செக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி

செக்யூலரிசம் பேசுகிறவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கு தலைமைப் பதவியை வழங்குவார்களா? என இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி விடுத்தார். காங்கிரஸ் தலைமைப் பதவி, ஒரு இஸ்லாமியருக்கு கிடைப்பதை ராகுல் உறுதி செய்வாரா? என்றும் நேரடியாக கேள்வி விடுத்தார்.

பிரதமர் மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஹரியானா மாநிலம் ரோடாக்கிற்கு தேர்தல் பிரசாரம் புறப்படும் முன் நமது நிருபர்கள் தொடுத்த கேள்விக்கணைகளுக்கு பிரதமர் மோடி அளித்த பதில்கள் இதோ…

2018, டிசம்பர் 11ம் தேதி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தீர்கள். இன்று 2019 மே 11. 200க்கும் மேற்பட்ட தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். இதன்மூலம் என்ன அறிந்து கொண்டீர்கள்?

மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் (பா.ஜ.,) ஆட்சியில் இருந்தோம். அந்நிய சக்திகளின் கைங்கர்யத்தால், அங்கு நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை அரசை அமைக்க இயலவில்லை. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை காட்டிலும் நாங்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். நாங்கள் தோல்வி அடையவில்லை. அதிக பொருட்செலவு செய்து அவர்கள் வெற்றியை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

Rahul Gandhi Vs Narendra Modi, 2019 Election, No Confidence Motion

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களை மக்களுக்கு உடனடியாக தெரிவிப்பதில் தங்கள் நாளிதழ் முன்னணியில் உள்ளது. வாழ்த்துக்கள். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி உங்கள் நாளிதழில் முக்கியத்துவம் பெறவில்லை. காங்கிரஸ் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச சட்டசபை தோல்வியை தொடர்ந்து பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, பிரதமர்- விவசாயிகள் திட்டம், அமைப்புசாரா நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் விவகாரத்தில் 5 லட்சம் வரை வருமானவரி விலக்கு உள்ளிட்ட இத்திட்டங்களை கொண்டுவர காரணமென்ன?

தேவையில்லாமல், கண்டதை மற்றவற்றுடன் இணைத்து பேச வேண்டாம். எங்களை குறை கூறுவதற்கு முன், அதுதொடர்பான தகவல்களை எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுள்ளீர்களா என்பதை முதலில் தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். இதுதான் உங்கள் பிரச்னையே. தீர்வு மற்றும் தெளிவு வேண்டுமாயின், எங்கள் அரசின் 2 ஆண்டுகால கோப்புகளை ஆராயுங்கள்.

மராத்தா, ஜாவ், குஜ்ஜார். பட்டிதார் போராட்டங்களின் பின்புலங்களை ஆராயுங்கள். உண்மை என்னவென்று தங்களுக்கு புரியும்.

இதுதவிர மற்ற சமூக போராட்டங்களும் நடைபெற்றனவே?

நான் அந்த 3 சமூகத்தை மட்டும் குறிப்பிடவில்லை. நாட்டில் அசாதாரண நிலையை நிலவச் செய்ய, இங்குள்ள என் ஜி ஓக்கள், சர்வதேச நிதி பங்களிப்புடன் போராட்டங்களை நடத்திவருகின்றன.

கட்சியில் உங்களை விட சிறந்தவர் இல்லை என்ற தோற்றம் இருப்பதாக தெரிகிறதே?

என்னுடைய செயல்பாடுகளில் நான் முழு அர்ப்பணிப்பை காட்டி வருகிறேன். நான் இலகுவாக எண்ணும்போது, என்னை சார்ந்தவர்களும் அவ்வாறே இருக்க ஆசைப்படுகிறேன்.

கேபினட் மீட்டிங் அல்லது கட்சி கூட்டங்களில் உங்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்குமாமே?

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது என்னுடன் 8 முதல் 9 எம்எல்ஏக்கள் என்கூடவே இருப்பர். அவர்கள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பர். செவ்வாய்க்கிழமை எம்எல்ஏக்கள் தினம் என்பதை கடைபிடித்தேன். இதில் இந்நாள் மட்டுமல்லாது முன்னாள் எம்எல்ஏ/ எம்பிக்களோடும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கலந்தாலோசிப்பேன். அமைச்சர்களை சந்திக்கும் இந்த எம்எல்ஏக்கள், கள நிலவரத்தை கேட்டுப்பெறுவர்.
புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் 45 நிமிடங்கள் கால அளவில் ஜீரோ ஹவர் நடைபெறும். செவ்வாய்கிழமை அவர்கள் பெற்ற பீட்பேக் குறித்து இதில் விவாதிக்கப்படும். அதில் நானும் கலந்துகொள்வேன்.

முதல் 15 நிமிடங்களில் நாம் எதற்காக கூடியிருக்கிறோம் என்பது குறித்த சுருக்கமாக பேசிவிடுவேன். பின்னர் தான் அவர்கள் பீட்பேக்குகளை ஆராய்ந்து அதற்கு தகுந்த விளக்கமளிப்பேன். இதில் யாருக்காவது வேறுபாடு இருப்பின் அதுகுறித்த விவாதம் நடைபெறும். எனது குழுவில் உள்ள கற்றறிந்த சான்றோர்கள் தீர்வு காண்பதில் எனக்கு உறுதுணையாக இருப்பர்.

அதேபால், சட்டசபை கேள்வி நேரங்களிலும், எதிர்க்கட்சிகள் என் அரசு மீது புகார் அளிப்பர். ஊடகங்களுக்கு பேட்டியளிப்பர். நிர்வாகத்திறனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகாரளிப்பர். அசாதாரண நிலை ஏற்படுத்த முயல்வர். நான் அவர்களுடன் கலந்துபேசி அவர்களுக்கு தேவையான தகவல்களை கூறி, அவர்களுக்கு உண்மையை விளக்கிக்கூறி நிலைமையை எடுத்துரைப்பேன்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சரவை கூட்டம் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால், என்னுடைய அமைச்சரவை கூட்டம் சராசரியாக 3 மணிநேரம் நடைபெறும். ஏன் இவ்வளவு நேரம் என்று நீங்கள் கேட்கலாம். என் அமைச்சரவை சகாக்கள் அனைவரையும் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து, அவர்கள் தரப்பு நியாயங்கள் மற்றும் விவாதங்களை கேட்பேன். அப்போதுதான் ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நான் திடமாக உள்ளேன்.

எங்களுக்கு அதுபோன்றதொரு செய்திகள் கிடைப்பதில்லையே..!

அது உங்கள் விவகாரம் அதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஜனநாயகத்திற்கு எதிரானவன் அல்ல. அரசை பற்றிய சிந்தனை மற்றும் கருத்துகள் அதேபோல் மக்களுக்கு ஊடகங்கள் மீதான கருத்துகள் மற்றும் சிந்தனைகள் வெளிப்படைத்தன்மையாக இருக்கவேண்டும் என்பதை விரும்புபவன் நான்.

உங்கள் அரசு 282 சீட்டுகளை பெற முடியாது போலிருக்கிறதே? அமித்ஷாவிடம் இதே கேள்வியை கேட்டுள்ளோம்.

உங்களுடைய இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஒன்று அல்லது இரண்டு அம்சங்களை மட்டும் கொண்டு எந்தவொரு அரசையும் அடையாளப்படுத்தக்கூடாது. நான் பன்முகத்தன்மையுடன் கூடிய வலுவானதொரு கட்டமைப்புடன் கூடிய நாட்டை உருவாக்க விரும்புகிறேன். நாட்டின் தூய்மை பாரம்பரிய சொத்து என்று சொன்னபோது நான் நாடுமுழுவதும் அதிகளவிலான கழிப்பறை வசதிகளை துவங்கியிருந்தேன். சுகாதாரம் குறித்து அவர்கள் கூறமுற்பட்டபோதே, இந்த அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தது தாங்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

வாஜ்பாய் ஆட்சியை போன்றே நாங்களும் பல அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். சர்வதேச அளவில் வேகமாக பொருளாதாரத்தில் வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம். கட்டமைப்பு துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளோம். சாலை மற்றும் நெடுஞ்சாலை வசதிகளை இரட்டிப்பாக்கியுள்ளோம்.

வாஜ்பாய் அரசை, எதிர்க்கட்சிகள் பாதுகாப்புத்துறையில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியபோது அது தவறானது என்று எடுத்துரைத்தோம். தற்போது எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபித்து வருகிறோம்.
காங்கிரஸ் கட்சி மற்றும் மற்ற நண்பர்கள், தற்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதாக கூறிவருகிறார்கள். அவர்கள் ஒன்றை எளிதாக மறந்துவிட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 10 ஆண்டுகளில் அளித்த வேலைவாய்ப்புகளை, வாஜ்பாய் அரசு, ஒரே பதவிக்காலத்திலேயே வழங்கியுள்ளது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை கொண்டுவந்ததாக பெருமிதம் கொள்கிறார்கள். குஜராத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திடம் செயல்பாட்டில் இருப்பதை அவர்கள் மறந்தும் மறைத்தும் விட்டார்கள். இந்தியாவை, முன்மாதிரி நாடு ஆக்க எனது தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.’

தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினரை தொடர்ந்து தாக்கி பேசிவருகிறீர்களே?

சரியான கேள்வி. ஆனால், ஒரு முக்கியமான அம்சத்தை மறந்து விட்டீர்கள். நான் (பிரதமர்) மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் விடுமுறையை கழிக்க சுற்றுப்பயணம் செல்வதில்லை. அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நீர் சம்பந்தமான கருத்தரங்கு என்றால், அது தொடர்பாகவும், மின்சக்தி தொடர்பான நிகழ்ச்சியில் அதுதொடர்பாக தான் பேசமுடியும். நான் ஆட்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தவிர்த்து வேறு எதையும் பொது இடங்களில் பேசுவதில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்களில், எதிர்க்கட்சிகள் கூறும் பொய்யான தகவலுக்கு தான் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கிறேனே தவிர, அவர்களை தாக்கி பேசுவதில்லை. உதாரணமாக, தற்போது ஐஎன்எஸ் விராட் குறித்த விவாதம் ஏன் வந்தது என்பதை தாங்கள் யோசிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நாட்டின் ராணுவம் ஒன்றும் பிரதமர் மோடியின் சொத்து அல்ல என்று கூறியுள்ளார். இதுபோன்ற தேவையில்லாத விவாதத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. ராஜிவ் காந்தி குறித்த நற்கருத்துகளை ராகுல் கூறினால், அது அவரின் கட்சிக்கு வலுசேர்க்கும். ஒரு விவாதம் துவங்கிவிட்டால், அது எப்போது முடியும் என்பதை ஒருபோதும் யாராலும் கணிக்க இயலாது. என்னுடைய நல்ல இமேஜை ராகுல் உள்ளிட்ட சிலர் கெடுக்க முயல்கின்றனர். அவர்களின் கனவு ஒருநாளும் பலிக்காது.

காங்கிரஸ் மட்டுமல்லாது, மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடுவும் தங்களை தொடர்ந்து தாக்கி பேசி வருகின்றனரே? தேர்தலுக்கு பிறகு, இவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?

நான் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒரு சிலர் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். சிலர் ஏற்க மறுக்கின்றனர். பார்லிமென்ட் நிகழ்வுகளின் போது நான் தினமும் சராசரியாக 40 முதல் 45 எம்.பி.க்களை சந்தித்து பேசி வருகிறேன். ஜனநாயகத்தில் உரையாடல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

ஃபனி புயலின் போது உடனடியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை உடனடியாக தொடர்பு கொண்டேன். பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்றதால், தேர்தல் பிரசாரம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும்போதும், அங்கு இயற்கை பேரிடர் நிகழ்ந்தபோது, 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, அங்கு நிலவும் சூழல் குறித்து விசாரித்த வண்ணம் இருந்தேன். உயர்மட்ட டாக்டர்களிடம், ஆலோசனை நடத்தி, மக்களுக்கு நிவாரணம் குறித்து விவாதித்தேன். இதுதான் உண்மை.

எதிர்க்கட்சிகளுடனான தங்களது போட்டோக்களில், எதிலும் தாங்கள் இன்முகமாக இருப்பதில்லையே? ஏன்.

நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்; அதையையே விரும்புபவன். என் தலைமையிலான கேபினட் கூட்டங்களில் எல்லாம் எப்போதும் சந்தோஷமான சூழ்நிலையே தவழும்.எதிர்க்கட்சிகள் இதிலும் அரசியல் சாயம் பூசிவருகின்றனர்.’ என்ற பிரதமர் மோடி, தனது பேட்டியில் மேலும் கூறியதாவது…

‘டீமானிடைசேஷன் திட்டம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று ஒருபோதும் தான் கூறியது கிடையாது. கறுப்புபணத்தை பதுக்கியுள்ளவர்களை கண்டறியும் நடவடிக்கையாகவே நாங்கள் டீமானிடைசேஷன் திட்டத்தை கருதுகிறோம். இதனை நாங்கள் ஒழுங்குபடுத்தும் காரணியாகவே உணர்கிறோம். வரி ஏய்ப்பை தடுத்தல், டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் மூலம் சிறந்த பொருளாதார நிலையை ஏற்படுத்துதல் . 2013-14ம் நிதியாண்டில் 3.8 கோடிகளாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2017-18ம் நிதியாண்டில் 6.8 கோடிகளாக அதிகரித்துள்ளது. இது 80 சதவீதம் அதிகம் ஆகும்.

இஸ்லாமியர்கள் பா.ஜ. ஆட்சிக்காலத்தில் பய உணர்வுடன் இருப்பதாக சொல்வதெல்லாம், ஓட்டுவங்கி அரசியல் நடத்துபவர்கள் கூறும் கட்டுக்கதை. மதசார்பற்ற ஆட்சியை வழங்குவதாக சொல்பவர்கள் ஏன் தலைமைப்பதவிகளை சிறுபான்மையின மக்களுக்கு வழங்குவதில்லை.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர். அந்தப் பதவியை ஒரு முஸ்லிம் வகிக்க ஏன் முடியவில்லை? அவர் ஏன் அதை உறுதி செய்யவில்லை? அப்துல் கலாமை 2-வது முறை ஜனாதிபதி ஆக்க நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். அவரிடம் என்ன தவறு இருந்தது? அவருக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்க நாங்கள் நினைத்தும், அது நடக்கவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளை பொறுத்து, இந்திய-பாகிஸ்தான் உறவில் மாற்றங்களை பேணி வருகிறோம்’ என்று பிரதமர் மோடி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More: பேட்டியை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க PM Narendra Modi Interview to Indian Express

இன்னும் பல கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்திருக்கிறார்.

%d bloggers like this: