மருந்தாகும் உணவு – மாங்காய் இஞ்சி தொக்கு

மாங்காயின் மணமும், இஞ்சியின் குணமும்கொண்டது மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த ‘மாங்காய் இஞ்சி.’ இஞ்சியின் முக்கியமான மருத்துவ குணங்களான செரிமானக் கோளாறுகளை நீக்குவது, குடலைச் சுத்தப்படுத்துவது, வயிற்று உப்புசத்தைத் தடுப்பது என அனைத்தும் மாங்காய் இஞ்சிக்கும் உண்டு.

 

பலன்கள்: குடல் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், மாங்காய் சேர்த்த உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுவார்கள். அவர்கள் மாங்காய் இஞ்சியில் செய்யப்படும் உணவுகளைத் தயக்கமில்லாமல் சாப்பிடலாம். அசிடிட்டி பிரச்னை காரணமாக எலுமிச்சை ஊறுகாயைத் தவிர்ப்பவர்கள், எலுமிச்சை ஊறுகாயுடன் தோல் சீவிய மாங்காய் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், பயமின்றி சாப்பிடலாம். ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கல், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகளைக்கொண்டது மாங்காய் இஞ்சி. அதனால், இது உடலின் நச்சுத் தன்மைகளை நீக்கும்; ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; வயிற்றிலுள்ள கிருமிகளை அகற்றும்; ஒவ்வாமைப் பிரச்னைகளைப் போக்கும்; பசியின்மைப் பிரச்னையைத் தீர்க்கும்; செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு, எலுமிச்சைச் சாற்றுடன், மாங்காய் இஞ்சியைச் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம். மேலும் இது, டிரைகிளைசரைடு போன்ற கெட்ட கொழுப்புச்சத்தை உடலிலிருந்து நீக்கும். மாங்காய் இஞ்சியைச் சாறாக்கி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும்.

 

குறிப்பு: மாங்காய் இஞ்சித் தொக்கை, ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுவரை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். அதிகபட்சம், பதினைந்து நாள்கள்வரை வைத்திருந்து இதைப் பயன்படுத்தலாம்.

தேவையானவை:

மாங்காய் இஞ்சி :    250 கிராம்

மிளகாய்த்தூள் :    இரண்டு டீஸ்பூன்

கடுகு :    ஒரு டீஸ்பூன்

வெந்தயம் :   இரண்டு டீஸ்பூன்

மஞ்சள்தூள் : ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் :  அரை டீஸ்பூன் உப்பு, கறிவேப்பிலை,

நல்லெண்ணெய் :  தேவையான அளவு

புளிக்கரைசல் : தேவையான அளவு

 

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டு, எண்ணெய் சூடானதும் துருவிய மாங்காய் இஞ்சியைப் போட்டு வதக்க வேண்டும். பிறகு, வேறொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகைப் போட்டு வறுக்க வேண்டும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் தயாராக இருக்கும் பெருங்காயம் – வெந்தயம் – கடுகுத்தூளைச் சேர்த்து வதக்க வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், ஏற்கெனவே வதக்கிவைத்திருக்கும் மாங்காய் இஞ்சியுடன் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் கழித்து, புளிக்கரைசலைச் சேர்க்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும், உப்பு சேர்க்க வேண்டும். நீர் வற்றியதும், அடுப்பிலிருந்து இறக்கினால், அருமையான மாங்காய் இஞ்சித் தொக்கு ரெடி!

குறிப்பு: இந்த ரெசிப்பி செய்யும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்துக்கொள்வது நல்லது.

%d bloggers like this: