குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன? ஒரு வழிகாட்டுதல்!

தமிழகத்தில் 21 தத்தெடுக்கும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு, அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்குக் குழந்தைகள் இல்லாததே.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது `குழந்தைப் பேறின்மை.’ நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், இதைவைத்துப் பணம் கொழிக்கும் நிறுவனங்கள் என்று இது பெரு வணிகமாக உருவெடுத்துள்ளது. இவற்றில் நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத் தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

 

குழந்தைகளைச் சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது; பாதுகாப்பானது. குழந்தைகளைத் தத்தெடுப்பது எப்படி… என்னென்ன நடைமுறைகள்?

சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே செயல்படுகின்றன, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `மத்திய தத்துவள ஆதாரமையம்’ (CARA), மற்றும் அனைத்து மாநிலங்களும் இயங்கும் ‘மாநில தத்துவள ஆதாரமையம்’ (SARA) ஆகியன. தமிழகத்தில், சமூக நலத்துறையின் ஆணையர் தலைமையில் ‘தத்துவள மையம்’ செயல்படுகிறது.

யாரெல்லாம் தத்தெடுக்கலாம்?

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும்.
0-4 வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4-8 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திருமணமாகாதவர்/தனிநபராக (விவாகரத்து பெற்றவர்) இருக்கும் ஆண், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

தத்தெடுப்பு

குழந்தையைத் தத்தெடுக்கப் பதிவு செய்ய வழிமுறைகள்

தத்தெடுக்க விரும்புபவர்கள் http://www.cara.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, பின்வரும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். பிறப்புச் சான்றிதழ், உடற்தகுதி சான்று, திருமண பத்திரிகை / திருமண பதிவுச்சான்று, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தம்பதியர் புகைப்படம், வருமானச்சான்று, நற்சான்றிதழ் (காவல் துறையிடமிருந்து பெறப்படவேண்டும்)
அதன்பின், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம். பின்வரும் சான்றிதழ்களை ஒப்படைக்கவேண்டும். ஆளரி சான்று (உறவினர்களிடம் பெறப்படும் சான்று), சொத்து மற்றும் சேமிப்புப் பத்திரம், பணிபுரிவதற்கான சான்று, ஆண்டு வருமானச்சான்று, ரேஷன் அட்டை.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறப்புத் தத்தெடுப்பு நிறுவனம், மனிதரின் குடும்ப விவர அறிக்கையை சமூகப் பணியாளர்களின் மூலம் தயார் செய்யும். அதன்பின், அந்தக் குடும்ப உறுப்பினர்களிடமும், பெற்றோர்களிடமும் தனித்தனியாக ரகசியமாக விசாரிக்கப்படும். அத்துடன், தத்தெடுக்கும் குழந்தையை வளர்க்கும் மனநிலை குறித்து அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். குழந்தையின் விவரங்கள் நிறுவனத்தினரால், விண்ணப்பதாரருக்கு (பெற்றோருக்கு) அனுப்பப்படும். தத்தெடுக்கவிருக்கும் பெற்றோர்கள் குழந்தையைத் தேர்வு செய்தபின், சட்ட விதிமுறைப்படி நடவடிக்கையினை சிறப்புத் தத்தெடுக்கும் நிறுவனம் மேற்கொள்ளும். இறுதியாக நீதிமன்ற ஆணை பெற்று குழந்தையைத் தத்தெடுத்த பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

குழந்தை தத்தெடுப்பு

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசனிடம் இதுகுறித்துப் பேசினேன்.

“தமிழகத்தில் 21 தத்தெடுக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்குக் குழந்தைகள் இல்லாததே. தத்தெடுக்க விரும்புபவர்களும், அழகான, ஆரோக்கியமான குழந்தைகளையே தத்தெடுக்கவே விரும்புகின்றனர். முன்பெல்லாம் வளர்க்க முடியாத குழந்தைகளைக் காப்பகங்களில் கொண்டுவந்து விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படிப்பட்ட பெற்றோர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் குழந்தையை வாங்கி விற்கின்றனர். இதனால் காப்பகங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. இப்படிக் குழந்தையை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என்பது தெரியாமலே பலர் இதைச் செய்து வருகின்றனர். குழந்தையை விற்பது மட்டுமல்ல, குழந்தையை வாங்குவதும் குற்றமாகும். அவர்களுக்கு அதிகபட்சமாக அபராதத்துடன் ஐந்து வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தைகளை தத்துக்கொடுப்பதில் எங்களுக்குப் பெற்றோர்களின் நலனை விட, குழந்தைகளின் நலன்களே மிகமுக்கியம்” என்றார்.

இதுகுறித்து கிறிஸ்டாஸ் திட்டப்பணி மேலாளர் ஒருவரிடம் பேசியபோது, “தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் இருப்பவர்கள் எந்த மாநிலத்திலிருந்தும் தத்து எடுத்துக்கொள்ளலாம். இதில் பதிவு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். எனவே காத்திருப்போர் பட்டியலின்படிதான் செயல்பாடு நடக்கும். இதுவே காலதாமதத்திற்கு முக்கிய காரணம்.” என்று தெரிவித்தார். 

 
%d bloggers like this: