Advertisements

எடப்பாடி அஸ்திரம்!

ஐந்தாம் கட்டத் தேர்தல்கள் குறித்த கள ஆய்வுகளை முடித்துவிட்டு இப்போதுதான் வந்திறங்கினேன். சீக்கிரமே அலுவலகத்தில் எதிர்பார்க்க லாம்’ என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி. அடுத்த சில மணி நேரங்களில் நம்முன் வந்து அமர்ந்த வருக்கு, இளநீர் கொடுத்து உபசரித் தோம். அவர் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.


“ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில், பலவும் பி.ஜே.பி-க்குச் சாதக மானவை என்கிற செய்திகள் வருவதால் அந்தத் தரப்பில் கொஞ்சம் உற்சாகம் தெறிக்கிறது. ஆனால், ஏற்கெனவே நாம் பேசிக் கொண்டபடி ‘தனி மெஜாரிட்டிக்கு வாய்ப்பு இல்லை’ என்பதில் இதுவரையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், ‘அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்’ என்கிற ஆலோசனை முன்பைவிட தற்போது பி.ஜே.பி தரப்பில் வேகமெடுத்துள்ளது. ‘எந்த வகையிலும் காங்கிரஸுக்கு வழி விட்டுவிடக் கூடாது. தற்போதைக்கு எதிர்வரிசையில் இருக்கும் மாநிலக் கட்சிகளிடமும் கூட நட்புப் பாராட்டத் தவற வேண்டாம்’ என்றெல்லாம் ரொம்பவே இறங்கிச் செல்லும் அளவுக்குப் பேச ஆரம்பித் துள்ளனர்.’’ 
‘`ஆஹா.’’
“முடிந்தவரை அனைவரையும் இணைத்துக் கூட்டணி ஆட்சி அமைப்பது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். அதற்கும் வாய்ப்பு இருக்காது என்கிற நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் ஸ்டைலில் வெளியிலிருந்து ஆதரவு என்கிற அஸ்திரத்தையும் எடுக்க பி.ஜே.பி தயாராகவே இருக்கிறதாம். அதாவது, மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்தத் தயங்கப் போவதில்லையாம். அந்த வகை யில், பீகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரை ஆதரித்து, பிரதமராக்கும் திட்டமும் பி.ஜே.பி-யிடம் இருக்கிறது. இவரைக் களத்தில் இறக்கிவிட்டால், அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டவர்களும் ஆதரிப்பார்கள் என்று கணக்குப் போடுகிறது பி.ஜே.பி. ஆனால், இது எதற்குமே அமித் ஷா தலையாட்ட வில்லையாம்.’’

‘‘அந்த வாமனரின் கணக்கு என்னவோ?’’
‘‘ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் அவர் உடும்புப்பிடியாக நிற்கிறாராம். ‘மோடியைப் பிரதமர் ஆக்குவது ஒன்றுதான் நமது வேலை. அதற்கான செயல்திட்டங்களை மட்டுமே இப்போதைக்கு நாம் கையில் எடுக்கவேண்டும். அதைப் பற்றி மட்டும் உள்ளேயும் வெளியேயும் பேசுங்கள்’ என்று அமித் ஷா தெளிவாகச் சொல்லிவிட்டாராம்.”
‘`மனிதருக்கு அசாத்திய நம்பிக்கைதான்.’’
‘`வெற்றி உறுதி என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். ‘அப்படியே பாதிப்பு என்றாலும் அந்த நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதே பி.ஜே.பி ஆட்சிக்கு வராது… கூட்டணிதான்… வேறு பிரதமர் என்றெல்லாம் நாமே பேசினால், அது அடுத்தடுத்தக்கட்ட தேர்தல்களில் நமக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். தேவையில்லாமல் நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்ள வேண்டுமா?’ என்பதுதான் அமித் ஷாவின் கேள்வி.’’
‘‘சரி.. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் என்ன நடக்கும்?’’
‘`எதிரெதிர் அணிகள்கூட இணைந்து செயல்படும் அளவுக்கு, தலைகீழாகக் காட்சிகள் மாறக்கூடும்.’’
‘`கொஞ்சம் புரியும்படி சொல்லும்.’’
‘`எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நழுவவிட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் எடப்பாடி. அதற்காகத்தான் முதல் அஸ்திரமாக மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ். இதேவேகத்தில் மற்றொரு காரியத்துக்காகக் கனகச்சிதமாகக் காய் நகர்த்தியும் வருகிறாராம் எடப்பாடி. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டி விரைவில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதற்குத் தமிழகத்தை ஆளும் அரசின் அனுசரணை தேவை. இதைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளப் பார்க்கிறாராம் எடப்பாடி.’’
‘`எப்படி… எப்படி… எப்படி?’’
‘`எதற்கு இத்தனை எப்படி? சசிகலா குடும்பத்தில் உள்ள சிலர் இப்போதும் எடப்பாடியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம். ‘சசிகலா விடுதலைக்கு உதவிசெய்ய வேண்டும்’ என்று அந்தத் தரப்பிலிருந்து கேட்கப்பட்டதற்கு, ‘பதிலுக்கு சசிகலா தனக்கு உதவவேண்டும்’ என்று இந்தத் தரப்பிலிருந்து பதில் சொல்லப்பட்டதாம். இந்த டீலுக்கு சசிகலா தரப்பும் கிட்டத்தட்ட ஓ.கே.’’
‘`இந்த டீல் தினகரனுக்குத் தெரிந்து நடந்ததா?’’
‘‘தினகரன், அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்ததற்கு இதுவும் ஒரு பின்னணிக் காரணம் என்கிறார்கள். ‘எடப்பாடி உதவி செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விடுதலைதான் முதலில் முக்கியம். வெளியேவந்த பிறகு அடுத்தகட்ட நகர்வுகளைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தினகரன் தரப்பிலிருந்துதான் எடுத்துக் கொடுக்கப்பட்டதாம்.’’
‘`சசிகலாவை சமாதானப்படுத்துவதன் மூலமாக அவரிடமிருந்து எடப்பாடிக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?’’
‘`எடப்பாடி முதல்வராக உட்கார்ந்திருந்தாலும், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளில் இருக்கும் பலருக்கும் சசிகலா மீது ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறதாம். எந்த நேரத்தில் யார் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று குழம்பிப் போகிறாராம் எடப்பாடி. கூடவே இருக்கும் சொந்த சாதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களையே முழுமையாக நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். அதனால், சசிகலா மீது மரியாதையோடு இருப்பவர்களைத் தட்டிவைக்க, சசிகலாவின் உதவி தேவைப்படும் என்று நினைக்கிறாராம். அத்துடன், ஜெயலலிதா இருந்தபோது நடந்த பல்வேறு டீலிங்குகள் அப்படி அப்படியே நிற்கின்றன. அவை தொடர் பாகவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள்.’’
‘`ஓ… கதை அப்படிப் போகிறதா?’’
‘`மறுபுறம் ஓ.பி.எஸ் தரப்பு சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்துவருகிறது. ‘ஒரு காலத்தில் அ.தி.மு.க என்பது முக்குலத்தோர் கட்சி என்றே இருந்தது. இப்போது, கவுண்டர் கட்சி என்று மாறிவிட்டது’ எனத் தனக்கு நெருக்கமான முக்குலத்தோர் நிர்வாகிகளிடம் புலம்பிவருகிறாராம் பன்னீர். அதாவது, அ.தி.மு.க-விலிருக்கும் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த  நிர்வாகிகளை சென்ட்டிமென்டாக தன் பின்னால் இழுக்க ஓ.பி.எஸ் முயல்கிறார். இதையும் ஈடுகட்டுவதற்கு சசிகலா தயவு முழுமையாகத் தேவைப்படுகிறது அவருக்கு.’’

‘`பேஷ்… பேஷ்.’’
‘`தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் தவறவிட்டு விடக் கூடாது என்பதில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். ஒன்றிரண்டு எம்.எல்.ஏ-க்கள் குறையும்பட்சத்தில் விலைகொடுத்து வாங்கவும் தயங்கக் கூடாது என்று ‘கிச்சன் கேபினட்’ உற்சாகப்படுத்திக் கொண்டிருக் கிறதாம்.’’
‘`பலே பலே… முதல்வர் வீடு என்கிற அந்தஸ்து சாதாரணமானதா!’’
‘`அ.தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதை ஆளும்தரப்பு தங்களுக்குச் சாதகமானதாகவே பார்க்கிறது. அதாவது, ‘மிரட்டினால் நம் பக்கம் வந்துவிடுவார்கள் என்பதற்காகத் தான் நோட்டீஸ் அனுப்பினோம். எதிர்பார்த்தது போலவே, மூவருமே நாங்கள் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறோம் என்று உறுதிப்படுத்திவிட்டனர். இந்தப் பயம் போதும்’ என்கிறது அ.தி.மு.க தரப்பு. ‘சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நாங்கள் மனு கொடுத்திருப்பதை வைத்தே அந்த மூன்று பேரும் கொடுத்த நோட்டீஸுக்குத் தடை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல், வேறு யாருக்கும் சபாநாயகர் இப்படிப்பட்ட நோட்டீஸை அனுப்ப முடியாது. அப்படியே அனுப்பினாலும் அது செல்லாது’ என்று தி.மு.க தரப்பும் குஷியோடு இருக்கிறது.’’
‘`தலைசுற்றுகிறதே!’’
‘`தடை செய்யப்பட்டிருக்கும் குட்காவை, சட்டமன்றத்துக்குள் கொண்டு வந்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஸ்டாலின் உட்பட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேரையும் நீக்குவதற்கு அ.தி.மு.க தரப்பில் திட்டம் போட்டு வைத்திருந்தனர். ஒரு வேளை இடைத்தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்தாலும், ஆட்சி அமைக்க முடியாத அளவுக்குச் சிக்கலை உண்டாக்குவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலமாக அ.தி.மு.க-வின் எண்ணம் ஈடேறாது என்பதுதான் தி.மு.க-வின் குஷிக்குக் காரணம்’’ என்ற கழுகார்,
‘`சபாநாயகர் தனபாலின் குடும்ப உறவு ஒருவர், மற்றொரு நபரிடம் புலம்பிய சில வில்லங்கமான விஷயங்கள் ஆடியோவாகத் தங்களிடம் சிக்கியிருப்பதாகவும் இதைவைத்து சபாநாய கருக்கு விரைவில் சிக்கல் கொடுக்கப்போவதாகவும் ஒரு செய்தியை தினகரன் தரப்பு கசியவிட்டுக் கொண்டுள்ளது’’ என்று சொல்லி ‘ஜிவ்’ என்று பறந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: