பயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்!

ம்மில் பலர் சொந்தமாக வீடு வாங்க… சொந்தமாக கார் வாங்க எனப் பல காரணங்களுக்காகச் சேமிக்கிறோம். ஆனால், பயணத்துக்காகச் சேமிப்பதற்கு மட்டும் யோசிக்கிறோம். அதனால்தான் எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்கிறவர்களில் பெரும்பாலோர் பயணச் செலவுகளுக்குப் பணம் சேர்ப்பதை இலக்காகக் கொள்வதில்லை. பயணம் என்பது எப்போதும் ஒருவரை ஆசுவாசப் படுத்தும்; வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு

அலுப்பில்லாமல் அழைத்துச் செல்லும். அதனால், மற்ற தேவைகளுக்காகச் சேமிப்பதைப்போல, பயணிப்பதற்காகவும் சேமிப்பது அவசியம். சரியாகத் திட்டமிட்டாலே போதும், மற்ற தேவைகளுக்கான சேமிப்பைப்போல, பயணத்துக்கான சேமிப்பையும் தொடங்க முடியும்.

 

பட்ஜெட் போடுங்கள்

நீங்கள் போக விரும்பும் இடம் உள்நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி… அங்கு போவதற்கான விமான டிக்கெட் கட்டணம், அங்கு தங்கும் இடத்துக்கு ஆகும் செலவு, ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஆகும் செலவு, உணவுக்கான செலவு, ஷாப்பிங் என அனைத்து செலவுகளையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதற்காக பட்ஜெட் ஒன்றைத் தயார்செய்யுங்கள். அந்தத் தொகைக்கான சேமிப்பை இப்போதிலிருந்தே ஆரம்பியுங்கள்.

குறைந்தபட்சம் பயணக் காலத்துக்கு ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்கு முன்பாக சேமிப்பை ஆரம்பித்துவிட வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து தொடங்கலாம் எனத் தள்ளிப் போட  நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால், உங்களின் பயணமும் தள்ளிப் போய்க்கொண்டே தான் இருக்கும்.

பயணத்துக்காகவும் பணத்தை ஒதுக்குங்கள்

மாதச் சம்பளம் வாங்குபவர்கள், வீட்டுச் செலவுக்கு, மருத்துவச் செலவுக்கு, போக்குவரத்துச் செலவுக்கு என ஒவ்வொரு மாதமும் பணத்தை ஒதுக்குவார்கள். அந்தப் பட்டியலில் இனி பயணத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கையாளும்போது, பயணக் காலத்துக்குத் தேவையான தொகையை எளிதாகச் சேமித்துவிடலாம். எந்தத் தேவைக்காகப் பணத்தைச் சேமிக்கிறோமோ, அந்தத் தேவைக்காக மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். 

வாங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்

`ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும்’ என்பார்கள். பயணிப்பதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்பது பயணக் காதலர்களுக்கான தாரகமந்திரம். இன்று இம்பல்ஸ் பையிங் அதிகரித்துவிட்டது. அதாவது பார்ப்பதையெல்லாம் வாங்கக்கூடிய மனநிலை. ஒரு பொருளை வாங்கும்போது, அதன் தேவை இப்போது நமக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை ஒன்றுக்கு நான்குமுறை யோசித்தப் பிறகு வாங்குவது நல்லது.

அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக நீங்கள் இருந்தால், அதைக் குறைத்துக்கொள்வது முக்கியம். அதிலிருந்து மிச்சமாகும் பணத்தை, பயணத்துக்கான சேமிப்புக்கு ஒதுக்கலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேமித்தாலே, மிகப்பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.

ஆக, மேலே சொல்லப்பட்டிருக்கும் எளிமையான வழிமுறைகளால் பணத்தைச் சேமித்து, வருடத்துக்கு ஒருமுறையாவது சுற்றுலாவுக்குச் சென்று திரும்புவதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை மிக அழகாக மாறும்.


 

எதில் சேமிப்பது?

“இன்றைய மக்களில் சுற்றுலா சென்றுவரத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், அதற்காகச் சேமிக்கிறார் களா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஒருசிலர் நிதி ஆலோசனை கேட்டு வரும்போது, மற்ற தேவைகளைப்போல பயணத்துக்கும் திட்டம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். அதற்கான சேமிப்பைத் தொடங்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே பயணத்துக்காகவும் சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும். பயணத்துக்கான சேமிப்பு என்பது குறுகிய காலத்துக்கானது என்பதால், அந்தச் சேமிப்பிலிருந்து அதிக வருமானத்தையும் எதிர்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் என்கிறபோது ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிசீலிக்கலாம் அல்லது வங்கியில் இருக்கும் ஆர்.டி சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”  

%d bloggers like this: