ஆட்சியைக் கலைப்பது சசிகலா நோக்கம் கிடையாது!’ – ஸ்டாலின், எடப்பாடி, தினகரன் முக்கோண மோதலின் பின்னணி

கொறடா என்ன உத்தரவு போட்டாலும் அதன்படியே செயல்படுவோம். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு வரும் 7-ம் தேதி விளக்கம் கொடுக்க இருக்கிறேன். இந்த நோட்டீஸின் பின்னணியில் முதல்வரின் அச்சம் இருக்கிறது.

அ.தி.மு.க-வின் 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அரசியல் களத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் சபாநாயகர் தனபால். `தி.மு.க-வையும் தினகரனையும் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விமர்சிக்கிறார் தினகரன். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சபைக்கே வரப்போவதில்லை’ என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக கடந்த மாதம் 19-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் தினகரன். இதன் பிறகு, தனிக்கட்சியாகவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இரட்டை இலை ப்ளஸ் பொதுச் செயலாளர் பதவிக்கான அங்கீகாரம் தொடர்பான வழக்குகளை சசிகலா நடத்துவார் என அ.ம.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விவகாரங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களான விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோர் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகச் சபாநாயகரிடம் புகார் அளித்தார் அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன். இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அவர் சமர்பித்திருந்தார். `3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்தால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்’ எனத் தெரிவித்திருந்தார் ஸ்டாலின். 

 

தி.மு.க-வின் எதிர்ப்பைப் புறம்தள்ளிவிட்டு 3 எம்.எல்.ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சபாநாயகர் தனபால். இதற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபைச் செயலரிடம் கொடுத்திருக்கிறது தி.மு.க. இதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, `அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு  நோட்டீஸ் கொடுத்தால் தி.மு.க-வினர் ஏன் கொந்தளிக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் கோபமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது. இதன்மூலம் தி.மு.க-வுக்கும் டி.டி.வி.தினகரன் கட்சிக்கும் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது’ என்றார். அதேசயமம் தினகரனோ, `3 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார் ஸ்டாலின்’ என விமர்சித்தார். 

அப்படியானால், இந்த முக்கோண மோதல் எதற்காக? 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். “சபாநாயகர் மீது தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு. எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, தீர்மானத்தைக் கொண்டு வருவதால், அது சபைக்கு வருவதற்கான வாய்ப்பில்லை. தி.மு.க ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது எனத் தெரியவில்லை. நேற்றுதான் என்னுடைய கைக்கு நோட்டீஸ் வந்து சேர்ந்தது. 185 பக்கங்களுக்கு நோட்டீஸ் உள்ளது. அதில், 180 பக்கங்களுக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள், சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றைத் தொகுத்துள்ளனர். மீதமுள்ள 5 பக்கங்களில் நானும் டி.டி.வி.தினகரனும் இருப்பது போன்ற படங்கள் உள்ளன. `தினகரனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள்’ எனக் கூறி விளக்கம் கேட்டுள்ளனர்” என விவரித்தவர், 

“ உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தற்காலிக ஏற்பாடாக அ.ம.மு.க-வைத் தொடங்கியபோது, அண்ணா தி.மு.க-வின் ஓர் அணியாகச் செயல்பட்டு வந்தோம். கடந்த 23-ம் தேதி அ.ம.மு.க-வைத் தனிக்கட்சியாகப் பதிவு செய்வதற்கான மனுவை ஆணையத்தில் கொடுத்துள்ளனர். டி.டி.வி அண்ணன் பதிவு செய்த கட்சியில் நாங்கள் இல்லை. கட்சியாகப் பதிவு செய்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சின்னம்மாவுடன்(சசிகலா) பயணம் செய்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள சீராய்வு மனுவில், எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். இருப்பினும், கொறடா என்ன உத்தரவு போட்டாலும் அதன்படியே செயல்படுவோம். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு வரும் 7-ம் தேதி விளக்கம் கொடுக்க இருக்கிறேன். இந்த நோட்டீஸின் பின்னணியில் முதல்வரின் அச்சம் இருக்கிறது. 

`சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து, வாக்கெடுப்பு நடக்க வேண்டிய சூழல் வந்தால் நாங்கள் 3 பேரும் எதிர்த்து வாக்களித்துவிடுமோ?’ என எடப்பாடி பயப்படுகிறார். இந்த ஆட்சி அம்மாவால் உருவாக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு மிகவும் இந்த ஆட்சியைக் கஷ்டப்பட்டு ஏற்படுத்திக் கொடுத்தார் சசிகலா. இந்த ஆட்சியைக் கலைப்பது சசிகலாவின் நோக்கம் கிடையாது. அந்தவகையில் பார்த்தால் எடப்பாடிக்கு சாதகமாகத்தான் நாங்கள் வாக்களிப்போம். இதைப் பற்றி அவர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நஷ்டத்தைக் கொடுக்கும்” என்றார் உறுதியாக. 

`சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சபைக்கு வருமா?’ என தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்ரமணியனிடம் கேட்டோம். “நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அவரால் யாரையும் நீக்க முடியாது என்பதற்கு நீதிமன்றத் தீர்ப்புகள் உதாரணமாக இருக்கின்றன. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாகவே, இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது. 3 எம்.எல்.ஏ-க்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவதாகத் தகவல் வந்ததும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக அறிக்கை வெளியிட்டார் தி.மு.க தலைவர். இதன் பிறகு நோட்டீஸ் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியதும், ஓட்டப்பிடாரத்திலிருந்து உடனடியாகத் தீர்மானத்தைத் தயார் செய்து சட்டசபைச் செயலரிடம் கொடுத்தோம். இந்த விவகாரத்தில் நாங்கள் மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறோம். இதற்கு உள்நோக்கத்தைக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார் நிதானமாக.

%d bloggers like this: