கற்கள் வந்தால் கவனிக்க…!

சிறுநீரகக் கல் என்பது, பெரும்பாலும் ஆண்களுக்கே வரும் பொதுவான பிரச்னையாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில், ஆண்களைக் காட்டிலும், பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
சிறுநீரகங்களில், கல் உருவாவதற்கு, மரபியல் காரணிகள் தவிர, அதிக வெப்பம், வறட்சியான சுற்றுச் சூழலில் வசிப்பது, மிகக் குறைவாக தண்ணீர் குடிப்பது, பால், முட்டை, இறைச்சி போன்ற, விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதம் அதிக அளவு சாப்பிடுவது, உப்பு சத்து நிறைந்த உணவு போன்றவை, கல் உருவாவதற்கு முக்கிய காரணிகள் என்று, உறுதியான முடிவுகளை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. சமீபத்தில் வெளியான மருத்துவ ஆய்வு, உடல் பருமனாக இருந்தால், சிறுநீரக கல்லை உருவாக்கும் என்று கூறுகிறது.

சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை என்று எங்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம். சிறுநீரகங்களின் உள்ளே கற்கள் உருவானால், பொதுவாக அறிகுறிகள் ஏதும் தெரியாது; வழக்கமான மருத்துவப் பரிசோதனையில், ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ எடுத்துப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், சிறுநீரக குழாய், சிறுநீரகத்துடன் இணையும் இடம் அல்லது குழாயில் கல் இருந்தால், எதிர்பாராத நேரத்தில், அதீத வலி ஏற்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வருவது போன்றவையும் ஏற்படலாம்.
அதீத வலி வந்தால், வலி நிவாரணி கொடுத்து, வலி குறைந்ததும், கல்லின் தன்மை, அளவு, இருக்கும் இடம் போன்றவற்றைப் பரிசோதனையில் உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில், கல்லின் அளவு சிறியதாகவே இருக்கும். இதை மருந்து அல்லது அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம், வெளியேற்றி விடலாம். கல்லின் அளவு பெரிதாக இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
சிறுநீரகக் கல்லால் தொற்று ஏற்பட்டு, அதனால், காய்ச்சல் போன்ற வேறு பிரச்னைகள் வந்தாலும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, கல்லை அகற்ற வேண்டியிருக்கும்.
டாக்டர் கே.முருகானந்தம்,
சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை.
மொபைல்: 73582 45777

%d bloggers like this: