சரியாகத் தான் சாப்பிடுகிறோமா நாம்?

சமைக்காத உணவு, செரிமானம் ஆகாது’ என்ற தவறான எண்ணம் உள்ளது. சிரமம் இல்லாமல், செரிமான மண்டலம் வேலை செய்ய, சமைக்காத காய்கறி, பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக, எல்லா உணவுகளையும் சமைக்காமலே சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம், வாரத்திற்கு ஒரு நாள், மூன்று வேளையும், சமைக்காத உணவு சாப்பிட்டால், ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
தினமும் வேலை செய்யும் உடம்பிற்கு, ஒரு நாள் ஓய்வு தேவைப்படுவதைப் போல, செரிமான மண்டலத்திற்கும் தேவை. இயற்கையான உணவை, சமைக்காமல் சாப்பிடும் போது, செரிமானம் ஆவது எளிது; உடலில் உள்ள கழிவுகள், சுலபமாக வெளியேறும்.
சமைக்காத உணவு


ஊறவைத்த அரிசி அவலுடன், தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து, கூடுதல் சத்து தேவை என்றால், ஊறவைத்த பேரீச்சை, தோல் நீக்கிய பாதாம், முந்திரி சேர்ந்த கலவை, முளை கட்டிய சிறு தானியங்கள் சாப்பிடலாம்.
இரவு முழுவதும் வேர்க்கடலையை ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, காலையில் சாப்பிடலாம். இதில், புரதம் உட்பட தேவையான அனைத்து சத்துக்களுடன், நல்ல கொழுப்பும் உள்ளது.
பருப்புகளை முளைக்கட்டும் போது, அதில் உள்ள புரதம், அமினோ அமிலம் எனப்படும், எளிமையான புரதமாக மாறுகிறது. இது, எளிதில் செரிமானம் ஆவதோடு, சத்துக்கள், முழுமையாக உடலில் சேரும்.
துருவிய கேரட், பீட்ரூட்டுடன் ஊற வைத்த பேரீச்சை சேர்த்து சாப்பிட்டால், இரும்பு சத்து அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், தோல் சீவி, துண்டுகளாக்கி, மிக்சியில் அடித்து, சாறை வடிகட்டி, அப்படியே குடிக்கலாம். லைக்கோபின், பீட்டா கரோடின் இரண்டும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கும்.
சமைத்த கேரட், பீட்ரூட்டை, நீரிழிவு கோளாறு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது; சமைக்காத கேரட், பீட்ரூட், முளைக் கட்டிய தானியம், பயறு, பழங்கள், காய்கறிகள் எல்லாம் சேர்த்து சாப்பிடலாம்.
சமைத்த உணவு
உணவை அதிகமாக வேக வைப்பது, வறுப்பது, பொரிப்பதால், அவற்றில் உள்ள சத்துக்கள் குறைகின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சத்துக்கள், பிராண வாயு இரண்டும், ரத்தத்தின் வாயிலாக செல்லும்.
உணவில் உள்ள சத்துக்கள், தனித் தனியே பிரிக்கபட்டு, எந்ததெந்த உறுப்புகளுக்கு, என்னென்ன சத்துக்கள் தேவையோ, அவை கிரகிக்கப்பட்டு, மீதி இருப்பவை கழிவுகளாக வெளியேறி விட வேண்டும். அப்படி இல்லாமல், கழிவுகள் உடம்பிலேயே தங்கும் போது, கார்பன் அதிகமாகி, ‘கேன்சர்’ உருவாகிறது.
செல்களுக்கு சத்துகளை எடுத்து செல்லும், ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவை சாப்பிடும் போது, ஆக்சிஜன் குறைவால், செல்களில் ஏற்படும் அழுத்தம் குறையும். சமைக்காத இயற்கை உணவுகளில், ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது.
வழக்கத்தில் வருவதே, உணவுப் பழக்கம். எதற்காக சாப்பிடுகிறோம், சாப்பிடும் உணவு நம் உடலில் என்ன மாற்றத்தை அடைகிறது, என்பதை அறிவியல் ரீதியில் புரிந்து கொண்டால், இயற்கை உணவை, மன திருப்தியுடன் சாப்பிடலாம்; ஆரோக்கியமான மாற்றத்தையும் உணரலாம்.
டாக்டர் யோ.தீபா, இயற்கை மருத்துவர்,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி, அரும்பாக்கம்.

%d bloggers like this: