்லா. தேர்தல் முடிந்ததும் பழைய இடத்துக்கே அவர் பணிபுரியப் போவார்; அப்போது, சாஸ்தா விவகாரத்தைக் கையில் எடுப்பார். எனவே, அவரை மீண்டும் சிறைத் துறைக்குப் போகாமல் வேறு டம்மி பதவிக்கு நியமிக்க இப்போதே ஆலோசனை நடக்கிறது.  

 

* சசிகலாவுக்கு அடுத்த கண்டம் காத்திருக்கிறது. ஜெ.ஜெ டி.வி நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்களை வாங்கியதில், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டங்களை மீறியுள்ளதாக, அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. வருகிற 13-ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சசிகலாவுக்கு சம்மன் போயிருக்கிறது. பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவை முறைப்படி சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வரப்போகிறார்கள். அதன்பிறகு, வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடக்கப்போகிறது. 

* பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் இளவரசி, மகன்வழிப் பாட்டி ஆகிவிட்டார். அவரின் மகன் விவேக்கிற்கு பெண் குழந்தை பிறந்தது தெரிந்த விஷயம். ஏப்ரல் 23-ம் தேதியன்று, அந்தக் குழந்தைக்கு ஆராதியா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கணவனும் மனைவியும் நீண்ட நேரம் ஆலோசித்து, குழந்தையின் நட்சத்திரம் பார்த்து இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார்களாம். 

 

* வருமான வரித் துறையின் அதிகாரிகள் வட்டாரத்தில் காமெடியாகப் பேசப்படும் விஷயம், “வேலூரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு, கல்லூரிகளில் ரெய்டு போனார்கள். கல்லூரி வளாகத்தில்தான் 11 கோடி ரூபாய் பதுக்கிவைக்கபட்டுள்ளதாக ரகசியத் தகவல் வந்ததாம். அங்கே போனபோது, உள்ளே விடாமல் தகராறு செய்தார்களாம். ரெய்டு நடத்த உத்தரவிடும் ஆர்டரின் ஜெராக்ஸை எடுத்துச் சென்றார்களாம் ஐ.டி அதிகாரிகள். அதை வைத்து உள்ளே அனுமதிக்க முடியாது. ஒரிஜினலுடன் வந்தால்தான் விடுவோம்” என்று பிரச்னை செய்தார்களாம். அதையடுத்து, சென்னையில் இருந்து ஒரிஜினல் ஆர்டரை வரவழைத்தார்களாம். இந்த இடைப்பட்ட நேரத்தில், கல்லூரியில் இருந்த பணம் வேறு வழியில் அப்புறப்படுத்தப்பட்டதாம். இந்தத் தகவல் ஐ.டி மேலிடத்துக்குத் தெரிந்ததும், `கோட்டை விட்டுவிட்டீர்களே…!’ என்று டோஸ் விட்டார்களாம்.

 

இருந்தாலும் மனம்தளராத அதிகாரிகளில் சிலர், அங்கே இருந்த முக்கியப் பிரமுர்களின் டெலிபோனை கண்காணித்து வந்தார்களாம். அதில் ஒரு போன், முக்கியப் பிரமுகருக்கு வந்ததாம். அதன்பிறகு, அந்தப் பிரமுகரின் முகம் பிரகாசமானதாம். அதுவரை சோகமாக இருந்தவர், துள்ளிக்குதித்து எழுந்தாராம். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த போன் எண்ணுக்கு வலை விரித்தார்களாம். அதை வைத்திருந்தவர் இருந்த இடம்தான் குடோன். 11 கோடி ரூபாய் பணத்துடன் அங்கேயே உட்கார்ந்திருந்தாராம் அந்த நபர். ‘லபக்’கென்று அள்ளினார்களாம் ஐ.டி அதிகாரிகள்.

 

* இதேமாதிரி தேனியில் ஒரு சம்பவம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுலவலகத்தில் பணம் பதுக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்து ஐ.டி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அங்கே, போலீஸுன் கவனத்தை திசைதிருப்பி, உள்ளே இருந்த பெரும்பாலான பணத்தை அப்புறப்படுத்திவிட்டனர் கட்சித் தொண்டர்கள். ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்குத்தான் கைப்பற்ற முடிந்ததாம்.

*“நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அவருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது. இந்த விவகாரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தீவிரம் காட்டவில்லை என்று கவர்னர் மாளிகைக்கு ஏக கோபம். அவரை உடனே மாற்றச் சொல்லி, பிரஷர் வந்தது. ‘நாடாளுமன்றத் தேர்தல் வரை சென்னை மாநகர சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க அவர் தேவை. அதன்பிறகு வேண்டுமானால் மாற்றுகிறோம்’ என்று எடப்பாடி சொன்னாராம்.

தற்போது தேர்தலும் முடிந்துவிட்டது. மே 23-ம் தேதி ரிசல்ட்டுக்குப் பிறகு, விஸ்வநாதன் மாற்றப்பட இருக்கிறார். விஸ்வநாதன் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அவர் 10 நாள்கள் விடுமுறையில் இருக்கிறார். அமெரிக்காவில் படிக்கும் மகனைப் பார்க்கப் போயிருக்கிறார். மே மூன்றாம் தேதியன்று திரும்புகிறார். எனவே, விஸ்வநாதன் இடத்தைக் கூடுதல் கமிஷனர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வால் கவனிக்கிறார். மகேஷ்குமாரும் கூடுதல் டிஜிபி பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார். அந்த வகையில், இவரும் மாறப்போகிறார். ஆக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி, கூடுதல் கமிஷனர் (தெற்கு), இரண்டு பவர்ஃபுல் பதவிகளுக்கு ரேஸ்  தொடங்கிவிட்டது.

* தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், இருவரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிகிறது. அந்த இரு பதவிகளுக்கும் யார் யார் வரப்போகிறார்கள் என்பது பற்றித்தான் கோட்டை வட்டாரத்தில் அதிகாரிகள் மத்தியில் பேச்சு. தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் ராஜகோபாலுக்கு, அடுத்த தலைமைச் செயலாளர் ஆக வாய்ப்புகள் உண்டு. ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கைகள் பிடிக்காத ஐஏஎஸ்கள், தனித்தனியாக முதல்வரை சந்தித்து, வேண்டாம் என்று சொல்லிவருகிறார்கள்.

அவருக்கு அடுத்தபடியாக, தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம், ஹன்ஸ் ராஜ் வர்மா, இருவரின் பெயர்கள் அடிபடுகின்றன. தமிழக போலீஸின் சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிக்கு திரிபாதி அல்லது அசுதோஷ் சுக்லா பெயர் அடிபடுகிறது. அதேநேரம், டெல்லியில் மீண்டும் பி.ஜே.பி அமர்ந்தால், பெண் டிஜிபி-யான ஸ்ரீலட்சுமி பிரசாத்துக்கு சான்ஸ் அடிக்கலாம்.  

தமிழக டிஜிபி-களில் ஒருவர் ஜாபர்சேட். தற்போதைய சட்டம்-ஒழுங்குப் பிரிவு டிஜிபி டி.கே. ராஜேந்திரனின் அறையில் அடிக்கடி தென்படுகிறார். இவர்தான் அடுத்த சட்டம்-ஒழுங்குபிரிவு டிஜிபி என்று டிஜிபி ஆபீஸின் ஒரு தரப்பினர் பேசிக்கொள்கிறார்கள். இங்கே ஜாபர்சேட் அமருவதற்கு முதல்வர் எடப்பாடி ஒரு செக் வைத்திருக்கிறாராம். நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வை ஜெயிக்கவைக்க சரியான யோசனை கேட்டிருக்கிறாராம். அதற்கு வசதியாக, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தற்போதைய உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி விடுமுறையில் போய்விட்டார். 

* சென்னையில் மோட்டார் சாமி என்றால் அவ்வளவு பிரபலம். சாதாரண கான்ஸ்டபிள்தான். காரில் வருவார், போவார்.  சென்னையில் உள்ள ஒருசில போலீஸ் குவார்ட்டர்ஸில் இவர் விரல் அசைத்தால்தான் தண்ணீர் வரும். ஏதாவது ரிப்பேர் என்றால், இவர் ஆளை அழைத்துவந்து சரிசெய்வார். பயங்கர ஜொல்லு ஆசாமியாம். குவார்ட்டஸில் உள்ள பெண்களிடம் அவ்வப்போது நூல் விடுகிறாராம். ‘ஏதாவது வீட்டு வேலை இருந்தால் சொல்லுங்கள். வருகிறேன்’ என்கிறாராம். பெண்கள் சிலர் தங்களது செருப்பை எடுத்துக்காட்டுவதும், அங்கிருந்து எஸ்கேப் ஆவதுமாக இருக்கிறாராம். இவரின் சில்மிஷப் பேச்சு பற்றி உளவுத் துறை உயர் அதிகாரிக்குப் புகார் போனதாம். ஆக்ஷன் இல்லையாம். 

%d bloggers like this: