கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்!

வீட்டு உபயோகப் பொருள்களுக்கான இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் என நம்மில் பலரது வாழ்க்கை கடன்களாலேயே நிரம்பி இருக்கிறது. 

சம்பாதிப்பதில் பாதி வாங்கிய கடன்களுக்கு அசலும் வட்டியும் கட்டவே சரியாகப் போய்விடுகிறது. பிறகு, எதிர்காலத்துக்கு எப்படிச் சேமிக்க முடியும்; எதிர்காலத் தேவைகளை எப்படிக் குறையில்லாமல் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்?
நமது உடல்நிலை சரியில்லாதபோது, நம் உடம்பு அலாரம் அடித்துச் சொல்கிறமாதிரி, கடன்களால் நம் வாழ்க்கை சூழப்படும்போதும் சிலபல சிக்னல்களைத் தரும். அதைக் கவனித்து,  சுதாரித்துச் செயல்பட்டால், கடன் சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கலாம். அந்த சிக்னல்கள் என்னென்ன?
சிக்னல் 1: 50 சதவிகித்துக்குமேல் இ.எம்.ஐ கட்டுவது


ஒருவருடைய சம்பாத்தியத்தில் 30 சதவிகிதத்துக்கு மட்டுமே கடன்களுக்கான    இ.எம்.ஐ கட்டுவதற்கு ஒதுக்க வேண்டும் என்பது நிதித் திட்டமிடலின் முக்கியமான விதிமுறை. ஆனால், இன்று அந்த விதிமுறையை மீறித்தான் பெரும்பாலானவர்கள் செயல்படுகிறார்கள்.
இன்று எல்லாமே இ.எம்.ஐ-களில் வாங்க முடியும் என்பதால், பணத்தைச் சேமித்தோ அல்லது கையில் காசு இருக்கும்போதோ வாங்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. நுகர்வோர்களைக் கவர்ந்திழுக்க ஆன்லைன் சலுகைகள் நிறையவே விளம்பரப்படுத்தப் படுகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ, சலுகை விலையில் கிடைப்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நம்மில் பலர் அந்தத் தூண்டிலில் சிக்கிவிடுகிறோம். 

கடனுக்கான இ.எம்.ஐ எப்போது 30 சதவிகிதத்தைத் தாண்டுகிறதோ, அதை உடனே கவனித்து கடன் வாங்குவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை கடன்களை அதிகப்படுத்தாமல், சேமிப்பின் மூலம் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வது நல்லது.

சிக்னல் 2: கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுப்பது

டெபிட் கார்டினைப் பயன்படுத்தி ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதுபோல, கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுக்கும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. ஒருவரிடம் நிதி ஒழுங்கு இருக்கும் பட்சத்தில், சில பொருள்களை கிரெடிட் கார்டுமூலம் வாங்குவதில் தவறில்லை. ஆனால், கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுப்பது மகா தவறு. இது நமது கடன் சுமையைக் கணிசமாக அதிகரிக்குமே தவிர குறைக்காது.
அதுமட்டுமல்லாமல், கிரெடிட் கார்டுமூலம் பொருள்களை வாங்கும்போது விதிக்கப்படும் வட்டியைவிட, பணம் எடுக்கும் போது பணத்திற்கு விதிக்கப்படும் வட்டி அதிகம். ஏறக்குறைய 36% வரை நீங்கள் வட்டி கட்ட வேண்டும் என்பதால், முடிந்தவரை கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்காமல் இருப்பதே நீங்கள் நிம்மதியாக இருப்பதற்கு ஒரே வழி.
சிக்னல் 3: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் கடன் வாங்குவது
நம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு வாடகை, மளிகை செலவுகள், பால், பேப்பர் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பல அத்தியாவசிய தேவைகள் இருக்கும். இதை வருமானத்திலிருந்து தான் பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமே தவிர, ஒருபோதும் கடன் வாங்கி வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடாது.
வீட்டுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைக்கூட கடன் வாங்கித் தான் வாங்கவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒன்று, உங்கள் வருமானம் குறைவாக இருக்க வேண்டும் அல்லது நிதி ஒழுங்குகள் ஏதுமில்லாததால், எடுத்தற்கெல்லாம் கடன் வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த இரண்டுமே உடனே கவனித்துக் களையப்பட வேண்டியவை. தேவைகள் என்பது ஒவ்வொரு மாதமும் இருந்துகொண்டேதான் இருக்கும். நெருக்கடியைச் சமாளிக்க தொடர்ந்து கடன் வாங்குவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டால், உங்கள் வாழ்க்கையே சிக்கலாகிவிடும். 
சிக்னல் 4: செலவினங்கள் அதிகமாக வைத்திருப்பது
ஒருவருடைய மொத்த வருமானத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் அத்தியாவசிய செலவுகள் இருக்கக்கூடாது. ஆனால், இன்று வருமானத்துக்கு மீறி செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் கேட்டு நிற்பவர்கள்தான் அதிகம். செலவுகள் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்குக் கடன் பிரச்னைகளும் அதிகம் இருக்கும்.
வீட்டின் அத்தியாவசிய செலவுகளில் யாராலும் கைவைக்கவே முடியாது. அதனால் ஷாப்பிங் மற்றும் இதர அநாவசியச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சுற்றுலா செல்வது, பார்த்ததையெல்லாம் வாங்குவது என்று நீங்கள் செலவு செய்பவராக இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.

சிக்னல் 5: எதிர்கால வருமானத்தைக் காரணம் காட்டி கடன் வாங்குவது!

மார்க்கெட்டில் கூவிக்கூவி காய்கறிகளை விற்பதுபோல, சில வங்கிகளில் கடன் கொடுக்கும் அணுகுமுறை முற்றிலுமாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன்களை வாடிக்கையாளர்களுக்குத் தேடிவந்து தருகின்றன வங்கிகள். எதிர்கால வருமானத்தைக் குறிப்பிட்டு நிறைய வங்கிகள் அதிக கடன் தொகையை தாராளமாகத் தந்துவருகின்றன.
கடன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கும் வாடிக்கையாளர்களும், ‘வருகிற லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்’ என நினைத்து, கூடுதல் தொகையைக் கடனாகப் பெறுகிறார்கள். கடன் வாங்குவதிலும் சரி, கடன் வழங்குவதிலும் சரி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.
எதிர்கால வருமானத்தைக் காரணம் காட்டி கடன் வாங்குவது, எக்ஸ்ட்ரா ஆபத்துகளுக்கே வழிவகுக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், கடன் பிரச்னையில் நாம் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம்!

%d bloggers like this: