Advertisements

தங்கம் மட்டுமல்ல… இந்த எளிய பொருள்களையும் வாங்க உகந்த நாள் அட்சய திரிதியை!

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஹோமம், ஜபம், தானம் முதலியவை செய்தால் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

தங்கம் மட்டுமல்ல... இந்த எளிய பொருள்களையும் வாங்க உகந்த நாள் அட்சய திரிதியை!

சித்திரை மாதம் அமாவாசை நெருங்கிவிட்டாலே, தொலைக்காட்சிகளில் அட்சய திரிதியையன்று தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பது போன்ற விளம்பரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். நாளை (7.5.2019) அட்சய திரிதியை வருகிறது. அன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கி, பல மடங்கு பெருகும் என்ற மனோபாவம் மக்களிடம் நீடித்து வருகிறது. இது சரியல்ல. ‘அட்சய’ என்றால், ‘குறைவில்லாத, அழிவின்றி வளர்வது’ என்று பொருள். அன்று செய்யப்படும் அனைத்து தான தர்மங்களும் நல்ல காரியங்களும் குறைவில்லாமல் பெருகும் என்பது ஐதிகம்.

குபேரன்

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஹோமம், ஜபம், தானம் முதலியவை செய்தால் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. செல்வத்தின் அடையாளமான தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் நம்முடைய செல்வமும் பல மடங்காகப் பெருகி வளம் செழிக்கும் எனும் நம்பிக்கையும் நம்மிடையே இருந்து வருகிறது.

அன்றைய தினத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த கண்ணன் தொடர்புடைய இரண்டு கதைகள் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

கண்ணனின் நண்பர் குசேலர், தன் வறுமை தீர வேண்டி கண்ணனைக் காணச் சென்றார். தன்னிடமிருந்த ஒரு பிடி அவலை மட்டும் தன் நண்பனுக்காகத் தனது கிழிந்த துணியில் கட்டிக்கொண்டு சங்கடத்துடனே அவரிடம் கொடுத்தார். அந்த அவலை மகிழ்ச்சியுடன் வாங்கிய கண்ணன் ‘அட்சய’ என்று சொல்லியபடியே தின்றார். கண்ணனின் ‘அட்சய’ எனும் சொல் மூலம் குசேலருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் மதியம் துர்வாசர் தம் சீடர்களுடன் பாண்டவர்களின் குடிலுக்குச் சென்றார். அப்போதுதான் பாண்டவர்களுக்கு உணவளித்துவிட்டு, பிறகு தானும் உண்டு முடித்த திரௌபதி, சூரியபகவானால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கழுவி கவிழ்த்து வைத்தாள். அட்சய பாத்திரம் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் தரும். ஆனால், ஒருநாளைக்கு ஒருமுறைதான் உணவு தரும். திரௌபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. துர்வாசரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கண்ண பரமாத்மாவை எண்ணித் தியானித்தாள். ஆபத்பாந்தவனான கண்ணனின் அருளால், பாண்டவர்களும் திரௌபதியும் அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் அரங்கேறியது அட்சய திரிதியை தினத்தில்தான். அன்றைய நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம். இது மட்டுமல்லாமல் தானம் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கும் உகந்த தினம் அட்சய திரிதியை. அட்சய திரிதியைக் குறித்தும் அன்று என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும்  விளக்குகிறார் திருநள்ளாறு கோயில் கோடீஸ்வர சிவாசாரியார்…

திருமால்

“அட்சய திரிதியை என்பது வளர்ச்சிக்கு உரிய நாளாகும். புதிதாகத் தொழில் மற்றும் காரியத்தைத் தொடங்குவதற்கு உகந்த நாள். அன்று எந்த காரியத்தைத் தொடங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதிகம். இன்று செய்யப்படும் அனைத்துவிதமான வழிபாடுகள், பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் அனைத்துக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள். அதனால், வறியவர்கள் மற்றும் எளியவர்களுக்கு அன்னம், வஸ்திரம் போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். பெரிய அளவுக்குத் தானம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எளிமையாகக்கூட செய்யலாம். குறிப்பாக, கோடைக்காலம் தொடங்கியிருப்பதால் விசிறி தானம் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து பகல் வேளையில் நீர், மோர் மற்றும் இரவு நேரத்தில் பானகம் தானம் செய்யலாம். மற்ற நாள்களில் செய்யப்படும் தானத்தைவிடவும் அட்சய திரிதியையன்று செய்யப்படும் தானம் அதிக பலனைத் தரக்கூடியது. இன்று செய்யப்படும் புண்ணியமானது வருடம் முழுவதும் வளர்ந்துவரும் என்பது ஐதிகம். அதனால், இன்றைய தினத்தில் தான தர்மங்கள் செய்வது சிறந்த பலனளிக்கும். தானம் செய்ய முடியாதவர்கள் கோயில் வழிபாடு மேற்கொள்ளலாம். வளர்ச்சிக்கு உரிய நாளாக இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று தங்கம், வெள்ளி மட்டும் வாங்குவதற்கு உகந்த நாளாக அட்சய திரிதியை மாறிவிட்டது. உண்மையில் இந்த நாள், கடவுள் வழிபாட்டுக்கும் தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள்” என்கிறார்.

மகாலட்சுமி

அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் புராண நிகழ்வுகள்…

* பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது.

* வேதவியாசர் மகாபாரதத்தைச் சொல்ல விநாயகர் எழுதத் தொடங்கியது.

* அன்னபூரணித் தாயாரிடமிருந்து சிவபெருமான் அன்னம் பெற்று தம் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டது.

* குபேரன், இழந்த செல்வங்களைத் திருமகளிடம் வேண்டிப் பெற்றதும் இந்நாளே.

* தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம் பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய நாள்.

* மகாலட்சுமி, திருமாலின் மார்பில் நீங்காமல் வசிக்கும் வரத்தைப் பெற்ற நாளும் இதுதான்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உள்ள மகாலட்சுமியைத் தரிசிப்பது நன்மை பயக்கும். கிடைத்தற்கரிய புண்ணிய நாளான அட்சய திரிதியை நாளில் அறம் சார்ந்த செயல்களைச் செய்து புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்வோம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: